தொடர் நாவல்: கலிங்கு (2012: 7- 10) - தேவகாந்தன் -
2012 - 7
பாயில் சரிகிற இரவுகளில், ‘அப்பனே முருகா!’ என்று ஆசுவாசத்துடன் படுக்கிற காலமொன்று இருந்ததை பரஞ்சோதி கண்டிருக்கிறாள். அது வெகுகாலத்துக்கு முந்தி. அம்மாச்சிபோல் அந்தளவு ஆசுவாசமாகத் தூங்கச் சரிந்த வேறெவரையும் தன் வாழ்நாளில் அவள் கண்டதில்லை. ‘அப்பனே, சன்னதியானே!’ என்று அவள் முனகிச் சரியும்போது, அந்த ஒலியலைகளால் உலகமே நிறைந்து பனைவெளிக் காற்றும், தள்ளியிருந்த விரிகடல் அலையும்கூட அடங்கித் தோன்றும். அக்கணத்திலிருந்து விடியும் முன் வரும் எக் கணத்திலும், எருது வாகனமேறி யமதர்மன் வந்துவீசக்கூடிய பாசக் கயிற்றில் மிக இலகுவாக தன் உயிரைக் கழற்றிக் கொளுவிவிடும் நிறைவாழ்வின் பூரணம் அவளில் இருந்தது. விடிந்தெழுந்தால்தான் அன்றைய கடமைகள் பாரமாகும். அன்றைய நாளின் பூர்த்தி, அன்றைய வாழ்வின் பூர்த்தியாய் ஆசை, அவா, அவதி யாவுமறுத்து விரிந்திருந்த காலம் அது.
இப்போது அது இல்லை.
அம்மா ஆச்சிப்பிள்ளையின் காலத்தில் அது மாறத் துவங்கியிருக்கலாம். அம்மா, ‘போய்ச் சேர ஒரு நேரம் வருகிதில்லையே!’ என்ற ஏக்கத்துடன்தான் பல இரவுகளையும் படுத்திருந்தாள். ஆறு பிள்ளைகளையும் அரவணைத்து வளர்க்கவேண்டிய அவசியம் இருந்த நிலைமையிலும், அவள் எல்லாம் மறந்து அக்கணமே உயிர் கழற்றி எறியும் அவதிகொண்டிருந்தாள். வாழ்க்கை அவளை அந்தளவு அழுத்தியிருந்தது.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அழுத்தம். அப்போது படுக்கவாவது முடிந்திருந்தது. ஒரு பாய், விரிக்க ஒரு திண்ணை, காற்று வீசும் வெளி, இடிமுழக்கமற்ற இரவு, ஆவிகளும் பேய்களும் பற்றியவை தவிர்த்து வேறு பயம் விளைக்காக் கனவு எல்லாம் இருந்தன. இப்போது படுக்க முடிவதே பெரிய காரியமென நினைக்கிற அளவுக்கு நிலைமைகள் ஆகியிருக்கின்றன. படுக்க முடிந்தவர்கள் பாக்கியவான்களாக இருந்தார்கள். ஒரு கண் நித்திரை கொள்வதென்பது பெரிய புண்ணியத்தின் பலனாகவிருந்தது. ஆசுவாசம்பற்றி நினைப்பதற்கு இன்னும் சில காலம் ஆகலாம். ஆகாமலும் போகலாம். அப்போது அடைந்ததே ஆசுவாசம்தான் என நினைத்துவிட்டுப் போகவேண்டும்.
படுத்திருந்து அத்தனையும் நினைத்தாள் பரஞ்சோதி.