எழுத்தாளர் கே.எஸ்.சுதாகரை நினைத்ததும் எனக்கு அமரர் காவலூர் எஸ்.ஜெகநாதன் நினைவுக்கு வருவார். பத்து சிறுகதைப்போட்டிகளில் முதற் பரிசு பெற்றவர். நான்கு சிறுகதைப்போட்டிகளில் தங்கப்பதக்கங்களைப் பெற்றவர். அகில இலங்கைரீதியில் நடத்தப்பட்ட பதினாறு சிறுகதைப்போட்டிகளில் பங்குபற்றிப் பரிசில்களைப் பெற்றதால் 'பரிசு எழுத்தாளர்' என்று அழைக்கப்பட்டவர். கே.எஸ்.சுதாகரும் பல சிறுகதைப்போட்டிகளில் பங்கு பற்றி பரிசுகள் பெற்ற பரிசு எழுத்தாளர். ஞானம் சஞ்சிகை நடத்திய சிறுகதைப்போட்டிகளில் பத்துத்தடவைகளும், ஏனைய ஊடகங்களில் பதினெட்டுத் தடவைகளும் பரிசுகள் பெற்றவரென்று கே.எஸ்.சுதாகரின் 'பால் வண்ணம்' நூலுக்கு எழுதிய தனது முன்னுரையில் ஞானம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியரான தி.ஞானசேகரன் குறிப்பிடுகின்றார்.
யாழ் தெல்லிப்பளையில் பிறந்து தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கே.எஸ்.சுதாகர் பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியற் பட்டதாரி. அவரது 'பால்வண்ணம்' சிறுகதைத்தொகுப்பு பற்றிய எனது எண்ணங்களே இக்கட்டுரையாகும். ஏற்கனவே இவரது 'சென்றிடுவீர் எட்டுத்திக்கும்', 'எங்கே போகின்றோம்' ஆகிய சிறுகதைத்தொகுப்புகள் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தொகுப்பிலுள்ள சுதாகரின் கதைகள் யதார்த்தபூர்வமானவை. கதை மாந்தர்கள் குறை,நிறைகளுடன் யதார்த்தத்தில் எவ்விதம் இருப்பார்களோ அவ்விதமே படைக்கப்பட்டிருக்கின்றார்கள். இலங்கைத் தமிழர்தம் அரசியற் பிரச்சினை, ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண் நிலை, நவீனத்தொழில் நுட்பத்தின் எதிர்மறைப் பாதிப்பு, ஆஸ்திரேலியப் பூர்வகுடிகளின் நிலை, புகலிடம் நாடிச்செல்லும் குடிவரவாளர் தப்பிப்பிழைத்தலுக்காக எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சாதிப்பிரச்சினைப் பாதிப்பு, பல்லினக் கலாச்சாரப் புகலிடச் சமுதாய அமைப்பில் புதிய கலாச்சாரத்தில் தம் கலாச்சாரத்தை விட்டுக்கொடுத்து இயைந்து போகும் வாழ்க்கை முறை, காதல் , அதன் மேல் வாழும் சூழல் ஏற்படுத்தும் பாதிப்பு,, பெருந்தொற்றுப்பாதிப்பு, இலங்கைத் தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தின் இயக்க முரண்பாடுகள் ஏற்படுத்திய எதிர்மறை விளைவு எனப் பல விடயங்களை இத்தொகுப்புக் கதைகள் பேசுகின்றன. எழுத்தில் ஆங்காங்கே அங்கதச் சுவையும் தூவப்பட்டுள்ளதை உணர முடிகின்றது.
- எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர் -
பால்வண்ணம்
இச்சிறுகதை காதலை மையமாகக்கொண்டது. நாயகன் நாயகியைத் தன் பதின்ம வயதுகளில் விரும்பியபோது நாட்டுச் சூழல், அவளது வாழ்க்கை இலட்சியம் போன்ற காரணங்களினால் அது நிறைவேறவில்லை. மீண்டும் பல வருடங்களின் பின் முதுமையில் சந்திக்கின்றார்கள். அப்போதும் இணைவதற்குச் சாத்தியமிருந்தும் அது நிகழவில்லை. இந்தக் கதை காதலின் உயர்வைக்கூறுகிறதா அல்லது மனிதர்களின் உறுதியற்ற மனநிலையை வெளிப்படுத்துகின்றதா, அவர்களைச்சுற்றியுள்ள கலாச்சாரச்சூழல் அவர்களைப் பாதிப்பதன் விளைவைப் பேசுகின்றதா என்பது வாசித்து முடிந்ததும் ஏற்படும் குழப்பம். கேள்வி. அவனோ முதுமையில் மனைவியை இழந்து வாழ்பவன். அவளோ இன்னும் முதிர்கன்னியாகவே இருப்பவள். அவள் அவனது இளம்பருவத்துக் காதலி கூட. முதுமையில் அவர்கள் நண்பர்களாக, தம்பதியாக இணைவது ஆரோக்கியமான விடயம். ஆனால் அதனை அவர்கள் செய்யவில்லை. ஏன்? அவர்களை அவ்விதம் செய்ய விடாது தடுத்தவை எவை? கதையில் அவற்றுக்கான காரணங்கள் ஆழமாக விபரிக்கப்படவில்லை. எவ்வித ஆழமான , நியாயமான காரணங்களுமில்லாமல் அவர்களைக் கதை முடிவில் கதாசிரியர் இணைய முடியாமல் செய்திருக்கின்றார். அது ஏன்? உண்மையில் இணைந்திருந்தால் அது ஒரு முன்மாதிரியான , ஆரோக்கியச் செயலாக புலம் பெயர்ந்து வாழும் முதியவர் சமுதாயத்துக்கு இருந்திருக்கும். ஆனால் அதனை ஆசிரியர் செய்யாமல் தவிர்த்து விட்டு அதற்கான காரணங்களை வாசகர்களின் ஊகங்களுக்கே விட்டு விடுகின்றார். கதையின் முடிவு இவ்விதமிருந்தாலும், இவ்விதமான சிந்தனைகளை வாசகர்கள் மத்தியில் தோற்றுவிக்கின்றது. அது இக்கதையின் ஆரோக்கியமான அம்சம்.
இன்னுமொரு விடயம். நம் தமிழ் முதியவர்கள் இவ்விதமே தம் ஆசைகளை அடக்கி, குழந்தைகள், சமுதாயம் என்ன சொல்லுமோ என்ற அச்சம் காரணமாக இருந்து விடுகின்றார்கள். முதியவர்கள் என்றால் இப்படித்தானிருக்க வேண்டும் என்ற சில கட்டுப்பாடுகளை தமக்குத்தாமே விதித்துக்கொண்டு வாழ்கின்றார்கள். ஆனால் மேனாட்டு முதியவர்கள் பலர் தனித்திருக்கும் முதுமையில் புதிய துணை தேடுவதொன்றும் புதியதல்லவே. குழந்தைகளே முன் நின்று அவர்களைச் சேர்த்து வைப்பார்கள். சுதாகர் இவ்விதம் முடிக்காமலிருப்பதற்கு முக்கிய காரணமாகத் தமிழ்க் கலாச்சாரத் தாக்கமிருப்பதாகவே கருத வேண்டியுள்ளது. கதாசிரியர் மட்டுமல்லர் பொதுவாக நமது சமுதாயமும் அதனைத்தான் எதிர்பார்க்கின்றது. அந்த எதிர்பார்ப்பைத்தான் இக்கதையும் பிரதிபலிக்கின்றது. ஒரு வகையில் யதார்த்தத்தில் பெரும்பான்மையான தமிழ் மனிதர்கள் இவ்விதம்தாம் தாம் வாழும் சமூகத்தின் கலாச்சாரத்தாக்குதல்களுக்கு ஈடுகொடுத்து, அவற்றை மீற முடியாமல் இருந்துவிடுகின்றார்கள்.
தூங்கும் பனி நீர்
தமிழ்ப்பெண்ணொருத்தி, சிந்து அவள் பெயர், திருமணம் நடைபெறவுள்ளது. இலங்கையில் அவளுக்குப் படிப்பித்த ஆசிரியை ஆஸ்திரேலியாவில் மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்யும் தொழில் செய்கின்றாள். தாயின் சிநேகிதி. மகளுக்கும் அலங்காரம் செய்ய வருகின்றாள். பல்கலைக்கழகப் பட்டதாரி. இங்கு அதற்குரிய வேலை கிடைக்கவில்லை. அதனால் திருமண அலங்காரம் செய்கின்றாள். இவ்விதம் அலங்காரம் செய்து விட்டுத் திரும்புகையில் கூறுகிறாள் அவள் ஆசிரியையாக விரைவில் வேலை செய்யப்போகின்றாள். கதை போதைக்கு அடிமையான அவளது கணவனின் பாலியல் வன்முறையினையும் பேசுகிறது. அதனால் அவள் பிரிந்து வாழ்வதையும் மறைமுகமாகக் கூறுகிறது. காதலித்துத் திருமணம் செய்த அவளது பெற்றோர் முதலில் பேசித்திருமணம் செய்ய விரும்புகின்றார்கள். பேசித்திருமணம் செய்த ஜோதி டீச்சருக்கு ஏற்பட்ட நிலை கண்டு மகளின் காதல் திருமணத்துக்குச் சம்மதிக்கின்றனர். இக்கதை பெண் மீதான ஆணின் ஆதிக்கச் சிதைவுகளைப் பேசுகிறது. பெற்றோர் நிர்ணையித்த திருமணமொன்றின் தோல்வியைப் பேசுகிறது. கூடவே காதல் மணமொன்றின் வெற்றியைப் பேசுகிறது. புகலிடம் தேடிக் குடிபெயர்ந்த நாடொன்றில் குடிவரவாளர் ஒருவர் தன்னை நிலை நிறுத்துவதற்காக எடுக்கும் முயற்சிகள் பற்றிப்பேசுகிறது.
வெந்து தணிந்தது காடு
அகிலன் மருத்துவர். ஒலிவர் ஆஸ்பத்திரியில் அவர் பார்க்கும் நோயாளிகளில் ஒருவன். வெளிநாடு சென்று வந்த அவனது மகன் டேவிட் முகக் கவசம் அணியாமல் ஒலிவரைப் பார்க்க வருகின்றான். அதன் காரணமாக ஒலிவருக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது. மரணமடைகின்றான். அகிலனுக்கும் கொரோனா ஏற்படுகின்றது. தற்போது நிலவும் கொரோனாப் பெருந்தொற்று பற்றிய படிப்பினைக் கதையாக இக்கதையினைக் கூறலாம். பெருந்தொற்றிலிருந்து எடுக்க வேண்டிய பாதுகாப்பு செயற்பாடுகளில் அலட்சியம் காட்டுவதால் ஏற்படும் பாரதூரமான விளைவுகளைப்பற்றிப் பேசுகிறது. வெளிநாட்டிலிருந்து வரும் ஒலிவரின் மகனின் அலட்சியம் அவனது தந்தையின் உயிரை எடுப்பதுடன் மருத்துவருக்கும் நோயைத்தந்துவிடுகிறது.
அம்மாவின் எண்பதாவது பிறந்ததின உரை.
ஆஸ்திரேலியாவில் வாழுமொரு மூதாட்டியின் எண்பதாவது பிறந்தநாள் பற்றியும், அவள் அதிலாற்றும் உரையும் கதையின் முக்கிய சம்பவங்கள். அவளது குழந்தைகள் ஆடம்பரமாக விழாவைக் கொண்டாடுகின்றார்கள். இங்கு அவளது பேரப்பிள்ளைகள் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த பெண்களுடன் வாழ்கின்றார்கள். பேத்தி சட்டரீதியாக மணமுடித்தும், பேரன்கள் 'லிவிங் டுகெதர்' முறையிலும் வாழ்க்கையை நடத்துகின்றார்கள். ஊரில் சாதிக்கட்டமைப்பு காரணமாகச் செய்யாத சவரத் தொழில் போன்ற வேலைகளைச் செய்து வாழ்கின்றார்கள். ஊரில் தாழ்த்தப்பட்ட இனப்பெண்ணொருத்தியைக் காதலித்த மூத்த மகன் அதனை அவளது ஏனைய குழந்தைகள் கடுமையாக எதிர்த்த காரணத்தால் திருமணம் செய்ய முடியாமல் போய்விடுகிறது. அந்தப்பெண்ணுக்கும் இன்னுமொரு திருமணம் நடைபெறுகிறது. அதன் காரணமாக அவள் தற்கொலை செய்துவிடுகின்றாள். இதுவே மகனின் உளவியல் பாதிப்புக்குக் காரணம். இதனை தனது பிறந்ததின உரையில் அம்மூதாட்டி கூறுகின்றாள்.
சாதியமைப்பு காரணமாகக் கடுமையாக எதிர்த்த குழந்தைகளும், மருமக்களும் பல்வகைத் தொழில்களும் செய்கின்றார்கள். புதிய இடத்தின் கலாச்சார அம்சங்கள் பல் வகைகளிலும் மாறியிருப்பதை அம்மூதாட்டி காண்கின்றாள். குழந்தைகளும் புதிய சூழல்களுக்கு ஏற்ப தம்மை மாற்றிக்கொண்டாலும், தம் சமூகத்தைப் பொறுத்தவரையில் அதே போலிப்பெருமைகளும், காலனித்துவ அடிமை மனப்போக்கு கொண்டவர்களாகவும் வாழ்கின்றார்கள். தென் கிழக்காசியாவைச் சேர்ந்தவர்களை மணந்து கொண்ட தன் பிள்ளைகள் ஒரு வெள்ளையினத்தவரைச் சேர்ந்தவரை மணக்கவில்லையே என்பது அம்மூதாட்டியின் மகளின் கவலை என்று கதாசிரியர் விபரிக்கின்றார்.
நாமே நமக்கு
தொகுப்பின் முக்கிய கதையாக உணர்கின்றேன். கதையின் நாயகனின் வாழ்வில் எதிர்பட்ட ஒரு பெண் கிருஷ்ணவேணி. அவன் பட்டம் பெற்று வேலை பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில் அவனது அப்பாவின் நண்பர் ஒருவரின் பெண்ணான அவளை அவனுக்குத் திருமணம் பேசி வருகின்றார்கள். நிச்சயம் செய்யப்பட்ட திருமணம் அவள் ஓரியக்கத்தின் ஆதரவாளராகவிருந்த காரணத்தால் நின்று விடுகின்றது. திருமணம் பேசியதும் அவள் மீது ஆசை கொண்ட , காதல் அல்ல, அவன் அவளைப் பல தடவைகள் சந்திக்கின்றான். அவர்களுக்கிடையிலுள்ள உறவு வளர்கின்றது. காதல் என்றால் அவன் திருமணத்தை அவனது பெற்றோர் நிறுதியபோது எதிர்த்து நின்றிருப்பான். அவளுடன் பழகிய பின்னரும் மிகவும் சாதாரணமாக எவ்வித எதிர்ப்புமின்றி அவர்களின் முடிவை ஏற்றுக்கொள்கின்றான். திருமணமும் செய்து கொள்கின்றான்.
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் நாயகன் தன் முதுமைப்பருவத்தில் மனைவி, மகனுடன் பிரான்ஸ் செல்கின்றான். அங்கு தன் பாடசாலை நண்பர்களைச் சந்திக்கின்றான். அவர்களில் ஒருவன் ராஜன்.. கிருஷ்ணவேணியின் சகோதாரன். அங்கு சுவரில் கிருஷ்ணவேணியின் இளமைக்காலப் புகைப்படம் சுவரில் மாட்டுப்பட்டிருப்பதைக் கன்டு திடுக்கிடுகின்றான. பின்னர்தான் அவனுக்கு முழு விபரமும் தெரிகின்றது. கிருஷ்ணவேணி ஓர் இயக்கத்தின் ஆதரவாளர். ராஜன் இன்னுமோர் இயக்கத்தைச் சேர்ந்தவன். ராஜனை சந்திக்க வரும் இயக்க இளைஞனொருவன் கிருஷ்ணவேணியின் மீது மோகம் கொள்கின்றான். அவள் மறுத்துவிடவே அவளைக் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிக்கொலை செய்து விடுகின்றான்.
கதை இயக்க முரண்பாடுகள் மக்களுக்கு ஏற்படுத்திய எதிர்மறையான விளைவொன்றைப்பேசுகிறது. அதனால் முக்கியத்துவம் பெறுகின்றது. முடிவில் 'அவளைச் சிங்கள இராணுவம் கொல்லவில்லை. நாமே நமக்கு எதிரியானோம். யாரிடம் நீதி கேட்பது' என்ற கேள்வியுடன் கதை முடிகின்றது. கூடவே தான் அவளைத் திருமணம் செய்திருந்தால் அவளுக்கு இந்நிலை ஏற்படுவதைத் தவிர்த்திருக்கலாமோ என்றும் தன்னை அவன் கேட்டுக்கொள்கின்றான். அப்பொழுது அவனது நெஞ்சு வலிக்கின்றது. உதடுகள் துடிக்கின்றன. அவ்விதம் அவளை அவனது பெற்றோர்கள் மறுத்தபோது வலித்திருந்தால், துடித்திருந்தால் அவள் உயிர் பிழைத்திருப்பாளே. இக்கதையின் முடிவில் அப்பெண்ணைக் கொலை செய்த அந்த இயக்க இளைஞன் மேல் வரும் ஆத்திரம் அவளுடன் பழகிவிட்டு, ஆசையை வளர்த்து விட்டு, கோழையைப்போல் ஒதுங்கிக்கொண்ட கதையின் நாயகன் மீதும் வருகின்றது. அது ஆசிரியரின் பாத்திரப்படைப்பின் சிறப்பினை வெளிக்காட்டுகின்றது. நடைமுறையில் பலர் இக்கதை நாயகன் போல்தான் நடந்து கொள்கின்றனர்.
கனவு காணும் உலகம்
ஆதிவாசி இனத்துக் கலப்புப் பெண் அவள். ஓவியரான அவளது தாத்தா மரணப்படுக்கையில் இருக்கிறார். அவர் இருப்பது மலைப்பாங்கான பகுதியில். ஆதிவாசிகள் இருக்கும் பகுதியில். நேரமோ இரவு நேரம். வீதியில் அவள் மறிக்கும் 'ரக்சி'கள் ஒன்றுமே நிற்கவில்லை. தருமு என்னும் 'ரக்சி'ச் சாரதி மட்டும் அவளுக்கு உதவுகின்றான். அவளை ஏற்றிச்சென்று அவளது தாத்தாவின் இருப்பிடத்துக்குச் சேர்ப்பிக்கின்றான். 'ஜிபிஎஸ்' வேலை செய்யாத இடத்தில் அவளே அவனுக்கு வழி காட்டுகின்றாள். வழியில் அவளுடன் உரையாடிச் செல்கையில் ஆதிவாசிகள் பற்றி, அவளது தாத்தாவின் ஓவியங்கள் பற்றி, அவளது தாத்தாவின் ஓவியக் காட்சியகம் பற்றியெல்லாம் அறிந்துகொள்கின்றான். அவளுடனான அவனது உரையாடல்கள் அவள் படித்த் பெண் என்பதை எடுத்துக்காட்டுகின்றன. அக்கண்காட்சியகம் ஒருமுறை தாக்குதலுக்குள்ளாகியதாகவும் . போதிய பராமரிப்பு வசதிகளற்ற அவளது தாத்தா அதனை இலாப நோக்கற்று இயங்கும் அமைப்பொன்றுக்கு வழங்கி விட்டதாகவும் அவள் கூறுகின்றாள். மேலும் ஆதிவாசிகள் மீது வெறுப்பிலிருக்கும் வெள்ளையினத்தவர்கள் யாராவது அதனைச் செய்திருக்கலாமென்றும் கூறுகின்றாள்.
அவளைத் தாத்தாவிடம் சேர்ப்பித்துவிட்டுத் திரும்புகையில் அவள் தன்னிடமிருந்த பணத்தைக் கொடுக்க வாங்க மறுக்கின்றான். பதிலுக்கு அவன் அன்பு முத்தமொன்றைக் கொடுத்துவிட்டுச் செல்கின்றாள். திரும்புகையில் 'ஜிபிஸ்' வேலை செய்யாததால் வழி தடுமாறி ஒரு மாதிரி வீடு வந்து சேர்கின்றான் தருமி. மறுநாள் காலைல் தொலைக்காட்சிச் செய்தியில் அப்பெண்ணை மீண்டும் அவன் காண்கின்றான். அச்செய்தியில் அப்பெண் தன் தாத்தா இறந்துவிட்டதையும், அவரை இறுதியாகப் பார்ப்பதற்கு உதவிய ஆசிய நாட்டு 'ரக்சி'ச் சாரதியான தருமு பற்றியும் குறிப்பிடுகின்றாள்.
இந்தக்கதையின் ஆரம்பத்தில் அப்பெண் கையில் வோட்காப்போத்தல் வைத்திருந்ததாகக் கதாசிரியர் குறிப்பிடுகின்றார். இதனை ஏற்றுக்கொள்வது கடினமானது. அவள் வறிய பழங்குடிப்பெண் அல்லள். படித்தவள். பொதுவாகப் பழங்குடி மக்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள். எந்நேரமும் வோட்காவும் கையுமாகத்தானிருப்பார்கள். இவ்விதமானதொரு சித்திரம் இனத்துவேசம் மிக்க சமுதாயக் கூறாக இருக்கத்தான் செய்கிறது. இம்மனநிலை ஆசிரியருக்குமுள்ளதோ எனச் சந்தேகிக்க வைக்கும் விபரிப்பு இது. இதனைத்தவிர்த்திருக்கலாமென்று தோன்றுகின்றது. அதே சமயம் யதார்த்தத்தில் மனிதர்கள் பலர் இவ்விதமே இருக்கின்றார்கள். இலட்சிய மானுடர்களாக அல்லர் என்பதையும் நினைத்துப்பார்க்க வேண்டியுள்ளது. மேலும் அவள் அவனுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக முத்தமிடுகையில் கூட அவனுக்குத் திகைப்பு ஏற்படுகின்றது என்று கதாசிரியர் விபரிக்கின்றார். ஏன்? அவள் ஒரு இளம் பெண் என்பதாலா? அதே சமயம் இவ்விதமான ஆணொருவனின் உளவியல் கூட யதார்த்தபூர்வமானதாகவே தென்படுகின்றது.
அனுபவம் புதுமை
இது ஒரு குழப்பம் நிறைந்த சிறுகதை. துவாரகன் ஒரு மருத்துவ பீட இறுதியாண்டு மாணவன். அவனும் இன்னும் ஏழு நண்பர்களும் நியூமன் என்னும் எழுபது வயது நோயாளியைக் குறைந்தது பன்னிரண்டு தடவையாவது சந்தித்துக் குறிப்புகள் எடுக்க வேண்டும். அவ்விதம் எடுக்கையில் இடையில் ஒரு நாள் நியூமன் தன் அறையில் விழுந்து கிடக்கின்றார். அவர் இறந்து விட்டாரோ என்று மாணவர்கள் அஞ்சுகின்றார்கள். அவர் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்படுகின்றார். அதன் பின் அடுத்த மூன்று மாதங்களில் இரு தடவைகள் நியூமனைச் சந்திக்கின்றான் துவாரகன். அவரது நிலை மோசமடைந்து வருவதாகக் குறிப்பிடுகின்றான். வருட முடிவில் நேர்முகப்பரிட்சை எடுத்து சித்தியடைந்து மருத்துவர்களாகப் பல்வேறு திக்குகளிலும் பிரிந்து போய்விடுகின்றார்கள். ஆயினும் ஒருவருக்கொருவர் தொடர்புகளைப் பேணி வருகின்றார்கள். அண்டி என்பவன் நியூமனைச் சந்திக்க வேண்டுமென்று கூறுகின்றான்.
இதற்கிடையில் பேராசிரியர் நெயில் றொபின்ஷன் சித்தியடைந்த மாணவர்களூக்கும், நோயாளிகளுக்குமிடையிலான சந்திப்புக்காக முயற்சி செய்கின்றார். அப்பொழுதுதான் எட்டு மாதங்களுக்கு முன் நியூமன் இறந்து விட்டதை அறிகின்றார். மாணவர்கள் இறந்த நியூமனுடன் கற்பனையாக உரையாடி தமது அறிக்கைகளைச்சமர்ப்பித்துச் சித்தியடைந்து விட்டார்கள் என்று குமுறுகின்றார். ஆனால் அவர்களில் தனது மகளும் இருப்பதால் என்ன செய்வது என்ற குழப்பத்துடன் இருக்கின்றார். அத்துடன் கதை முடிகின்றது, இக்கதையின் கதைப்பின்னல் என்னைக் குழப்பத்திலாழ்த்துகின்றது. துவாரகன் இறுதிவரை நியூமனைச் சந்தித்தாகக் கதை செல்கின்றது. சித்தியடைந்து மருத்துவர்களாக வேலை பார்க்கும் சமயத்திலும் கூட அண்டி என்னும் மருத்துவன் நியூமனைச் சந்திக்க வேண்டும் என்று கூறுகின்றான். அப்படியிருக்கையில் எவ்விதம் நியூமன் எட்டு மாதங்களுக்கு முன் இறந்திருக்க முடியும்? இதற்கான விளக்கத்தைக் கதாசிரியர் சுதாகர்தான் தரவேண்டும். இத்தொகுப்பிலுள்ள கதைகளில் கதைப்பின்னல் பலவீனமாக அமைந்த கதையாக இதனைக் குறிப்பிடலாம்.
பாம்பும் ஏணியும்
சிவானி என்னும் முன்னாள் யாழ் பல்கலைக்கழக மாணவியின் வாழ்க்கையில் ஏற்படும் இடர்களை விபரிப்பதுதான் பாம்பும் ஏணியும் . இயக்கப்போராளிகளாகத் தந்தையும் , அண்ணனுன் இருந்ததால் , ஆசிரியையான தாய் அடிக்கடி இராணுவத்தினரின் தொந்தரவுகளுக்கு ஆளாகின்றாள். அதன் விளைவாகத் தற்கொலை செய்கின்றாள். கதையில் இலங்கையின் போர்க்காலச்சுழலில் ஏற்படும் இடப்பெயர்வொன்றின்போது தந்தையையும் , சகோதரனையும் பிரியும் அவளை அவளது மாமா ஒருத்தர் வெளிநாடு அழைக்கின்றார்.அழைத்தவர் தான் நடத்து உணவகத்தின் சமைலறைக்குள் அவளது வாழ்வை அடக்கி மன உளைச்சலுக்கு உள்ளாக்குகின்றார். அங்கு வரும் வாடிக்கையாளர்களில் ஒருவன் ஜனகன். ஏற்கனவே மணமாகிக் குழந்தைகளுக்கும் தந்தை அவன். இந்நிலையில் அவனது உதவியை நாடி, மாமாவின் பிடியிலிருந்து தப்பும் சிவானியின நிலையைப் பயன்படுத்தி அவளைத் தன் பாலியல் தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றான் ஜனகன். அவள் படிப்பதையோ , வெளியில் அடிக்கடி செல்வதையோ விரும்பாத அவன் நாளடைவில் தன் சுயரூபத்தைக் காட்டுகின்றான். அவள் மேல் பாலியல் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றான். இறுதியில் பொலிசாரின் உதவியை நாடுகின்றாள் சிவானி. ஜனகன் கைது செய்யப்படுகின்றான். இத்துடன் கதை முடிகின்றது. ஒரு இலங்கைத் தமிழ்ப் பெண்ணுக்குப் போர்ச்சூழல் காரணமாகச் சொந்த மண்ணிலும், இடம் பெயர்ந்து வாழ்வைத் தக்க வைக்க முயற்சி செய்யும் மண்ணிலும் ஏற்படும் அவலங்களை விபரிக்கும் கதை என்பதே இதன் முக்கியத்துவம். சிவானியைப் போன்ற பெண்கள் பலரைக் கண்டிருக்கின்றோம். உறவுக்கார ஆணகளால் குறிப்பாக மாமா, அக்கா புருசன் போன்ற ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் பற்றிக் கேள்விப்படும் சம்பவங்கள் ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்களைப்பாலியல் பொம்மைகளாகக் கருதும் போக்கின் விளைவுகள்.
யாரோ ஒளிந்திருக்கிறார்கள்
'ஸ்மார்ட் போன்' கிடைத்ததிலிருந்து சிறீபாலனின் மனைவி உமாவின் சித்தம் பாதிக்கப்பட்டு மருத்துவ நிலையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றாள். மருத்துவர் திட சிந்தனையில்லாதவர்கள் நவீனத்தொழில் நுட்பங்களைத்தவிர்த்து விடுவது நல்லது என்கின்றார். அதைக்கேட்டு வீடு திரும்பும் அவன் மனைவியின் போனையெடுத்து 'யாறா' நதிக்குள் எறிந்து விடுகின்றான். அதன் பின் அவனது ஸ்மார்ட் போன் அடிக்கத்தொடங்குகின்றது. அதில் கண்ட காட்சி அவனை அசர வைக்கின்றது. தனது போனையும் எறிவதா, வைத்திருப்பதா என்று தலையைப் பிய்த்துக்கொள்கின்றான் என்பதுடன் கதை முடிகின்றது.
உமா போன்ற பலரை நான் சந்தித்திருக்கின்றேன். ஒருமுறை 'டொரோண்டோ' நூலகமொன்றில் சந்தித்த தமிழ் இளைஞ்ன் பார்ப்பதற்குச் சாதாரணமானவனாகத் தென்பட்டான். அவனுடன் உரையாடுகையில் மிகவும் குரலைத்தாழ்த்தி தன்னை கனடா அரசின் புலனாய்வுத்துறை 'சட்டிலைட்' மூலம் அவதானிக்கின்றதாகவும் , தன்னால் ஓரிடத்திலும் அமைதியாக இருக்க முடியவில்லையென்றும் கூறினான். அவனது மனப்பிறழ்வுக்குக் காரணமாக இலங்கையின் போர்ச்சூழலும் அதனால் அவனடைந்த அனுபவங்களுமிருக்கக் கூடும். ஆனால் இங்கு அலைபேசி என்னும் புதிய தொழில்நுட்பம் ஏற்படுத்திய பாதிப்பு விபரிக்கப்படுகின்றது. இக்கதையில் புதிய தொழில் நுட்பமொன்றை மனிதர்கள் தவறாகப் பயன்படுத்தலாம். அதனால் பாதிப்புகள் ஏற்படலாம் என்பதைக் கதாசிரியர் கூறுகின்றார் என்று கருதலாம்.
தலைமுறை தாண்டிய தரிசனங்கள்
ஆஸ்திரேலியாவில் நிறவெறிக்கொள்கையை அமுல்படுத்திய வெள்ளையினத்தவன் ஒருவனின் கொள்ளுப்பேத்தி கரோலின். மருத்துவம் படிக்கின்றாள். அவளுடன் படிப்பவன் அடோனிஸ். ஆஸ்திரேலியாவின் பூர்வ குடியினத்தைச் சேர்ந்தவன். இருவரும் இணைவதுதான் கதையின் பிரதான கரு. இடையில் அவர்களது உணர்வுகளில் ஏற்பட்ட மாற்றங்கள், தடுமாற்றங்கள் ஆகியவற்றை விபரித்து இறுதியில் அவர்களிருவரும் ஒன்று சேர்வதாக முடித்திருக்கின்றார். கதாசிரியர். கூடவே அவர்களுடன் படிக்கும் தெற்காசியனான வருணும், கரோலினின் தங்கைக்குமிடையில் காதல் முகிழ்ப்பதகாக கோடு காட்டியுமிருக்கின்றார். கதையின் முக்கியத்துவம் ஆஸ்திரேலிய பூர்வ குடிகளுக்கு வெள்ளையினத்தவர்கள் ஏற்படுத்திய அழிவுகளை நினைவு படுத்துவதும், ஆனால் இன்றைய சமுதாயத்தில் இனங்களுக்கிடையிலான முரண்கள் நீங்கி ஒருவருக்கொருவர் அன்பினால் இணங்கி வரும் சூழல் தோன்றியுள்ளது என்பதை வரவேற்பதிலும் தங்கியுள்ளது. அடோனிசின் பாட்டி வெள்ளையர்கள் அன்று செய்த அழிவுகள் பற்றிய சிந்தனைகளிலிருந்து மீறாதவளாக இருக்கும் அதே சமயம் கரோலினின் தந்தையோ அவ்வரலாற்றூத் துரோகங்களை நினைவு படுத்தும் எச்சங்களை அழித்து புதிய சிந்தனைக்குள் புகுமொருவராகப் படைக்கப்பட்டுள்ளார். இதுவரை இருந்த தலைமுறைகளின் சிந்தனைகள் நீங்கிய புதிய தரிசனங்களைப் புதிய தலைமுறை சந்திக்கின்றது. ஏற்றுக்கொள்கின்றது என்னும் ஆரோக்கிய சிந்தனையினைக் கதை வெளிக்காட்டுகின்றது.
ஏன்?
வித்தியாசமான கதை. கதை சொல்லி தன் நண்பன் ஒருவனின் குடும்பத்தைப்பற்றி விபரிக்கின்றான். நண்பனின் மனைவிக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கின்றது. அப்பெண் குழந்தை வெள்ளையினத்துப் பெண் பிள்ளைபோல் பிறந்திருக்கின்றது. அதனை மறைக்க அக்குழந்தை இறந்துவிட்டதாகவும், மரணச்சடங்குகளை இன்னுமொரு நகரத்தில் செய்யப்போவதாகவும் கூறி நண்பன் சென்று விடுகின்றான். அதன் பிறகு பல வருடங்களுக்குப்பின்னர் நண்பன் பெண் குழந்தையொன்றைத் தத்தெடுத்து வளர்ப்பதாக அறிவிக்கின்றான். நண்பர்கள் மீண்டும் சந்திக்கும்போது அப்பெண் குழந்தை வெள்ளையினக் குழந்தையாக இருப்பது தெரிய வருகின்றது, இதற்கிடையில் தனது மாமா மூலம் கதைசொல்லி நண்பனின் மனைவியின் பாட்டி ஒ ரு பறங்கியினக் கலப்புப்பெண் என்பதை அறிந்து கொள்கின்றான். அதுவே நண்பனின் குழந்தை வெள்ளையினக் குழந்தைபோல் பிறந்ததற்கும் காரணம் என்பதையும் புரிந்துகொள்கின்றான். ஆனால் இவ்விடயத்தைக் கதைசொல்லி தன் மனைவியிடம் கூடக் கூறவில்லை. மாமாவும் இறந்து விடுகின்றார். இறுதியில் சந்திக்கும் நண்பனும் அப்பெண் குழந்தை தன் குழந்தையே என்பதை ஒப்புக்கொள்கின்றான். 'நம்மினத்தில் சிங்களக் காடையர்களுக்கும் , இராணுவத்தினருக்கும் எத்தனையோ தமிழ்ப்பெண்கள் பலியாகிப்போனார்கள். ஏனைய அன்னியராட்சியிலும் பாதிக்கப்பட்டார்கள். இந்நிலையில் சமுதாயம் இவ்விதம் பாதிக்கப்பட்டவர்களைக் கேவலமாகத்தான் பார்க்கின்றது. இதனால் சில உண்மைகள் உறங்கிக்கிடக்கத்தான் வேண்டும்' என்றும் ஏன் தன் குழந்தையைத் தத்தெடுத்த குழந்தையாகச் சமுதாயத்துக்குக் காட்டுகின்றான் என்பதற்கான காரணத்தைக் கூறுகின்றான். 'ஏன்' என்று இச்சிறுகதையில் தலைப்பு அமைந்துள்ளது என்பதற்கான காரணத்திற்கான பதிலாக அக்கூற்று அமைந்திருக்கின்றது.
இக்கதை எனக்கு எண்பதுகளில் யாழ் றியோவில் பார்த்த Born Black என்னும் திரைப்படத்தை நினைவூட்டியது. அதில் வெள்ளையினப் பெண்ணொருத்திக்குக் கறுப்பு நிறக்குழந்தை பிறக்கின்றது. அது அவள் கணவன் மீது, அவர்களது சமுதாயத்தின்மீது ஏற்படுத்தும் உணர்வுகளை எடுத்துக்காட்டுகின்றது. உண்மையில் அதற்குக் காரணம் அந்தக் கணவன் தன் மனைவியுடன் உறவு கொளவதற்கு முன்னர் கறுப்பினக் காதலனுடன் உறவு கொண்ட வெள்ளையின உணவகப் பெண்ணொருத்தியுடன் கொண்ட உறவே.
கலைந்தது கனவு
கிருஷ்ணவேணி பத்தாவது வரை படித்த பெண். அவளது ஊரவனும், அவளது காதலனுமான அகிலன் பேராதனைப் பொறியியல் பட்டதாரி. அவனும், அவனுடன் படித்த பொறியியற் பட்டதாரியான மாதவியும் மேற்படிப்புக்காகப் புலமைப்பரிசில் பெற்று ஆஸ்திரேலியா செல்கின்றார்கள். தனிமையும், வேற்றிடமும், பருவமும், உணர்வுகளும் அவர்களை இணைத்து விடுகின்றது. மாதவிக்கு அவனுக்குக் காதலியிருப்பது தெரியும். அவள் அவனுடன் இருக்கும் புகைப்படத்தை அவனது நண்பர்களுக்கு அனுப்பி விடுகின்றாள். அது கிருஷ்ணவேணிக்கும் அவளது தோழி இந்திரா மூலம் கிடைத்து விடுகின்றது. ஆவேசமடைந்த கிருஷ்ணவேணி அகிலனின் வீட்டுக்குச் சென்று அங்கேயே தங்கி விடுகின்றாள். அன்றிரவு அகிலனின் அறையில் தங்குகின்றாள். அச்சமயம் அவளுக்கு அவளுடன் படித்த, அவள் மேல் தீவிர காதல் கொண்டு , அவள் நிராகரித்து விடவே தன் உயிரை மாய்த்துக்கொண்ட இளங்கோவின் நினைவு வந்து வாட்டுகின்றது. அடுத்த நாள் வேலைக்குப் போவதற்காக அலாரம் வைத்துவிட்டு படுக்கையில் பல்வேறு சிந்தனைகளுடன் உறக்கம் வராமல் திண்டாடிக்கொண்டிருக்கின்றாள். இந்தக் கதையின் முடிவும் குழப்பம் நிறைந்தது. கிருஷணவேணி அங்கேயே தொடர்ந்தும் இருக்கப்போகின்றாளா? ஒருவேளை அகிலன் மாதவியுடன் நிரந்தரமாகவே வாழ்ந்து விடுவானா? இக்கேள்விகள் எழுந்தாலும் கதாசிரியர் கதைக்கு இட்டிருக்கும் தலைப்பான 'கலைந்தது கனவு'முடிவில் கிருஷ்ணவேணியின் காதலும் கலைந்த கனவாகவே இருக்கப்போகின்றது என்பதை மறைமுகமாகக் கூறுவதாகக் கருதலாம். அகிலனை, கிருஷணவேணியைப் போன்ற பலரை நானே என் சொந்த வாழ்க்கையில் கண்டிருக்கின்றேன். அதே சமயம் கிருஷ்ணவேணியின் வாழ்விலிருந்து அகிலனைப் பிரிக்கும் மாதவி கோவலனைக் கண்ணகியிடமிருந்து பிரிக்கும் மாதவியை நினைவுக்குக்கொண்டு வருகின்றாள். அங்கு கண்ணகி கணவனுடன் சேர்ந்து விடுகின்றாள். இங்கு கிருஷ்ணவேணியின் கனவோ கலைந்து விடுகின்றது.
முடிவாக...
யதார்த்தபூர்வமான, ஆங்காங்கே அங்கதச்சுவையுடன் கூடிய எழுத்தில் புகலிடம் நாடி ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் இருப்பின் பல்வேறு கூறுகளைப் பேசும் கதைகளின் தொகுப்பு கே.எஸ்.சுதாகரின் 'பால் வண்ணம்'. இழந்த மண்ணின் சமூக, அரசியற் சூழல் ஏற்படுத்திய பாதிப்புகள், புகுந்த மண்ணில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், கலாச்சாரப் பாதிப்புகள், ஆஸ்திரேலியப் பூர்வகுடிகளின் நிலை, தமிழ்ப்பெண்கள் இழந்த மண்ணில், இருக்கும் மண்ணில் எதிர்கொண்ட , எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எனப் பால்வண்ணம் தொகுப்புக் கதைகள் பலவேறு விடயங்களைப் பேசுகின்றன. இவை வாசகர்கள் மத்தியில் எழுப்பும் கேள்விகள் முக்கியமானவை. அதுவே இத்தொகுப்பின் வெற்றியும் கூட.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.