
கிட்டத்தட்ட 500-600 ஆசிரியர்கள், சடுதியாக, ஹட்டன் கல்வி வலயத்தில், ஜுன்-12, 2023முதல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காரணங்களில் பிரதானமானது, சமரசங்களுக்கு கட்டுப்படாத அல்லது அடிவருடித்தனங்களுக்கு ஆட்படாத, மலையக ஆசிரிய ஒன்றியம் போன்ற நடுநிலை ஆசிரிய தொழிற்சங்கங்கள், ஆசிரிய இடமாற்ற சபையில் இருந்து அகற்றப்பட்டது என்பது முதற் காரணமாக இருக்கின்றது. இரண்டாவது, மேற்படி ‘சிதைப்பு’ படலமானது, மலையகத்தை சார்ந்தவர்களினாலேயே முன்னெடுக்கப்பட்டு அரங்கேற்றப்படுமாயின் - அது இன்னமும் கன கச்சிதமாக சோபிப்பதாய் அமைந்துவிடும் என்ற எண்ணப்பாடு சம்பந்தப்பட்டவர்களிடம் ஆழ வேரூன்றி இருந்தமையும் காரணமாகின்றது.
மேற்படி பின்னணியிலேயே, கிட்டத்தட்ட 29 குற்றச்சாட்டுகளை தன்மீது சுமந்திருந்தாலும் மலையகத்தை சேர்ந்த பெ.ஸ்ரீதரன் அவர்கள் ஹட்டன் கல்வி வலயத்தின் பணிப்பாளராக மீண்டும் மத்தியால் நியமிக்கப்படுகின்றார். 2016-2021 காலம் வரை ஹட்டன் கல்வி வலயத்தில், பணிப்பாளராய் ஏற்கனவே, பணி புரிந்த பெ.ஸ்ரீதரனின் காலப்பகுதியிலேயே, அதிக அளவிலான, திட்டமிடப்பட்ட, மாணவ இடைவிலகல் ஹட்டன் வலயத்தில் காணப்பட்டது என்ற பாரிய உண்மை போக, இதன் காரணமாய் சில மாணவ மணிகள் தற்கொலைக்கும் முயன்றிருந்தார்கள் என்பது போன்ற தீவிர குற்றச்சாட்டுக்கள் மனித உரிமை குழுவினருக்கும், உயர் கல்வி அதிகாரிகளுக்கும் செய்யப்பட்டிருந்தன. இது, இவ்அதிகாரிக்கு எதிராக செய்யப்பட்ட அனந்த முறைப்பாடுகளில், ஒரு சிலவே, என்ற கூற்றின் உண்மை வெளிப்பாடாகும்.