ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டம் ஆயுதமயமாகியபோது , களத்தில் பல விடுதலை அமைப்புகள் தமிழீழ விடுதலைப்புலிகள், தமீழீழ மக்கள் விடுதலைக்கழகம், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஈழப்புரட்சிகர மாணவர் இயக்கம் ஆகிய பிரதான விடுதலை அமைப்புகளுடன் மேலும் பல விடுதலை அமைப்புகள் (அளவில் சிறிய) குதித்தன. விடுதலை அமைப்புகளுக்கிடையில் நிலவிய உள் முரண்பாடுகள் அமைப்புகளுக்கிடையில் ஆயுத மோதல்களை உருவாக்கின. அதே சமயம் பல்வேறு அமைப்புகளும் காலத்துக்காலம் பல்வேறு மனித உரிமை மீறல்களைப்புரிந்துள்ளன. பல்வேறு அரசியற் தவறுகளைப்புரிந்துள்ளன. ஆனால் இவையெல்லாவற்றையும் மீறி விடுதலை அமைப்புகளில் இணைந்த அனைவரும் (ஆண்கள், பெண்கள்) மக்களின் மேல் திணிக்கப்பட்ட அடக்குமுறைகளுக்கெதிராக, உணர்வுபூர்வமாகப்போராடப்புறப்பட்டவர்கள். அடிமையிருளில் அல்லல்பட்டுக்கொண்டிருந்த மக்களுக்காகத் தம் உயிரைக்கொடுக்கத்துணிந்து, போராடுவதற்காகத் தம் வாழ்வை அர்ப்பணித்தவர்கள். போராட்டத்தில் போராளிகள், பொதுமக்கள், மற்றும் பல்வேறு முரண்பாடுகள் காரணமாகப்படுகொலை செய்யப்பட்டவர்கள் என மரணித்த அனைவரையும் நினைவு கூர்வோம்.