தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (3) - வ.ந.கிரிதரன்-
அத்தியாயம் மூன்று: புதிய உலக ஒழுங்கும், கணியன் பூங்குன்றனாரின் 'யாதும் ஊரே! யாவரும் கேளிர்' சிந்தனையும்!
அன்று முழுவதும் கட்டடக்காட்டில் அலைந்து திரிந்ததுதான் மிச்சம். அலைதலுடன் அன்று காலை அவன் மார்க்குடன் நடத்திய உரையாடலும் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்துகொண்டிருந்தது. அன்பின் ஆதிக்கமே உயிரினங்களுக்கு மத்தியில் காணப்படும் படைப்பின் இயல்பென்றால் அதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியாதிருந்தது. ஏன்? ஏன் இவ்விதம் இந்த உலகு படைக்கப்பட்டுள்ளது. இது இவ்விதம் உருவாகக் காரணமென்ன? இதுவரை காலமும் இன்பமளித்துக்கொண்டிருந்த இயற்கையெழிலும், பல்வகை உயிரினங்களும் இப்போது அவனுக்கு முன்புபோல் இன்பத்தைத்தரவில்லை. இயற்கையின் எழிலுக்குப் பின் மறைந்து கிடக்கும் துயரமும், பாசச் சுமையினால் வாடும் உயிரினங்களும் அவனது மனத்தை வாட்டியெடுத்தன. ஏன்? ஏன்? ஏன்? படைப்பின் மாபெரும் கறையாக இந்த துயரைச் சுமந்திருக்கும் அன்பின் ஆதிக்கம் அவனுக்கு இப்போது தென்பட்டது.
மாதவன் இருபத்தி நான்கு வயது இளைஞன். நாட்டின் யுத்தச் சூழல் முடிவுக்கு வந்தபோது அவனுக்கு வயது ஒன்பது. அவன் யுத்தத்துக்குள் அகப்பட்டிருக்கவில்லை. யாழ் மாவட்டத்தின் ஒரு கோடியில் பாதுகாப்பான சூழலிலிருந்தான். ஆனால் அவனை யுத்தக்களச் செய்திகள் மிகவும் பாதித்தன. ஆயிரக்கணக்கில் மனிதர்கள் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், போராளிகள், படையினர் எனக்கொல்லப்பட்டபோது அவன் நினைப்பான் எதற்காக மனிதர்கள் இவ்விதம் இரத்த வெறி பிடித்து அலைகின்றார்கள். இன்று காசாவில் அதே இரத்தவெறியால் இரத்த ஆறு பெருகுகின்றது. உலகமே உடனடியாகத் தடுத்து நிறுத்தாமல் நிற்கின்றது. உலகப்பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்று தோன்றியது. வல்லரசுகள் தம் நலன்களை மையமாக வைத்துச் செயற்படுவதனால் ஏற்பட்டுள்ள நிலையே இவ்விதமாக இரத்த ஆறுகள் பெருகுவதற்கு மூல காரணமென்று கருதினான்.
தற்போது நிலவும் உலக ஒழுங்கு , வல்லரசுகளுக்கிடையில் மோதல்கள் காரணமாகப் பாரபட்சமானது என்று கருதினான். எப்பொழுதும் பாதிக்கப்படுபவை வறிய ,வலிமை குன்றிய நாடுகளே என்றும் கருதினான். வலிமையான நாடுகள் தமக்கிடையிலான மோதல்களுக்கு வலிமை குன்றிய, வறிய நாடுகளைப் பலிக்கடாக்களாக்குகின்றன. உலகம் முழுவதும் வர்க்க வேறுபாடுகளற்று ஒன்றிணைந்தால் தவிர இந்நிலைக்கு ஒரு போதும் தீர்வு ஏற்படப் போவதில்லை. இவ்விதமான சிந்தனைகள் எப்பொழுதும் அவனது இளம் மனத்தில் உதித்துக்கொண்டேயிருந்தன.