சிறுகதை: அவிழாப் புதிர்! - கிறிஸ்டி நல்லரெத்தினம் -
நேக்கு பூனையை பிடிக்காது. தப்பு, தப்பு...... பூனைகளைன்னு மாத்தி வாசியுங்கோ. பூனையாம் பூன. அதென்ன..... நம்ம கண்ணுக்குள்ளயே ஏதோ தேடற பார்வை...
' சீ, நீ ஒரு பதர்' அப்படின்னு பார்க்கிற மாதிரி ஒரு அலட்சிய பார்வ.... மீசையாம் மீசை.... நார் நாரா உதடுக்கு மேல ஈர்க்கில் போல ... பார்க்கவே சகிக்கல... உற்ற்ற்... உற்ற்ற் ன்ன எப்பவும் வயிற்றுக்குள்ள இருந்து ஒரு இரைச்சல் சத்தம் வேற. வயிறா இல்ல ஏதாவது பாக்டரியா?
வால் மட்டும் என்னவாம்? எங்க ஜிம்மிக்கு புசு புசுண்ணு என்னமா பஞ்சு மாதிரி சாஃப்டான வாலு.... பாம்புக்கு ஸவெட்டர் போட்டாபல இருக்கும். பூனையாம் பூன..... ஏதோ திட்டம் போட்டு ஒவ்வொரு அடியையும் அளந்து அளந்து வச்சி தலய மெதுவா திருப்பி பார்த்திட்டு அப்புறம் அலட்சியமா போறப்ப சினிமால 'உன்ன அப்புறமா வந்து கவனிச்கிறேன்னு' வில்லன் சொல்லறாப்பல இருக்கும்.
என்ன.... ஒரே குறையா சொல்றேன் சண்டைக்காரின்னு நினைச்சீங்களோ? மாமா கூட அம்மா கிட்ட இதேதான் சொன்னார். "கொண்டு வர்ர எல்லா வரனையும் வேணாம் வேணாம்னு உதைச்சி தள்ளுறா உன் மக. நாம பார்க்கிற பையங்க வேணாமா இல்ல கல்யாணமே வேணமா? அவளா பாத்து ஒரு டாக்டரையோ, ஐ.ஏ.எஸ் பையனயோ கூட்டிண்டு வரட்டும். ஜாம் ஜாம்னு நடத்தி நானே முன்னால நின்னு தாலிய எடுத்து கொடுக்கிறேன்."
மாமா மீது கோபம் பிச்சுண்டு வரும். டாக்டர் ஐ.ஏ.ஸ் ன்னா என்னா கொம்பா?
எதிர் வீட்டு கோமதியும்தான் பெரிசா 'டாக்டர் மாப்பிள, டாக்டர் மாப்பிளன்னு' பீத்திண்டு மூஞ்ச திருப்பிண்டு பெங்களூருக்கு குடித்தனம் போனா. எட்டு மாசம் தாங்கல..... தனியா டாக்சில வந்து இறங்கினா. பாவம்... அழுது அழுது முகமெல்லாம் வீங்கி.... என்ன எழவோ. 'டி..மஞ்சு... கோமதி கத தெரியுமோடி? அவ.....'. அம்மா தொடங்கும் முன்னே 'ஸ்டொப் இட் மா. டோண்ட் டெல் மி' ணு சொல்லி கட் பண்ணிட்டேன். பொம்மனாட்டிக்குள்ள இருக்திற வலியையும் வேதனையும் ஒரு வேடிக்கையா பார்க்கிற சமூகம்.... நிராகரிக்கப்பட்டவள் அப்படீனு சமூகம் முத்திரை குத்தி மூலயில போட்ட பொம்மையாட்டம் அவ வாழ்க்கை இப்போ.