நான் சவுக்கு சங்கரின் அபிமானி அல்லன். அவ்வப்போது அவரது சவுக்கு மீடியாக் காணொளிகளைப் பார்ப்பவன். ஆனால் சனநாயக நாடான இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் தன் கருத்துகளைச் சுயமாக எடுத்துரைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. அவரது கருத்துகளை, அவை எவ்வளவு எதிரானவையாக இருந்தாலும் அவற்றைக் கூறும் உரிமை அவருக்குண்டு. கருத்தைக் கருத்தால்தான் எதிர்க்க வேண்டும். வன்முறையால் அல்ல. எம் போராட்ட வரலாற்றில் கருத்துகளை வன்முறை கொண்டு அடக்கினோம். அதன் விளைவுகளை நாம் அறிவோம்.
சவுக்கு சங்கர் தன் நிறுவனத்தின் செயற்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளார். அவரது வீட்டின் மீது அவரது கருத்துகள் திரிக்கப்பட்டு, துப்புரவுத் தொழிலாளர்கள் சிலரை அவருக்கெதிராகத் திசை திருப்பி அவர்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக சவுக்கு சங்கர் குறிப்பிட்டிருக்கின்றார். சட்டம் தன் கடமையினைச் செய்தால் இதன் உண்மை நிலை வெளிப்படும். உண்மையில் அவரது வீட்டைத் தாக்கியவர்கள் துப்புரவுத் தொழிலாளர்களா அல்லது அப்போர்வையில் வந்த அடியாட்களா என்பதைப் பாரபட்சமற்ற விசாரணைகள்தாம் வெளிப்படுத்தும். நிரூபிக்கும். இச்சந்தேகம் அவருக்கும் இருப்பதாகவும் சவுக்கு சங்கர் தெரிவித்திருந்த அவருடனான நேர்காணற் காணொளியொன்றில் பார்த்தேன்.
சவுக்கு சங்கர் தன் குரலைச் சுதந்திரமாக ஒலிப்பதற்குரிய உரிமை நிலைநாட்டப்பட வேணடும். மீண்டும் அவர் தனக்குப் பிடித்த ஊடகத்துறையில் சுதந்திரமாக ஈடுபடும் நிலை ஏற்படுமென்று எதிர்பார்ப்போம்.
மனித உரிமைக்காகக் குரல் கொடுக்கும் தமிழக் கலை, இலக்கிய & அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் என்ன நிலையினை எடுக்கப்போகின்றார்கள் என்பதை அறிய ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றேன்.