- முனைவர் வா. காருண்யா, தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் - 641 042 & முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி , தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் - 641 042, -
ஆய்வுச்சுருக்கம்
விக்கிமூலம் எனும் திட்டத்தை 72 மொழிகள் பயன்படுத்திக்கொண்டு வருகின்றன. அவற்றுள் தமிழ் விக்கிமூலம் என்பது விக்கிமீடியா அறக்கட்டளைத் திட்டங்களுள் ஓர் இணைய நூலகத் திட்டமாகும். இது பகிர்வுரிமம் கொண்ட மூல நூல்களின் இணையத் தொகுப்பாக விளங்கி வருகின்றது. இந்தத் திட்டத்தில் பங்களிக்க, யார் வேண்டும் என்றாலும் இணையலாம். அவர்கள் தங்கள் விருப்பப்படி நூல்களைப் பதிவேற்றலாம், திருத்தலாம். அதன் மேம்பாடு குறித்தும் கருத்துத் தெரிவிக்கலாம். இந்தத் தமிழ் விக்கிமூலத் திட்டத்தில் தமிழ் மொழிக்குரிய நூல்கள் மொத்தம் 2468 மேல் உள்ளன. இந்த நூல்களின் மொத்தப் பக்கங்கள் 3.5 இலக்கத்திற்கும் மேல் உள்ளன. இதில் சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், நாட்டுப்புற இலக்கியம், வரலாறு, அறிவியல், மொழியியல், கலை, இலக்கணம், பயணம், வாழ்க்கை வரலாறு போன்ற பல்வேறு வகையான நூல்கள் உள்ளன. பழந்தமிழ் இலக்கியம் என்றழைக்கப்பெறும் தமிழின் தொன்மை இலக்கியங்களின் தரவாக்கங்களை விரல்விட்டு எண்ணிடலாம். அவற்றுள் நற்றிணை தொடர்பான நூல்கள் அல்லது மூலநூல் தரவுகள் வெறும் ஒன்று மட்டுமே உள்ளது கவனத்திற்குரியது. அந்தத் தரவு எதிலிருந்து எடுக்கப்பெற்ற மூலம் என்று அறிய முடியவில்லை. இருப்பினும் நற்றிணை சார்ந்த நூல்கள் இவ்வளவுதான் உள்ளனவா என்ற கேள்வியும் கூடவே எழும். அதற்கு என்ன பதில் தரப்போகின்றோம். அதன் மேம்பாடு குறித்து எண்ண வேண்டாமா? இந்த ஆய்வின் மூலம் விக்கிமூலத்தில் இடம்பெறக்கூடிய தன்மையுடைய கட்டற்ற உரிம நூல்களையாவது அடையாளம் கண்டு இணைக்கவேண்டியது காலத்தின் தேவையல்லவா? தன்னார்வலர்களின் கடமையல்லவா? அதை இந்த ஆய்வின் மூலம் எடுத்துரைக்கப்பெறும். அதற்கு அச்சுநிலைகளிலும் இன்னும் பிற நிலைகளிலும் உள்ள தரவுகளை ஓரளவிற்காகவாவது திரட்டிக் காட்டும் பொழுது அல்லது அடையாளப்படுத்திக் காட்டும் பொழுது இவ்வளவு விடுபாடு இந்த நூலிற்கு உள்ளமையை உணர வைக்கமுடியும். இதுபோன்ற ஆய்வுளால்தான் செய்யறிவிற்குத் தேவையான மொழிசார் தரவுகளைத் திரட்டித் தந்து மொழியறிவை மேம்படுத்தலாம். அந்தத் திரட்டல் செய்யறிவுத் தொழில்நுட்பத்திற்கோ இயற்கைமொழி ஆய்விற்கோ பயன்படும் தரவு உருவாக்கமாக மலரும். அது குறித்த புரிதலை இதன் மூலம் பெற இயலும். ஆகவே, விக்கிமூலத்தில் விடுபட்டுள்ள நற்றிணை சார்ந்த நூல்களின் பட்டியலைத் தமிழ் விக்கிமூலத்தில் இணைப்பது குறித்தும் அதன் தேவை குறித்தும் இவ்வாய்வுரை முன்வைக்கின்றது.