ஜூன் 3 நடிகர் ஜெய்சங்கரின் நினைவு தினம். என் பால்ய பருவத்தில் என்னைக் கவர்ந்திருந்த நடிகர்களில் ஜெய்சங்கரும் ஒருவர். அழகான ,வசீகரம் மிக்க தோற்றத்துடன் விளங்கிய இவர் அக்காலகட்டத்தில் இளம் பெண்களின் கனவு நாயகனாக விளங்கினார். எனக்குத் தெரிந்த அக்கா ஒருவர் பார்த்தால் ஜெய்சங்கரைப்போல் மாப்பிள்ளை பாருங்கள் என்று அடம் பிடித்தது இன்னும் பசுமையாக நினைவிலுள்ளது. இவரது நல்ல கதையம்சத்துடன் கூடிய திரைப்படங்கள் பல அனைவரையும் கவர்ந்திருந்தன. குழந்தையும் தெய்வமும், பஞ்சவர்ணக்கிளி. பெண்ணே நீ வாழ்க, நூற்றுக்கு நூறு போன்ற திரைப்படங்கள் அனைவரையும் கவர்ந்திருந்தன. இவர் துப்பறிவாளராக நடித்த திரைப்படங்கள் பலவும் மக்களைக் கவர்ந்திருந்தன. அதனால் இவர் தென்னகத்தின் ஜேம்ஸ் பாண்ட் எனப் புகழ்பெற்றார். ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர் துப்பறியும் தொடர்கதையொன்றினையும் தினமணிக்கதிர் வெளியிட்டிருந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
இவரது பெண்ணே நீ வாழ்க திரைப்படம் குழந்தைகளான எமக்குப் பிடித்துப்போகவே வவுனியா றோயல் திரையரங்கில் மூன்று தடவைகள் பார்த்திருக்கின்றோம். அப்பொழுது எங்களைத் திரைப்படங்களுக்குக் கூட்டிச் செல்வது அருகில் வசித்த ஆச்சியொருவர். அவருக்கும் சேர்த்து அம்மா பணம் கொடுத்து விடுவார். அவர் எங்களைத் திரைப்படங்களுக்குக் கூட்டிச் சென்று பத்திரமாகக் கூட்டி வருவார். வவுனியா றோயல் திரையரங்கில் பார்த்த ஏனைய திரைப்படங்கள் பவானி, சபாஷ் தம்பி. நியூ இந்திராவில் பார்த்தது பஞ்சவர்ணக்கிளி & குழந்தையும் தெய்வமும்; பட்டணத்தில் பூதம் யாழ் ராணி திரையரங்கில்.
இவர் கே.ஆர்.விஜயாவுடன் நடித்த பல படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்திருந்தன. பட்டணத்தில் பூதம், நிலவே நீ சாட்சி அவற்றிலிரண்டு. சுப்பிரமணியம் சங்கர் என்னும் இவர் பெயரை ஜெய்சங்கர் என மாற்றியவர் இவரது முதற்படத் தயாரிப்பாளரும் ,இயக்குநருமான ஜோசப் தளியத். முதற்படமான 'இரவும் பகலும்' திரைப்படத்திலேயே இரட்டை வேடங்கள். எம்ஜிஆரின் எங்க வீட்டுப்பிள்ளை வெளியான 65 பொங்கல் தினத்தன்று வெளியான இரவும் பகலும் வெற்றிப்படமாக அமைந்ததும் குறிப்பிடத்தக்கது. இவ்வளவு இருந்தும் ஜெய்சங்கரின் திரைப்பட வாழ்க்கை நான் எதிர்பார்த்தபடி அமையாமல் போனதேன் என்று சிந்தித்துப்பார்த்ததுண்டு. முக்கிய காரணமாக நான் கருதுவது ஆரம்பத்தில் உடல் வனப்பைப் பேணியவர் பின்னாளில் பருத்து, வண்டியும் தொந்தியுமாக மாறிப்போனார். தனக்குரிய திரைக்கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனத்தைச் செலுத்தத்தவறிப்போனார். இவற்றை முக்கியமாகக் கூறலாம். ஆனால் இவரது ஆரம்பகாலத்திரைப்படங்கள் மூலம் இன்றும் வசீகரத்துடன் கூடிய புன்னகையுடன் திகழ்ந்த ஜெய்சங்கரை இன்னும் பழைய இரசிகர்கள் நினைவில் வைத்துள்ளார்கள்.
அவரது நினைவாகக் கவிஞர் ஆலங்குடி சோமுவின் வரிகளில், இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பாவின் இசையில், பாடகர் டி.எம்.எஸ் குரலில் ஒலிக்கும் 'உள்ளத்தின் கதவுகள் கண்களடா' என்னும் பாடலைப் பகிர்ந்துகொள்கின்றேன். அவரது முதலாவது திரைப்படமான 'இரவும் பகலும்'திரைப்படத்தில் ஒலிக்கும் பாடல். என்னைக்கவர்ந்த பாடல்களிலொன்று.