எல்லோரும் அழுகின்றார்....!
ஏனென்று பார்க்கின்றேன் !
என்னால் பேச முடியவில்லை...!
ஏனென்றால் நான் செத்துவிட்டேன்...!
உறவுகள் எல்லாம்கூடி,
ஒப்பாரி வைக்கின்றார்கள்....!
உருண்டுருண்டு ஒரு மகள்,
“ஓ”வென அலறுகிறாள் !
ஓடிவந்து பிடித்தவரை,
உதறிவிட்டு அடுத்த மகள்,
பாய்ந்தென்மேல் விழுந்தழுது,
பாசத்தைப் பூசுகிறாள் !
சம்மர் சீசனில் நான்,
சந்திக்கச் சென்றபோது,
“அப்பாவுக்கு இந்த வெக்கை,
ஆகாது ; அதனால் உடனே....
அடுத்த ட்ரெயின் பிடித்து,
அனுப்பிவிட்டு வாருங்கள்...
பாவம் இச் சூடுதாங்கும் ,
பக்குவம் அவர் உடற்கில்லை.....!
ஆதலால் பின்னொரு நாள்,
அழைத்தே வந்திடுவோம்....!
அருமையாய் பெற்ற இவள்,
அள்ளித்தந்த அருள்வாக்கு....!
அழுதழுது களைத்த பின்னர்,
ஆசுவாசப் படுத்திக்கொள்ளும்.......!
ஆத்மார்த்த பத்தினியாள் !
அதிகாரம் செலுத்துகின்றாள்.....!
“சிங்கப்பூர் பெட்டையையும்,
கனடா பொடியனையும்,
சீக்கிரமாய் வரச்சொல்லுங்கோ.....!
சுணங்காமல் முடிச்சிடலாம்...!”
காப்பி கொடுத்தபடி கண்ணைத்,
துடைத்துக் காட்டும் மருமகள்!
கூப்பிய கைகொண்டு,
குமுறிக்காட்டும் மகன்!
உரிமையைக் காட்டிக்கொள்ள,
உள்ளபொருள் அனைத்தையுமே,
ஒதுங்கவைத்துச் சீர்படுத்தும்
உன்னத மருமகன்கள்!
“எப்போ தூக்குவாங்க…..”
என்று குரல் கவனித்தேன்!
“என்னுயிர் மச்சான் ” என்று,
என்னோடு திரிந்த நண்பர்கள்!
கடைசிமகன் கனடாவில்….
கண்டிப்பாய் வருகின்றானாம்!
சிங்கப்பூர் சின்னப்பொண்ணு,
சிறகுகட்டி வருகின்றாளாம்!
“இண்ணிக்கு தூக்குவது
இதன்மேலே சந்தேகம்….!
கண்ணியமாய் நாளைவந்து,
கண்ணீரை விட்டிடலாம்….!
செத்தவனை நினைத்து அழ,
சிறிதேனும் போட்டால்தான்,
முத்துமுத்தாய் கண்ணீரால்,
முகத்தையே நனைத்திடலாம்!
நேத்துவரை இவன் துட்டில்,
நெஞ்சாரவே குடித்தோம்…!
பாத்தோமா இண்ணிக்கு,
பாடையில ஏறுவான்னு….!
அதையழுத்தி நெனைக்கிறப்போ,
அழுகை பொங்கி வருகுதப்பா!
அதை இங்கே இப்பொழுதே,
அசத்திக் கொட்டிடுவோம்….!”
“அடப்பாவித் துரோகிகளா….!
அப்பப்போ என் பணத்தில்,
அள்ளி வார்த்தோர் என்சாவில்
அழுவதற்கு முடியலையாம்!
ஆண்டவனைக் கெஞ்சுவேன்….
அடுத்தபிறப்பு எடுக்காமல்,
காத்திருப்பேன் இவர்வரும்போ….
காலால் மிதித்துவிட….!
வந்துவிட்டாள் சின்னமகள்….!
வாசல்கேட் வரும்வரையும்,
பேசிப் பேசிச் சிரித்தவள்கண்,
பெய்யிதுமழை எப்படிபார்….?
வளர்கின்ற நாட்களிலும்,
வாயாலே சாதித்தாள்!
புதிதல்ல அவள் அழுகை,
புரிந்தபடியே சிரித்தேன்!
பேரர்கள் இருவர்மட்டும்,
பெரியவர்முன் அழுகின்றார்!
ஆறுதல் சொல்வதற்கு,
அடுத்தவர்கள் அணைக்கும்போ….!
“வீடியோகேம் விளையாட,
வேண்டுமாம் தாத்தாபோன்….”
ஆளுக்கு ஆள் அடித்துவிட்டு,
அந்தவலியில் அழுகின்றார்!
சிங்கப்பூர் மகளுக்கு,
சிங்கிள்டீ கொடுத்தார்கள்!
“இது எனக்கு ஒவ்வாது,
இலங்கைடீ கொண்டுவந்தேன்….”
பாத்து அதை எடுத்துப்,
பக்குவமாய் போட்டுத்தந்தால்,
பசிகூட எடுக்காது,
பலமாய் அழுதிடலாம்!
“ஐயோ கடவுளே….!
அக்கப்போர் இவரைவிட,
குடிகார நண்பர்களின்,
கொள்கை தேவலையே!
சின்னமகன் நம்பருக்கு,
சிங்கப்பூர் மகள் அடித்தாள்!
அடிதடிக்கு நிகராக,
அவர்கள் சண்டையிட்டார்!
அழுவதை நிறுத்திவிட்டு,
அனைவரும் பார்க்கின்றார்!
“போனை”கட் பண்ணிவிட்டு,
பொரிகின்றாள் என்மகளாள்!
“பொண்டாட்டி தங்கைக்கு,
பொருத்தம் பாக்கப் போகணுமாம்!
துஷ்டிக்கு வந்துபோனால்,
தொடரும் பெருந்தீட்டாம்!”
“வாட்சப் வீடியோ”வில்,
வசமாக காட்டும்படி,
கூறுகெட்ட சின்னண்ணக்,
கூ(ழ்)முட்டை பேசுகிறான்….”
போதும் போதுமப்பா,
புரிந்ததப்பா லட்சணங்கள்!
ஏதும் தேவையில்லை,
எமதர்மா சரணங்கள்!
எவரும் வரவேண்டாம்,
இறைவா வரம்தருவாய்!
சுடுகாட்டின் வழிதெரியும்,
சுயமாய் நான் போய் படுப்பேன்!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.