பாரதியாரின் இருப்பு பற்றிய சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -
கணையாழி சஞ்சிகையின் ஜனவரி 2022 பதிப்பில் எனது 'பாரதியாரின் இருப்பு பற்றிய சிந்தனைகள்' என்னும் கட்டுரை வெளியாகியுள்ளது. கட்டுரையினைக் கீழே தந்துள்ளேன். கணையாழி சஞ்சிகையின் டிஜிட்டல் பிரதியை மக்ஸ்டெர் தளத்தில் வாங்கலாம். அதற்கான முகவரி: https://www.magzter.com/IN/Kanaiyazhi/Kanaiyazhi/Celebrity/ கணையாழி சஞ்சிகையின் இணையத்தளம்: https://kanaiyazhi.com/ தற்போது நிலவும் கோவிட் சூழலினால் கணையாழி மின்னிதழாக வெளிவருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
என்னை தனது எழுத்துகளால் ஆட்கொண்டவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் மகாகவி பாரதியார். தனது குறுகிய வாழ்வில் அவரால் எவ்விதம் இவ்விதம் சிந்திக்க முடிந்தது? செயற்பட முடிந்தது? எழுத முடிந்தது ? என்று நான் அடிக்கடி வியந்துகொள்வதுண்டு. தனது குறுகிய வாழ்வில் கவிதை, கட்டுரை, புனைகதை என்று அவர் ஆற்றிய இலக்கியப் பங்களிப்பு போற்றுதற்குரியது. அந்நியராதிக்கத்தின் கீழ் அடிமைப்பட்டுக்கிடந்த நாட்டின் விடுதலைக்காக, வாழ்ந்த மண்ணில் நிலவிய தீண்டாமை, பெண்ணடிமைத்தனம், மூட நம்பிக்கைகள் போன்ற சமூகச் சீரழிவுகளுகெதிராக, சுற்றியிருக்கும் இயற்கைக்காக, வாழும் சக உயிர்களுக்காக அவரது எழுத்துகள் குரலெழுப்பின. பல்வகைப்பட்ட மானுடரின் உணர்வுகளையும் அவரது கவிதைகள் வெளிப்படுத்தின. தான் வாழ்ந்த காலத்தை மீறிய அவரது சிந்தனையை , அவற்றில் காணப்படும் தெளிவினை அவரது எழுத்துகள் வெளிப்படுத்தின. அத்துடன் சிந்திப்பதுடன் நின்று விடாமல் அதற்கேற்ப நிஜ வாழ்விலும் செயற்பட்டவரும் கூட. இவ்விதமாகப் பல்வேறு விடயங்களைப்பற்றிச் சிந்தித்த அவரது சிந்தனை மானுட இருப்பு பற்றியும் சிந்தித்தது. இருப்பு பற்றிய சிந்தனைகள் கேள்விக்கு மேல் கேள்விகளை எழுப்புமொன்று. அக்கேள்விகளெல்லாம் அவருக்கும் ஏற்பட்டன. அக்கேள்விகளுக்கான விடைகளையும் அவர் தர்க்கரீதியாகச் சிந்தித்தார். அச்சிந்தனைப்போராட்டங்களை வெளிப்படுத்தும் அவரது முக்கியமான கவிதையாக 'உலகத்தை நோக்கி வினவுதல்' என்னும் கவிதையைக் குறிப்பிடலாம்.
தத்துவஞானிகள் மண்டைகளைப் போட்டுக் குடைந்துகொண்டிருக்கும் தத்துவ மோதல்களிற்கு இன்றுவரை சாியானதொரு தீர்வில்லை. ‘இவ்வுலகம், இங்கு வாழும் ஜீவராசிகள், இப்பிரபஞ்சம் எல்லாமே அவன் விளையாட்டு. அவனின்றி அவனியில் எதுவுமேயில்லை ‘ என்று சமயம் கூறும். இதனைக் கருத்துமுதல் வாதம் என்போம். நம்புபவர்கள் ‘கருத்து முதல்வாதிகள் ‘. இவர்கள் ‘சிந்தனை, புலனுணர்வு என்பவை ஆன்மாவின் செயலென்றும், இவ்வான்மாவானது அழியாதது, நிரந்தரமானது ‘ என்றும், ‘இவ்வுலகு, இயற்கை யாவுமே சக்தியின் விளைவு ‘ என்றும் கூறுவார்கள். அதுமட்டுமல்ல ‘இவ்வுலகமென்பது (காண்பவை, செயல்கள் எல்லாமே) சிந்தனையின் அதாவது உணர்வின் விளைபொருளே ‘ என்றும் கூறுவார்கள். ஆனால் இதற்கு மாறான கருத்துள்ள தத்துவஞானம் ‘பொருள் முதல்வாதம் ‘ எனப்படுகின்றது. இதனை நம்புபவர்கள் ‘பொருள்முதல்வாதிகள் ‘ எனப்படுவர். இவர்கள் கருத்துப்படி ‘ஆன்மா நிலையானது, அழிவற்றது ‘ என்பதெல்லாம் வெறும் அபத்தம். கட்டுக்கதை. சிந்தனை என்பது பொருள் வகை வஸ்த்துவான மூளையின் செயற்பாடே. நிலையாக இருப்பது இந்த இயற்கை (பொருள்) ஒன்றே ‘. இவ்வுலகினின்றும் வேறாகத் தனித்து ஒரு சக்தி இருக்கின்றது என்பதை எதிர்க்கும் இவர்கள் ‘அப்படி எதுவுமில்லை ‘ என்கின்றார்கள். ‘இவ்வியற்கையில் ஏற்பட்ட பாிணாம மாற்றங்களே உயிாினங்கள் உருவாகக் காரணம் ‘ என்கின்றார்கள். நவீன இயற்கை விஞ்ஞானத்தை இவர்கள் ஆதாரமாகக் கொள்கின்றார்கள். பாரதியாரையும் இந்தத்தத்துவக் குழப்பம் விட்டு வைக்கவில்லையென்பதைத்தான் மேற்படி 'உலகத்தை வினவுதல்' கவிதை வெளிப்படுத்துகின்றது.