வெற்றியின் இரகசியங்கள் (2): மனத்தின் தன்மைகள்! - அ.ந.கந்தசாமி -
- இலங்கை முற்போக்குத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான அறிஞர் என்னும் அடைமொழியுடன் 'அறிஞர் அ.ந.கந்தசாமி' என்றழைக்கப்பட்ட எழுத்தாளர் அ.ந.கந்தசாமி மானுட வாழ்க்கைக்கு வெற்றியைத்தரக்கூடிய நல்லதோர் உளவியல் நூலொன்றையும், வெற்றியின் இரகசியங்கள், எழுதியுள்ளார். தமிழகத்தில் பாரி நிலையத்தால் , எழுத்தாளர் செ.கணேசலிங்கனின் உதவியுடன் வெளியிடப்பட்ட நூல். இத்துறையில் வெளியான மிகச்சிறந்த நூல்களிலொன்று. அறுபதுகளிலேயே அ.ந.க இவ்வகையான நூலொன்றை எழுதியிருப்பது வியப்பினைத் தருகின்றது. கூடவே அவரது பரந்த வாசிப்பையும் வெளிப்படுத்துகின்றது. அவரது மறைவின்போது அவரது இறுதி மரியாதை நிகழ்வில் , அவரது தலைமாட்டில் இந்நூல் வைக்கப்பட்டிருந்த புகைப்படம் பத்திரிகைகளில் வெளியானது. 'வெற்றியின் இரகசியங்கள்' பதிவுகள் இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. - பதிவுகள்.காம் -
நூல்: வெற்றியின் இரகசியங்கள். - அ. ந. கந்தசாமி - | விற்பனை உரிமை: பாரி நி லை ய ம் 59 பிராட்வே, சென்னை-1. (P A A R N L A Y A M 59, Broadway : Madras-l.) | முதற்பதிப்பு : டிசம்பர்-1966 | விலை ரூ. 5-00 | அச்சிட்டோர்: ஈஸ்வரி பிரிண்டர்ஸ், சென்னை-14.
2. மனத்தின் தன்மைகள்
மனிதனுக்கும் இதர உயிர்களுக்கும் இருக்கும் வேற்றுமை அவனுக்குச் சிந்திக்கத் தெரிந்திருப்பதுதான் என்று கிரேக்க அறிஞன் அரிஸ்டாட்டில் சொல்லியிருக்கிறான், ஆனல் ஒக்ஸ்போர்ட் சர்வகலாசாலையைச் சேர்ந்த பேராசிரியர் ஹம்ப்ரீஸ் போன்றவர்கள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. சிந்தனை மனிதனின் ஏகபோக உரிமையல்ல என்றும் பூனை, நாய், கொரில்லா போன்ற மிருகங்களும் சிந்திக்கவே செய்கின்றன என்றும் இவ்வறிஞர்களில் பலர் பரிசோதனைகள் மூலம் நிரூபித்திருக்கிறார்கள்.
இது எப்படியாயினும் ஒன்றை மட்டும் எவ்ரும் மறுக்க முடியாது. இன்றுள்ள உலகப் பிராணிகள் யாவற்றிலும் அதிகமாகச் சிந்திக்கத் தெரிந்தவன் மனிதன்தான். மனிதனுக்கு அடுத்தபடி கொரில்லாக் குரங்கே அதிகமாகச் சிந்திக்கத் தெரிந்த பிராணி என்று விஞ்ஞானிகள் கூறு கிறார்கள். ஆனால் மனிதனின் சிந்தனா சக்திக்கும் கொரில்லாவின் சிந்தனா சக்திக்கும் எவ்வளவு வித்தியம்? ஒன்று மலை, மற்றது கடுகு, மனிதனின் சிந்தனா சக்தியின் பீடம் மனம் என அழைக்கப்படுகிறது. இந்த மனம் எங்கள் தேகத்தைக் கட்டியாள்கிறதா, அல்லது தேகம் மனதைக் கட்டியாள்கிறதா என்பது பற்றி மனிதன் நீண்டகாலமாக வாதித்து வருகிறான். இந்த வாதத்தில் மிகப் பெரிய தத்துவஞானிகள் பலர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.