பாவம் எழுத்தாளர்கள்! - வ.ந.கிரிதரன் -
என் முன்னைய பதிவொன்றில் க.சச்சிதானந்தன் அவர்களைப்பற்றிக் குறிப்பிடுகையில் எழுத்தாளர் க.சச்சிதானந்தன் என்று குறிப்பிட்டிருந்தேன். அதற்கு எதிர்வினையாற்றிய முகநூல் நண்பர் கு.சரவணன் அவர்கள் " சச்சிதானந்தனை தாங்கள் எழுத்தாளர் என்று சுட்டுவது பொருத்தமற்று உள்ளது. பண்டிதர் அல்லது மதுரைபண்டிதர் என்று சுட்டுவதே சிறப்பாக அமைகின்றது" என்று கூறியிருந்தார்.
உண்மையில் எழுத்தாளர் என்றழைக்காமல் அவரைப் பண்டிதர் என்றழைப்பது அவரைப் பண்டிதர் என்னும் குறுகிய வட்டத்தில் இருத்தி விடும் அபாயமுண்டு. பண்டிதர்கள் எல்லோரும் எழுத்தாளர்கள் அல்லர். பெரும்பாலும் அசிரியர்கள். பண்டிதர் என்பது ஒரு கல்வித்தகைமை. ஆனால் க.சச்சிதானந்தன் அவர்கள் கவிதை, கட்டுரை, நாவல் , அறிவியலென்று பன்முகத்திறமை கொண்ட எழுத்தாளராகத் தன்னை அடையாளம் காட்டியவர். ஆனந்தம், பண்டிதர் போன்ற புனைபெயர்களில் எழுதியவர். எழுத்தாளர் என்று அவரை அழைப்பது அவரைப்பெருமைப்படுத்தும் ஒன்று.
யார் கூறியது எழுத்தாளரை விடப் பண்டிதர் என்றழைப்பது பெருமைப்படுத்துமொன்றென்று. எழுத்தாளர் அதுவும் பன்முகத்திறமை மிக்க எழுத்தாளர் என்பது அவரைக் கெளரவப்படுத்தும். மேலும் யாரும் பண்டிதர் ஆக முடியும். ஆனால் பண்டிதர்கள் எல்லோரும் எழுத்தாளர்களாக முடியாது. பண்டிதர் என்பது ஒரு கல்வித்தகைமை. அவர் பண்டிதர் மட்டுமல்லர். கலைப்பட்டதாரி. கலாநிதி. வானியல் அறிஞர். விரிவுரையாளர். இவ்விதம் பன்முகத்திறமை மிக்கவர் அவர். விக்கிபீடியா அவரை இவ்விதம் விபரிக்கின்றது: "கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன் (அக்டோபர் 10, 1921 – மார்ச் 21, 2008) ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். சச்சிதானந்தன் என்ற பெயரிலும், ஆனந்தன், யாழ்ப்பாணன், பண்டிதர், சச்சி ஆகிய புனைபெயர்களிலும் எழுதினார்."