படித்தோம் சொல்கின்றோம்: பத்திரிகையாளர் எஸ். எம். கார்மேகம் வாழ்வும் பணிகளும் ! இலங்கை மலையக மக்களின் குரலாக ஒலித்தவரின் சேவைகளைப் பேசும் நூல் !! - முருகபூபதி -
சமூகத்திற்காக பேசுவதும், சமூகத்தை பேச வைப்பதுமே பத்திரிகையாளர்களினதும் படைப்பாளிகளினதும் பிரதான கடமை. அந்தவகையில் இலங்கையில் வீரகேசரி நாளிதழில் நீண்டகாலமும் பின்னர் தமிழ்நாட்டில் தினமணி நாளிதழில் பல வருடங்களும் பணியாற்றியவரான எஸ். எம். கார்மேகம் அவர்களின் வாழ்வையும் பணிகளையும் தொகுத்து ஆவணப்படுத்தியிருக்கும் இந்த நூலை வெளிக்கொணர்ந்துள்ள ஊடகம், பொது வாழ்க்கை சார்ந்து அயராமல் இயங்கிவரும் எச். எச். விக்கிரமசிங்க பாராட்டுக்குரியவர்.
இந்த நூல் மூன்று பகுதிகளாக அமைந்திருக்கிறது. கார்மேகம் அவர்களை நன்கறிந்த பலரது நினைவுப்பகிர்வு முதல் பகுதியாகவும், அஞ்சலிக்குறிப்புகள் சார்ந்த பகிர்வு இரண்டாவது பகுதியாகவும், ஒளிப்படங்களின் தொகுப்பாக மூன்றாவது பகுதியும் இடம்பெற்றிருக்கின்றமையால், இந்நூல் கார்மேகம் அவர்களின் வாழ்க்கைக்குறிப்புகள் என்பதற்கும் அப்பால் சென்று, இலங்கையின் அரசியல் பொருளாதார சமூக மாற்றங்கள் குறித்தும், இலங்கைப் பொருளாதாரத்தில் கூடுதல் அந்நியசெலாவணியை ஈட்டித்தந்த மலையக இந்திய வம்சாவளி மக்களின் முன்னேற்றத்தில் கார்மேகம் அவர்களின் வகிபாகம் எத்தகையது? என்பது பற்றியும் விரிவாக விளக்கியிருக்கிறது.
இந்நூலுக்கு தமிழ்நாடு கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் அணிந்துரையும், முன்னுரையை பத்திரிகையாளர் இராஜநாயகம் பாரதியும், வெளியீட்டுரையை நூலின் தொகுப்பாளர் எச். எச். விக்கிரமசிங்கவும் எழுதியுள்ளனர். முதல் பகுதியில் இங்கிலாந்தில் வதியும் விரிவுரையாளர் மு. நித்தியானந்தன் முதல் அவுஸ்திரேலியாவில் வதியும் கார்மேகம் அவர்களின் செல்வப்புதல்வி கலை, இலக்கிய ஆர்வலர் திருமதி கனகா கணேஷ் வரையில் மொத்தம் 45 பேர் எழுதியிருக்கின்றனர்.