பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி - 2022! - குரு அரவிந்தன் -
குளிர்கால ஒலிம்பிக் போட்டி போல இது தோன்றினாலும் அரசியல் பின்னணி இருப்பதை அவதானிக்க முடிகின்றது. சீனாவின் தற்காலிக நட்பு நாடுகள் இதில் கலந்து சிறப்பிப்பதையும், மனித உரிமை மீறல்களைக் காரணம் காட்டிச் சில நாடுகள் இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் முதல் நாள் நிகழ்வைப் பகிஷ்கரித்து இருப்பதையும் பார்க்க முடிகின்றது. நாடுகள் குழுக்களாகப் பிரிந்திருப்பதை இது தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி இம்முறை சீனாவில் நடைபெறுகின்றது. கொரோனா – 19 பரவல் காரணமாக உலகம் ஒருபுறம் உறைந்து போயிருக்க, மறுபுறம் உறைபனியில் இடம் பெறும் விளையாட்டுக்களுக்கான ஒலிம்பிக் போட்டிகள் சீனாவில் ஆரம்பமாகி விட்டது. பனிப்பிரதேசங்களில் உள்ள நாடுகளே அனேகமாக இப்போட்டியில் கலந்து கொள்கின்றன. 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி 24 வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி சீனாவின் பீஜிங்கில் உள்ள தேசிய விளையாட்டரங்கில் சீன அதிபர் ஜின்பிங்கினால் உத்தியோக பூர்வமாக தொடக்கி வைக்கப்பட்டது. இம்மாதம் 20 ஆம் திகதிவரை இப்போட்டிகள் தொடர்ந்து நடைபெறும். 20 ஆம் திகதி இறுதிநாள் கொண்டாட்டம் நடைபெறும். பீஜிங்கில் 2 ஆம் திகதியே சில போட்டிகள் ஆரம்பமாகி இருந்தன. இரண்டாவது தடவையாக ஒலிம்பிக் போட்டி பீஜிங்கில் நடைபெறுகின்றது. 2008 ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக் போட்டி இங்கேதான் நடைபெற்றது. இந்த வகையில் இரண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்திய முதலாவது தலைநகரமாக பீஜிங் சாதனை படைத்திருக்கின்றது. 2026 ஆம் ஆண்டு அடுத்த குளிர்கால ஒலிம்பிக் இத்தாலியில் உள்ள மிலான் நகரத்தில் நடக்க இருக்கின்றது.