சோசலிஷம் எதற்காக?
[1949 மே மாதம் தொடங்கப்பட்ட “மன்த்லி ரிவ்யூ” என்ற பத்திரிகையின் முதல் இதழில் வெளியான கட்டுரை]
பொருளாதார, சமூகப் பிரச்சினைகளில் வல்லுனராக இல்லாத ஒருவர் சோசலிஷம் என்ற பொருள் பற்றிக் கருத்துத் தெரிவிப்பது சரியானதா? பற்பல காரணங்களினால் சரியானது என்றே நான் நம்புகிறேன்.
விஞ்ஞான அறிவுக் கண்ணோட்டத்திலிருந்து முதலில் இந்தப் பிரச்சினையை நோக்குவோம். வானியலுக்கும் பொருளாதாரத்துக்கும் இடையில் சாராம்சமான நடைமுறை ரீதியான வேறுபாடுகள் எதுவும் இல்லை என்பதுபோலத் தோன்றலாம்: இரு துறைகளையும் சார்ந்த விஞ்ஞானிகள் ஒரு வரம்புக்குட்பட்ட தொகுப்பில் அடங்கிய நிகழ்வுகளுக்கு இடையேயான பரஸ்பரத் தொடர்பினைக் கூடுமானவரைத் தெளிவாகப் புரிந்து கொள்ளும் பொருட்டு, அந்த நிகழ்வுகளின் தொகுதிக்குப் பொதுவாக ஏற்றுக் கொள்ளத் தக்க விதிகளைக் கண்டறிய முயல்கிறார்கள். ஆனால் எதார்த்தத்தில் அத்தகைய நடைமுறை ரீதியான வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன. பொருளாதாரத் துறையை எடுத்துக் கொண்டால், பொருளாதார நிகழ்வுகள் பெரும்பாலும் அனேகக் காரணிகளால் பாதிக்கப்படுகின்றன. அக்காரணிகள் ஒவ்வொன்றையும் தனித்தனியே மதிப்பீடு செய்வது மிகவும் கடினம் ஆகும். இத்தகைய சூழ்நிலை, பொருளாதாரத் துறையில் செயல்படும் பொதுவான விதிகளைக் கண்டறியும் பணியைச் சிக்கலாக்கியுள்ளது. அதோடுகூட, மனித வரலாற்றில், நன்கு அறியப்பட்ட நாகரிகக் காலப்பகுதி என்று சொல்லப்படுகின்ற காலந்தொட்டு இன்றுவரை நாம் சேர்த்து வைத்துள்ள அனுபவத்தின்மீது பெருமளவு செல்வாக்குச் செலுத்திய, கட்டுப்படுத்திய காரணிகள் முற்றாகப் பொருளாதார இயல்பு கொண்டவையே அன்றி வேறல்ல. எடுத்துக்காட்டாக, வரலாற்றில் இடம்பெற்றுள்ள பெரும் பேரரசுகளில் பெரும்பாலானவை போர் வெற்றிகளாலேயே நிலைபெற்றுள்ளன. வெற்றி பெற்ற மக்கள், வெற்றி கொள்ளப்பட்ட நாட்டின் சிறப்புரிமை பெற்ற வர்க்கமாக சட்ட ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தம்மை நிலைநிறுத்திக் கொண்டனர். அந்நாட்டு நிலங்களின் மீதான ஏகபோக உரிமையை தமக்கென அபகரித்துக் கொண்டனர். தங்களுடைய ஆட்களையே அந்நாட்டில் மதக் குருக்களாய் நியமித்தனர். அம்மதக் குருக்கள் கல்வியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, சமுதாயத்தில் நிலவிய வர்க்கப் பிரிவினைகளை நிரந்தர சமூக அமைப்புகளாக மாற்றிவிட்டனர். அந்நாட்டு மக்கள் தமது சமுதாய நடவடிக்கைகளில் பின்பற்றக்கூடிய சமூக மதிப்புகளின் கட்டமைப்பை உருவாக்கினர். மக்கள் பெரும்பாலும் தங்களை அறியாமலேயே அதன்படி வழிநடத்தப்பட்டனர். ஆனால், தார்ஸ்டெயின் வெப்லென் (Thorstein Veblen) அவர்கள், மனிதகுல வளர்ச்சியில் ”கொள்ளைசார்ந்த காலகட்டம்” (predatory phase) என்று அழைக்கிற நேற்றைய வரலாற்று மரபை நாம் எங்கேயும் உண்மையிலேயே விட்டொழித்ததாகத் தெரியவில்லை. அந்தக் காலகட்டத்துக்குரிய அறியக்கூடிய பொருளாதார உண்மைகள் மற்றும் அவற்றிலிருந்து நாம் தருவிக்க முடிகிற விதிகளும்கூட வரலாற்றின் பிற காலகட்டங்களுக்குப் பொருந்தாதவை ஆகும். சோசலிஷத்தின் உண்மையான நோக்கம், துல்லியமாக, மனிதகுல வளர்ச்சியின் கொள்ளைசார்ந்த காலகட்டத்திலிருந்து விடுபடுவதும், அதனையும் தாண்டி முன்னேறுவதுமே ஆகும். பொருளாதார விஞ்ஞானம் இப்போதிருக்கும் நிலையில் வருங்கால சோசலிஷ சமுதாயம் பற்றி எதுவும் கூற இயலாத நிலைமையே உள்ளது.