தொடர் நாவல் : ஒரு கல் கரைந்தபோது! (2) - ஸ்ரீராம் விக்னேஷ் ( நெல்லை வீரவநல்லூர்) -
அத்தியாயம் இரண்டு!
அம்மாவின் இடதுபுறத்தே நின்று தாங்கிக்கொண்டவர் வேறு யாருமல்ல. அத்தான்தான்.
அம்மா கேட்டாக….,
“இம்புட்டு நேரமும் நீங்களும் இங்கைதான் இருந்தீங்களா மாப்பிள்ளை….”
சமையல்காரப் பையன் குறுக்கிட்டான்.
“வேற யாருண்ணு நெனைச்சீங்கம்மா….. சின்னம்மா நிக்கிறவரைக்கும் மூச்சே காட்டாம இருந்துபுட்டு, அவுங்க கீழ எறங்கிப் போனப்புறம் திடீர்ன்னு வர்ரதாயிருந்தா அது நம்ம சின்னையாவாகத்தானே இருக்க முடியும்….. நான் சொல்ரது கரட்தானே சின்னையா…..”
அத்தானைப் பார்த்துத்தான் கேட்கின்றான் என்பது புரிந்தது.
கவலையின் மத்தியிலும் சிரிப்பு வந்தது.
அத்தானோ எதுவுமே பேசாமல் தலையைக் குனிந்தபடி கீழே இறங்கினார்.
அக்கா இல்லாத நேரங்களில், சிலவேளை கலகலப்பாகப் பேசுவதைக்கூட அத்தானிடம் காணலாம். ஆனால் அவளுக்கு முன்னால் மட்டும்……. சரி சரி அதுபற்றிப் பேசுவது வீண்.
மும்தாஜுக்காக தாஜ்மஹாலைக் கட்டிய ஷாஜகான், இறுதியிலே தன் மகன் அவுரங்கசீப்பினால் சிறை வைக்கப்பட்டபோது, சிறையின் யன்னல் கம்பிகளினூடே தாஜ்மஹாலின் ஒரு புறத்தை மட்டும் பார்த்துப் பெருமூச்சும், கண்ணீரும் விட்டுக்கொண்ட கதைபோல எனது நிலையும் இருந்தது.
வீட்டின் கொல்லைப்புறத்தில்தான், பின்புற மதிலின் கேற்றும், கார் ஷெட்டும் இருந்தன. தகரத்தால் மூடிமறைக்கப்பட்டிருந்த ஷெட் கூரைப்புறம் முழுமையாகத் தெரிந்தது.
தூரத்திலே தெரியும் பொதிகை மலையிலிருந்து, தமிழ்நதி தாமிரபரணியின் குளிரைக் கலந்துவரும் தென்றல்கூடத் தீயாகச் சுட்டது.
கண்களில் நீர்த் திவலைகள் திரண்டு, காட்சிகளெல்லாம் “அவுட்-ஆப்-போக்கஸ்” ஆக, உள்ளமோ எனது பால்யகால “பிளாஸ் பேக்” கை, “நெகடிவ் மூவி ஃபிகராக” பிளே பண்ணியது.