- உலக தமிழர் பேரவையின் ஊடக அறிக்கையினை அனுப்பியவர் சுரேன் சுரேந்திரன், உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர். -
உலகத் தமிழர் பேரவை இலங்கையில் வாழும் தமிழ்மக்களையும் ஏனைய குடிமக்களையும் எதிர்வரும் தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் விழிப்புடன் வாக்களித்து தங்களது வரலாற்றுக் கடமையை செய்ய வேண்டும் என ஆணித்தரமாகக் கேட்டுக் கொள்கிறது. அப்படி வாக்களிப்பதன் மூலம் அண்மைக் காலத்தில் ஏற்பட்டுள்ள முற்போக்கான மாற்றங்களையும் வெற்றிகளையும் வலுப்படுத்த முடியும்.
கடந்த சனவரி 8, 2015 இல் நடந்த சனாதிபதி தேர்தல் இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகும். வாக்காளர்கள், சனநாயக விரோத, ஊழல் நிறைந்த, சகிப்புத்தன்மையற்ற மற்றும் அப்போது நிலவிய வன்முறை அரசியல் கலாச்சாரத்தை மிகப் பெரியளவில் நிராகரித்தார்கள். அந்தத் தேர்தல் முடிவு, எந்த ஐயத்துக்கும் அப்பால் நாட்டில் நல்ல மாற்றங்களைக் கொண்டுவந்தது. முற்போக்கான பத்தொன்பதாவது அரசியல் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் சனநாயகத்துக்கான இடைவெளியை விரிவாக்கியது. அதன் மூலம் பேச்சுச் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி மற்றும் சிறுபான்மை சமூகங்கள் ஓரளவாவது அச்சமின்றி வாழ வழி செய்தது. இந்த மாற்றங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டதோடு உலக நாடுகளால் வரவேற்கப்பட்டன. எனவே இந்த வலுக்குறைந்த தொடக்கங்கள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டியது இலங்கையில் வாழும் எல்லாக் குடிமக்களது பொறுப்பான கடமையாகும். இந்த மாற்றங்கள் தலைகீழாகப் போவதற்கு துளியளவு வாய்ப்புக் கூட கொடுக்கக் கூடாது.
தமிழ்மக்களுக்கு அன்றாட வாழ்வியல், மனிதவுரிமை மீறல்கள் போன்ற சிக்கல்கள், காணாமல் போனவர்களது கதி, அரசியல் அதிகாரம் பகிரப்படுத்த வேண்டும் என்பதற்கான அவர்களது சட்டப்படியான வேட்கைகள் போன்றவை அர்த்தமுள்ள வகையில் இன்னமும் தீர்க்கப்படாத நிலை காணப்படுகிறது. நல்லிணத்துக்கான சமிக்கைள் தொடக்கத்தில் காணப்பட்டன. வட - கிழக்கு மாகாணங்களுக்கு சிவிலியன் ஆளுநர்களை நியமித்தல்,
சிறுதொகையான காணிகளை அவற்றின் சொந்தக்காரர்களிடம், மீள்கையளித்தல் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைக்கப்பட்ட சில கைதிகளை விடுதலை செய்தது போன்றவற்றைக் குறிப்பிடலாம். ஓகஸ்டில் நடைபெறுகிற தேர்தலின் பின்னர் முழு நாட்டுக்கும் பலன் தரும் வண்ணம் புரையோடிப் போய்விட்ட தமிழர் தேசிய சிக்கலைத் தீர்க்க முனைபவர்களது கைகளைப் பலப்படுத்தலாம் என்பது எமது நம்பிக்கை.
தமிழர்களது தேசியச் சிக்கலுக்கு தீர்வுகாண்பதற்கு அரசாங்கத்துக்கும் தமிழ்மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கும் இடையில் பொருள் பொதிந்த பேச்சுவார்த்தை தவிர்க்க முடியாதது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது பன்னாட்டு சமூகம் உருப்படியான பாத்திரம் வகிக்கும் என்பது உலகத் தமிழர் பேரவையின் எண்ணமாகும்.
இந்தச் சூழலில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்றப் பிரதிநிதிகள் ஒன்றுக்கு மேற்பட்ட பாத்திரங்களில் செயற்படுகிறார்கள். அவர்கள் தொகுதி மட்டத்தில் மக்களுடைய சிக்கல்கள் பற்றிக் கேட்டறிந்து அவற்றைத் தீர்த்து வைக்க வேண்டும். அத்தோடு ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்தின் சார்பாக அது எதிர்நோக்கும் சிக்கல்கள் பற்றி தெளிவாக பேச வல்லவராகவும், தமிழ்மக்கள் சார்பாக நடைபெறும் பேச்சுவார்த்தைகளின்போது இலங்கை நாடாளுமன்றத்திலும் பல்வேறு பன்னாட்டு அரசுகளோடும் அரச சார்பற்ற அமைப்புகளோடும் தெளிவாக பேச வல்லவராகவும் இருத்தல் வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) தமிழர்களது கவலைகளையும் வேட்கைகளையும் குறைபாடுகளையும் கவனமாகவும் தொடர்ச்சியாகவும் தெளிவாகவும் அனைத்துலக சமூகத்துக்கு எடுத்துரைத்து வருவதாலும் அண்மைக் காலத்தில் நடந்த தேர்தல்களில் அமோக வெற்றி பெற்றதன் மூலமும் தமிழ்மக்கள் மற்றும் இலங்கையில் உள்ள ஏனைய சமூகங்கள், இந்தியா உட்பட அனைத்துலக நாடுகள் போன்றவற்றின் ஒப்புதலையும் நன்மதிப்பையும் பெற்றுள்ளது.
அண்மைக் காலமாக உலகத் தமிழர் பேரவை எங்களது மக்களால் தெரிவு செய்யப்பட்ட ததேகூ ஓடு நெருக்கமாக பணியாற்றி வருகிறது. இந்த கூட்டு முயற்சி ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவை போன்றவற்றோடும் நாங்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளோடும் இராஜதந்திர மட்டத்தில் மேற்கொண்ட சில முயற்சிகளுக்கும் சாதனைகளுக்கும் முக்கிய காரணியாக அமைந்துள்ளது.
எங்களது கூட்டுப் பார்வையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் வாழும் மக்களது நலன்களை பேண வலுவான, கைகண்ட பிரதிநித்துவம் தேவையானது. அது அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல், நீதி மற்றும் நீடித்த நல்லிணக்கம் போன்றவற்றை அடைவதற்கு அதிகளவில் வாய்ப்பளிக்கும்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.