வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் கனவுகள் இருக்கும். இலக்குகளும் வெவ்வேறாக இருக்கும். ஆனால் தாய்மண்ணின் மீதான பாசம் எல்லோருக்கும் பொதுவானது. இடம்பெயர்ந்தாலும், புலம்பெயர்ந்தாலும் அந்த நேசம் மனதை விட்டுச் செல்வதில்லை. அந்த மண் பசுமை கொண்ட விவசாய நிலமாக இருந்துவிட்டால் சொந்தப் பிள்ளைகளைப் போல் பேணிவளர்ப்பதும், வளர்ச்சி கண்டு பூரிப்பதும், பலன் தரும்போது பெருமிதம் கொள்வதும் மனிதஇயல்பு.
அதே மண்ணை பிரிய நேர்தலும் அன்றி அதன் அழிவைக் காண நேர்தலும் ஒரு விவசாயிக்கு எத்தனை வேதனை தரும் அனுபவம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதுவும் பெற்ற பிள்ளைகளை இழப்பதை ஒத்த துயரம் தருவதுதான். இந்த மகிழ்வையும், துயரத்தையும் இலங்கைத் தமிழர் வரலாற்றுடன் இணைத்து 'பச்சைவயல் கனவு' என்ற நாவலை நெஞ்சில் நிறைத்தவர் எழுத்தாளர் தாமரைச்செல்வி அவர்கள்.
2004 இல் வெளிவந்த இந்நாவல் இலங்கை அரசின் சாகித்திய விருதினையும் பெற்றுள்ளது என்பது மெருமைக்குரியது. வெளிவந்து இருதசாப்தங்களை நெருங்கும் நிலையில் இன்று வாசித்தாலும் உயிரோட்டம் மிகுந்த உணர்வுகளைத் தருவது நாவலின் சிறப்பு. இந்நாவல் தனிப்பட்ட ஒரு மனிதரின் வாழ்க்கைச் சரிதத்தினூடு சொல்லப்பட்டாலும், ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்க்கைக் குறியீடாகவே எண்ணத் தோன்றுகிறது. அத்துடன் சுதந்திரம் பெற்றது முதல் 2004 வரையிலான இனவன்முறை சார்ந்த வரலாற்றுச் சம்பவங்களின் மீள்பார்வை ஒன்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
அழிந்து காடாகிப் போன தனது பச்சை வயலின் பசுமையை நெஞ்சில் நிறைத்து, முதுமையில் ஏங்கும் தனது தந்தையின் வாழ்க்கை வரலாறாகவே இந்த நாவலை தாமரைச்செல்வி படைத்திருக்கிறார். காடாக இருந்த நிலத்தை, தமது கடும் உழைப்பினால் குருவிகளின் இன்னிசை நிறைந்த, பச்சை வயல்களின் எழில்சூழ் பிரதேசமாக மாற்றிய தனது தந்தையைப் போன்ற எளிமையான மனிதர்களின் நினைவாக இந்த நாவலை கிளிநொச்சி மண்ணுக்கு சமர்ப்பணமாக்கும் படைப்பாளியின் பெருநேசம் மனதைத் தொடுகிறது. அத்துடன் தந்தை வாழும்போதே இந்நூலை சமர்ப்பணம் செய்ததைப் பெருமையுடன் நினைவு கூர்கிறார்.
சொந்த அனுபவமொன்று நாவலாகப் புனையப்படும் போது அது வாசகருக்கு ஏற்படுத்தும் உணர்வுத்தளம் மிகமிக வலிமையானது. சிவம் என்பவரின் இதயத்தின் வலியை தன் எளிமையான ஆனால் உண்மையான சொற்களால் எமது நெஞ்சில் உருவேற்றும் பணியில் எழுத்தாளரின் கனவு நிஜமாகியுள்ளது. யுத்தத்தின் பேரழிவுகளால் செங்குருதியின் நிறமாகிய கனவுகள், நாவலின் இறுதியில் ஏ 9 பாதையின் மீள்திறப்புடன் மீண்டும் பச்சை நிறமாகும் என துளிர்விடும் நம்பிக்கையுடன் நிறைவுக்கு வருகிறது.
தென்மராட்சியை பிறப்பிடமாகக் கொண்ட பொறுப்பற்ற விளையாட்டுப் பிள்ளையான இளைஞன் சிவம், தனது அண்ணனின் வழிகாட்டுதலை ஏற்று, அந்நாளில் வனவிலங்குகளும், விஷஜந்துக்களும் உலவும் காடாக இருந்த கிளிநொச்சி குமரபுரம் பிரதேசத்தில் தனது முயற்சியினால் வயல் செய்து முன்னேறிய கதையிது. முன்னேற்றத்தின் ஒவ்வொரு கணமும் மிகத் தரமான கலைப்படத்தின் சிறப்புடனும் உயிர்ப்புடனும் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. இப்பிரதேசத்தில் அன்றைய காலகட்டத்தில் பகிர்ந்தளிக்கப் பட்ட விவசாய நிலங்களும், கிராம விஸ்தரிப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிலங்களும், அன்றைய வடக்கு மக்களில் பலரது முன்னேற்றத்துக்கும் காரணமாக அமைந்தது வரலாறு.
1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்ற நாட்களுக்கு முன்னதாக ஆரம்பமாகும் இந்த உயிர்சரிதம், இனப்பிரச்சனையின் ஒவ்வொரு கட்டத்திலும் நின்று நிதானித்து அதன் பேரழிவுகளை ஒரு விவசாயியின் கண்களூடாகக் காட்டுகிறது. ஐம்பத்தெட்டு, எழுபத்தேழு, எண்பத்து மூன்று இனக்கலவரங்கள், அமைதிப்படை என்ற பெயரில் இங்கு வந்த இந்திய இராணுவத்தின் அட்டூழியங்கள், பேரழிவைத் தந்த இலங்கை இராணுவ நடவடிக்கைகள் மற்றும் இயற்கை அனர்த்தங்களான பெருமழை, இரணைமடுக்குளம் உடைப்பெடுக்கும் காலங்கள் என பலவேறு இடர்களின் போது விவசாயிகளின் மனஉளைச்சலும், கடன்சுமையும், உடைமைகளுக்கான பேரழிவுகளும் அவர்களின் கண்ணீரை களக்காட்சிகளுடன் மனதில் படிமமாக்குகின்றன.
இனப்பிரச்சனையின் மூலாதாரத்தை வேரறுக்கும் முகமாக தமிழ் இளைய தலைமுறையினரது ஆயுதகலாசார தோற்றப்பாடும், மிதவாதத்திலிருந்து தீவிரவாதத்துக்கான மக்களின் ஆதரவும் உளமார்ந்த விருப்பும் நியாயப்படுத்தப்பட்டுஉள்ளன. இயக்கப் போராளிகள் பலரை நினைவுகூரும் கதையாளர், எழுபதுகளில் ஜே.வி.பி கலவரம், 1983 இனக்கலவரம் என்பவற்றை அடுத்து கூழக்கடா கும்பலாய் பறந்த ஆனையிறவு வெளியெங்கும் இராணுவ முகாம்களின் தோற்றத்தினை பதைப்புடன் வெளிப்படுத்துகிறார்.
இயங்கங்களின் செயற்பாடுகள் அதிகரித்த போது போக்குவரத்துதடை, பொருளாதாரத் தடை என அரசின் ஒடுக்கு முறைகள் உச்சம் பெற்றன. அன்றாட வாழ்வியல் சரிந்து வீழ்ந்தது. இங்கு விவசாயிகள் பயிருக்கான உரங்களை பெறுவதிலும். தமது விளைச்சல்களை சந்தைப் படுத்துவதிலும் ஏற்பட்ட இடர்பாடுகளை ஒரு சாதாரண பொதுமகன் புரிந்து கொள்ளும்படி கூறுகிறார். சொத்துசுகங்களை விட்டு ஓடி ஔிந்து நிலவரம் சற்றே சரியாகும் போது மீண்டு வருவதும், எல்லாமே மண்மேடாகக் கிடப்பதைக் காணும் போதும், மீண்டெழுவோம் என்ற நம்பிக்கையுடன் வாழும் போதும் எத்தனை நெஞ்சுரம் மிக்க மக்கள் என்று வியப்பு உண்டாகிறது.
இராணுவ தாக்குதல்களில் குண்டு பட்டு இறந்தவர்களை அந்தந்த இடங்களிலேயே விட்டுப் பிரிதலும், நெருங்கிய உறவுகளின் மரணத்திற்கு கூட சமூகமளிக்க முடியாத அவலங்களையும் கடந்து வந்தவர்கள் எமது மக்கள். இடம்பெயரும் மக்களின் அவலநிலையினை பொய்மை கலக்காத மொழியில் படைத்து வாசகரின் உள்ளத்தை ரணகளமாக்குகிறார் .
இத்தகைய இடர்மிகுந்த நேரங்களில் தம்மை விட எளியோருக்கும், ஆதரவற்றோருக்கும், இடம் பெயர்ந்தோருக்கும் உதவும் மனிதநேயமும், நேர்மையான மனம் கொண்ட மனிதர்களும் எழுத்தாளரின் படைப்புகளில் அடிக்கடி காணக்கிடைக்கும் உயர்பண்புகள். இது எக்காலத்திலும் தேவைப்படும் மனிதப்பண்புகள் என வலியுறுத்தும் படைப்பாளியின் எழுத்து நேர்மை பாராட்டுக்கு உரியது. இனக் கலவரங்களுக்கு முன் இனமதமொழி பேதமின்றி கிளிநொச்சிப் பிரதேசத்தின் வயல்வெளிகளை வளப்படுத்திய மக்கள் காலத்தின் கட்டாயத்தால் பிரிந்து வெவ்வேறு திசைகளில் பயணிப்பதை வேதனையுடன் அவதானித்து, மனமாற்றத்துக்கான மையப்புள்ளி மக்களால் தெரிவு செய்யப்படும் அரசின் கைகளில்தான் இருக்கிறது என்பதையும் மறைமுகமாகக் கூறி நிற்கிறார்.
இவை தகவல்களாக மட்டுமன்றி உணர்வாகவும் பதிகின்றன. வடக்கிற்கு வெளியே வாழும் இத் துன்பங்களை அனுபவிக்காதவர்களுக்கும் கூட இத்தனை துன்பங்களா என்ற உணர்வை ஏற்படுத்தல் எழுத்தின் வெற்றி.என்னென்ன துன்பங்கள் நேரினும் இதுவரை தன்னம்பிக்கையை தமிழர்கள் இழக்கவில்லை என்றே தோன்றுகிறது.
பரந்தன் குமரபுரத்தில் சாம்பல் காடாக இருக்கும் தனது வீட்டு முற்றத்து மண்ணை கண்ணீர் மல்க முழந்தாளிட்டு முத்தமிட்ட சிவத்தாரின் நிலைகண்டு நெகிழாத நெஞ்சங்கள் இருக்க முடியாது. அவரது நம்பிக்கை போலவே நமது இனத்தின் நம்பிக்கைகளும் மெய்ப்பட வேண்டும்.
தாமரைச்செல்வி அவர்களின் எழுத்து இலக்கியத்தின் அழகியல் எழுச்சியை மட்டுமே சார்ந்திருக்கவில்லை. இன்பியலும், துன்பியலும் கலந்த தன் எழுத்தினூடாக சுதந்திரத்தின் பின் தனது சமூகம் சந்தித்த உரிமை மறுப்புகள், இனவன்முறைகள், போரின் கொடுமை, இடம்பெயர்வின் அவலங்கள் என்பவற்றை எழுத்தில் கொண்டு வருவதன் மூலம் எதிர்கால வரலாற்றுக்கான சான்றுகளையும் தர முயல்கிறார்.
அறம்சார்ந்த எழுத்தின் சொந்தக்காரரான படைப்பாளி தன் எழுத்தின் எல்லைகளையும் கொள்கைகளையும் தெளிவுற வகுத்துக் கொண்டவர். தனது எழுத்து வன்மையை நிரூபிக்கும் முகமாகவேனும் தனிமனித மனத்தின் குரூரமான பக்கங்களை தனது படைப்புகளில் தொட்டுச் செல்லவில்லை. தமிழ் இளைஞர்களின் இயக்க நடவடிக்கைகளை விருப்புடன் கூடிய மென்கோணத்திலேயே அணுகும் இவர், இயக்கங்களுக்கு இடையிலான காட்டிக் கொடுத்தல்களை எந்த இடத்திலும் தொட்டுச் செல்லவில்லை. இதே உன்னத இலட்சியம் இயக்கங்களிடையேயும் இருந்திருந்தால், தமிழ்மக்கள் இந்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்க மாட்டார்கள் என்னும் எண்ணம் மனதில் தோன்றுவதை தடுக்க முடியவில்லை.
காமமும் இலக்கிய வரம்புகளுக்கு உட்பட்டதே. எனினும் பாலியல் சாராத எழுத்துகளும் வெற்றி பெற முடியும் என நிருபித்த உயர் இலக்கியப் பரிசில்களின் சொந்தக்காரர் இவர். எந்த வயதினரும் சங்கடமேதுமின்றி வாசிக்க வைக்கும் கண்ணியமான எழுத்துகள் இவருடையவை. எழுத்தின் துணிவு காமத்தை முன்னிறுத்துவதல்ல. தமிழினத்தின் வரலாற்றில் பேரினவாத அரசுகளின் அடக்குமுறை, இராணுவ அட்டூழியங்களை உள்ளது உள்ளபடி பதிவு செய்வதில்தான் என்பதை உணர்ந்தவர். 2004 என்ற காலப்பகுதி இத்தகைய வெளிப் படுத்தல்களுக்கு சற்றே சாதகமான காலப்பகுதியாகவும் அமைந்திருந்தது. உண்மையை எழுதல் என்ற நேர்மைக்கு கிடைத்த வெற்றியாக சாகித்திய விருதினைக் கொள்ளலாம்.
வீழ்தல் என்பது எழுகையே என A 9 பாதை திறப்புடன் ஆரம்பித்த தமிழ்மக்களின் எதிர்பார்ப்புகள், மிகச்சில ஆண்டுகளுக்குள் மீண்டும் 2009 இல் அனைத்தையும் இழந்து அஸ்தமித்துப் போயினும், உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவைகளென துன்பங்களை மறந்து மீண்டும் மறுமலரச்சி கண்டது.
இறுதிப் போருக்குப் பின்னரான வன்னி மக்களின் வாழ்வில் 'எதுவும் கடந்து போகும்' என்ற வாழ்வியலைக் கண்டு வியப்படையாத மனிதமனம் இருக்க முடியாது.இந்த மண் இழந்தவை எல்லாவற்றையும் தரும், மறுபடி வாழ்வும் தரும் எனும் நம்பிக்கை ஔியுடன் நிறைவு பெறுகிறது 'பச்சைவயல் கனவு' எனும் உயர்படைப்பு.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.