[ நல்லதொரு கட்டுரை. தற்போது நடைபெறும் ருஷ்யா & உக்ரைன் மோதலைப் புரிந்துகொள்ள உதவும் கட்டுரை. உக்ரைன் தன் பூகோள கேந்திர முக்கியத்துவத்தைக் கவனத்தில் எடுக்காது பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதும், நேட்டோ நாடுகள் வார்சோ நாடுகளின்கூட்டணி கலைக்கப்பட்ட பின்னரும் ருஷ்யாவுக்கெதிரான விஸ்தரிப்பினை அதிகரித்து வந்ததும் இம்மோதலுக்கு முக்கிய காரணங்கள். போருக்கான காரணங்கள் எவையாயிருப்பினும் பாதிக்கப்படுவது உக்ரைன் நாட்டு அப்பாவி மக்களும், உக்ரைன், ருஷ்யாப் போர்வீரர்களும்தாம். விரைவில் யுத்தம் முடிவுக்கு வரட்டும். உக்ரைன் நடுநிலை நாடாக இருப்பது இம்மோதலை முடிவுக்குக் கொண்டு வரும். - பதிவுகள்.காம்]
யுத்தம் எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாதது. யுத்தம் என்பது சண்டை மட்டுமல்ல. பெரும் உயிரழிவுகளையும் அங்கவீனமுறும் மக்கள் கூட்டத்தையும் உளவியல் பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. அத்தோடு, அது பொருளாதார அழிவுகளை ஏற்படுத்துகிறது. பண்பாடுகளை அதன் விழுமியங்களை மரபுகளை சிதைத்துவிடுகிறது. இயற்கை வளங்களை அழிக்கிறது. இவ்வாறாக ஒரு சமூகத்தை அதன் மரபுத் தொடர்ச்சியிலிருந்து, இயல்பான வளர்ச்சிநிலையிலிருந்து முறித்து முடமாக்குகிறது. எனவே யுத்தத்துக்கு எதிராக நிற்றல் எனபது மிக அடிப்படையானது.
போருக்கு எதிராக நிற்றல் என்பது போரை அதை நிகழ்த்துபவர்மீதும் அதை உருவாக்கி நலன்பெறும் திட்டமிட்ட நாடுகள், சக்திகள் மீதுமான கூட்டு எதிர்ப்பாக இருக்க வேண்டும். ஆனால் நடப்பது அந்த நிலையை உருவாக்குபவர்களின் சக்திமிக்க ஊடகங்களும் குயுக்திகளும் மக்களை மூளைச்சலவை செய்து தம்மை காப்பாறிக்கொள்கின்றன. இந்தப் போரில் மேற்குலகினதும் அமெரிக்காவினதும் பெரும் பாத்திரத்தை மீறி ரசியாவுக்கு மட்டும் விரல் நீட்டுவது பகுதியளவே சரியாக இருக்கும். (இதை போரை ஆதரித்தல் என மொழியெர்க்காமல் இருந்தால் சரிதான்).
உக்ரைன் யுத்தத்தில் ரசியா படைகள் உட்புகுந்ததால் அதுவே குவிமையப்படுத்தப்படுவது நிகழ்கிறது. ஆனால் நாம் அதற்குள் மட்டும் நின்றுவிட முடியாது. இந் நிலை வரலாற்று ரீதியில் எப்படி நிகழ்ந்தது என்ற பார்வையையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதுவே எமது போரெதிர்ப்பு மனநிலையை ஆரோக்கியமாக வளர்த்துச் செல்லும்.
நேற்றோ 90 களுக்குப் பின் நடாத்திய யுத்தங்கள் எல்லாம் தாக்குதல் வலுவற்ற "பாதுகாப்புநிலையில்" நின்று போராடுகிற நாடுகளாகவே இருந்தன. யூகோஸ்லாவியா, ஈராக், லெபனான், சிரியா என தொடராக இந்த நிலைமையே இருந்தது. ஆனால் ரசியா "தாக்குதல் நிலையிலும் பாதுகாப்பு நிலையிலும்" போரிடக்கூடிய நாடு. எனவே நேரடி யுத்தம் நேற்றோவுக்கும் ரசியாவுக்கும் சாத்தியமில்லை. நடந்தால் அது பேரழிவை ஏற்படுத்துகிற யுத்தமாக உலகை அழித்தொழித்துவிடும். காரணம் அணுவாயுத தொழில்நுட்பத்தை இரு தரப்புமே கொண்டிருப்பதால் இந்த நாடுகளுக்கு இடையில் இப்போதும் இனி எப்போதும் நேரடி மோதல் சாத்தியமின்மை ஆக்கப்பட்டிருக்கிறது அல்லது தவிர்க்கப்படுகிறது. இதை ஞாபகப்படுத்தம் விதமாகவே புட்டின் இந்த போரில் "நேரடியாக வெளிச் சக்திகள் தலையிட்டால் வரலாற்றில் காணாத பெரும் அழிவுகளை சந்திக்க நேரிடும்" என எச்சரித்தார். இந்த கூற்று இனியொரு சந்தர்ப்பத்தில் நேற்றோவாலும் உச்சரிக்கப்படலாம்.
மேற்குலகு நேற்றோவில் சேரும் உடன்பாட்டை உக்ரைனிடமிருந்து பெற முயற்சித்தது. 2014 இல் ஒரு சதிப்புரட்சியையும் அது அரங்கேற்றியது. இந்த பொறியுள் உக்ரைன் மக்கள் அகப்பட்டனர். உக்ரைனை நடுநிலை நாடாக வைத்திருக்க புட்டின் வைத்த நியாயமான கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
ஏற்கனவே 2000 இல் ரசியாவை நேற்றொவில் இணைக்கவும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைக்கவும் (புட்டினால்) வைக்கப்பட்ட கோரிக்கைகள் புறந்தள்ளப்பட்டன. அதை நிராகரிப்பதில் தர்க்கநியாயம் இல்லாமல் இருந்ததால் அதற்கான அவர்களின் பதில் பரிகசிக்கத்தக்கவையாக வெளிப்பட்டன.
படிப்படியாக ரசியாவின் எல்லை நாடுகள்வரை நேற்றோ தனது விஸ்தரிப்புகளை செய்துவந்தது. (மறுபுறத்தில் ஐரோப்பிய ஒன்றியம் அந்த நாடுகளை அங்கத்துவ நாடுகளாக ஆக்கிக்கொண்டிருந்தன அல்லது நிர்ப்பந்தித்தன). இவை ரசியாவை எச்சரிக்கைப்படுத்திக்கொண்டே இருந்தது.
இதை எதிர்கொள்வதில் ரசியா எடுத்திருக்கும் முடிவானது அதுக்கு சாதகமாக இருக்குமா என கேட்டால் இல்லை என்ற பதிலுக்கு அருகேதான் வர முடிகிறது. அது இன்னொரு ஆப்கான் சேறாக மாறலாம்.
அப்படியாயின் ஏன் இந்தப் போர். வல்லாதிக்கப் போட்டியில் சீனாவும் ரசியாவும் இராணுவ ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் தமக்கு சவாலாக வருவதை ஏற்கனவே மேற்குலகும் அமெரிக்காவுக்கும் கணித்த நகர்வுகளால்தான் -சோவியத் உதிர்ந்து வார்சோ கூட்டமைப்பு கலைந்த பின்னும்- நேற்றோவுக்கான தேவையை இல்லாமலாக்காமல் விடாப்பிடியாக வைத்திருந்தனர். அதனாலேயே படிப்படியாக கிழக்கு நோக்கிய அவர்களின் நகர்வுகள் இருந்திருக்கின்றன. கருங்கடல் ஆதிக்கத்தையும் தரை நகர்வுகளையும் அவை திட்டமிட்டே செய்துகொண்டிருக்கின்றன. ஆசியப் பிராந்தியத்தை நிலைகுலைக்கும் வேலையிலேயே வளைகுடாப் போர்கள் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற லேபலுடன் நடாத்தப்பட்டன.
இதன் இன்னொரு அங்கமாக ரசியாவின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையிலும் ரசியாவை மட்டுக்குள் வைக்கும் முயற்சியிலும் அவை ஈடுபடுகின்றன. இதை பல புத்திஜீவிகளும் சுட்டிக்காட்டியிருந்தனர். நோம் சொம்ஸ்கி "ரசியா அமெரிக்காவின் தாக்குதல் நிலையால் சூழப்பட்டிருக்கிறது. புட்டினாக இருந்தாலென்ன வேறு எந்த தலைவராக இருந்தாலென்ன உக்ரைக் நேற்றோவில் இணைவதை இணக்கப்பாட்டோடு அணுக இடமில்லை" என்றார். (போருக்கு முன்னான கூற்று இது). புட்டின் உக்ரைனை நடுநிலை நாடாக வைத்திருக்க ஏற்கனவே கோரியிருந்தார். அதுவே சரியான தீர்வாக நோம் சொம்ஸ்கி, John Mearsheimer போன்ற புத்திஜீகளாலும் முன்வைக்கப்படுகிறது.
சோவியத் வீழ்ச்சிக்குப் பின் தாமே ஒரேயொரு தரப்பாக உலக ஒழுங்கை நிர்ணயித்த அமெரிக்கா மற்றும் மேற்குலகுக்கு சீனாவும் ரசியாவும் மறுதரப்பாக எழுந்துகொண்டிருக்கின்ற நிலை அச்சத்தை உருவாகியிருக்கிறது. பொருளாதார ரீதியில் தனது வளர்ச்சிக்கு ஐரோப்பாவின் உறவு தவிர்க்க முடியாமல் இருந்தாலும் சீனா ரசியாவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்கிறது.
ரசியாவும் சீனாவும் வீரியமான முதலாளித்துவ நாடாக பொருளாதார ரீதியில் தம்மை நிலைநிறுத்தத் தொடங்கி பல ஆண்டுகளாகிவிட்டது. சந்ததி இடைவெளிகூட கடந்துவிட்டது. இந் நிலையில் கம்யூனிச நாடுகள் என்ற பார்வையில் ரசியாவை ஆதரிப்பதாக எழும் விமர்சனங்கள் அர்த்தமற்றது. மாறாக அந்த விமர்சனங்கள் அவர்களை விட்டகலா கம்யூனிச அல்லது சோசலிச எதிர்ப்பு மனநிலையை பிரதிபலிப்பது என்று சொல்லலாம்.
முதலாளித்துவத்தை வேகமாக முன்னெடுத்துச் செல்லும் நிலைப்பாட்டையும் உலகமேலாதிக்கப் போட்டியையும் கணக்கில் எடுக்காது, ரசியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் இருப்பது முன்னாள் 'கம்யூனிச பாசமென' காணநேர்வது மட்டமான பொதுப்புத்தி சார்ந்தது.
சோவியத் காலத்தில் இரு முகாம்களாக இருந்த உலகு (கேள்விகேட்கப்பட முடியாதவர்களாக) ஒரு முகாமாக மாறியது. இப்போ மீண்டும் இரு முகாம்களாக உருவாகும் நிலையை நோக்கி உலகம் விரைவாகவே போய்க்கொண்டிருக்கிறது. ஒப்பீட்டளவில் இது ஒரு நேரம்சம்தான் என்றபோதும், அணு ஆயுத கண்டுபிடிப்புகள் ஆதிகாரப் போட்டியில் ஆற்றுகிற பங்கு மரணத்தின் விளிம்பில் உலக மக்களை கூட்டாக நிறுத்தியிருக்கிறது. போரற்ற உலகு என்பது இலட்சியவாத கனவாக மாறியிருக்கிறது.
இருந்தபோதும் அதற்கெதிரான குரலை ஒலித்துக்கொண்டே இருப்போம். அது ஓய்ந்துவிடக்கூடாது!. உக்ரைன் மக்களின் உயிரை அரியும் இந்தப் போர் விரைவில் முடிந்துவிட வேண்டும் என்ற ஏக்கம் மட்டுமே இப்போதைக்கு எஞ்சியிருக்கிறது.
(image : Thx : Reuters)
நன்றி: https://www.facebook.com/ravindran.pa/posts/7231064116964620