- சாந்தி சச்சிதானந்தம் எழுதிய “பலஸ்தீன மக்கள் போராட்டத்திலிருந்து நாம் பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்” -என்னுமிக் கட்டுரை அவரது பிறந்தாள் (ஆகஸ்ட் 14) மற்றும் நினைவுநாள் (ஆகஸ்ட் 27) கருதி மீள்பிரசுரமாக வெளிவருகின்றது. - பதிவுகள் - -
இஸ்ரேல் பாலஸ்தீனியப் பிரச்சினையை எவ்வளவு வாசித்தாலும் நேரில் பார்த்து அறிந்து கொண்டாலும் அதனை விளங்குவது மிகக் கடினம். உண்மையில் நேரில் பார்த்தால் இன்னும் குழப்பம்தான் ஏற்படும். நாங்கள் ஒரு குழுவினர் இஸ்ரேலுக்குச் செல்வதற்கு விசாவுக்கு விண்ணப்பம் கொடுத்தபோது எங்கள் குழுவில் ஒருவர் “ பாலஸ்தீனத்தைப் பார்க்கப் போகின்றேன்” என தனது விண்ணப்பத்தில் எழுதியதால் எங்கள் எல்லோருக்கும் விசா மறுக்கப்பட்டது. பாலஸ்தீனம் என்பது வேறு நாடு என்கின்ற பொருள்படக் கூறிவிட்டோமாம். இதற்கு, பாலஸ்தீனிய தேசிய அதிகாரசபையானது 1994ல் பாலஸ்தீனிய விடுதலை இயக்கத்திற்கும் இல்ரேல் அரசாங்கத்திற்குமிடையிலான ஒஸ்லோ சமாதான உடன்படிக்கையின் பேரில் ஓர் இடைக்கால நிர்வாக அதிகாரமாக உருவாக்கப்பட்டது. அது ஐந்து வருடங்களுக்கு என விதிக்கப்பட்டிருந்தாலும் வேறு உடன்படிக்கைகள் இல்லாத இடத்தில் 2013ல் உத்தியோகபூர்வமாக பாலஸ்தீனிய அரசு என அது பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது. அதன் நிர்வாகத்திற்குப் பொறுப்பாக பாலஸ்தீனிய விடுதலை இயக்கம் இருக்கின்றது. இதற்கு ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் பார்வையாளர் அந்தஸ்து கொடுத்து வைத்திருக்கின்றது. இந்த நிலையில,; பாலஸ்தீனம் என்று வேறாகக் கூறி விட்டோமென்று எங்களைத் தண்டித்தனர் இஸ்ரேலிய அதிகாரிகள். இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு கடைசியாக இஸ்ரேலுக்கு சென்று பார்த்தால்….அதென்ன ஒரு நாடா? பாலஸ்தீனியர்கள் வாழும் மேற்குக் கரை, காஸா நகரங்களைச் சுற்றி மைல்கணக்காக நீளும் இருபதடி உயரச் சுவர்! பாலஸ்தீனியர்கள் சுதந்திரமாக நடமாட முடியாது. அவர்களுக்குப் பயந்து யூதர்கள் வாழும் ஜெருசலேமைச் சுற்றியும் சுவர். நாம் மேற்குக் கரைக்குப் போகப் போகின்றோம் என்றவுடன் எங்களுடன் இருந்த இஸ்ரேலிய நண்பர்கள் தமக்கு அங்கு பாதுகாப்பு இல்லாததால் அங்கு செல்லத் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது எனக் கழன்று கொண்டார்கள். இதுதான் அவர்களுடைய ஒற்றை நாடா? ஏன் எப்படி என்று ஒரே குழப்பம்தான்.
எப்போதும் போலவே இந்தத் தடவையும் காஸா இஸ்ரேல் யுத்தம் ஆரம்பித்ததவுடன் எதற்கு ஆரம்பித்தது என சகலரும் குழம்பினார்கள். மூன்று இஸ்ரேலிய மாணவர்களை ஹமாஸ் குழுவினர் கொலை செய்தனர் என்கின்ற நிறுவப்படாத குற்றச்சாட்டின் பேரிலேயே இவ்வளவு அழிவும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆனால் அதுவும் உண்மையன்று. இதற்குள்ளும் ஓர் நீண்ட கதை உண்டு. ஹமாஸ் இயக்கம் இஸ்ரேலிய அரசுடன் ஆயுதப் போராட்டம் புரிவதற்கென இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்தினால் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். 2006ம் ஆண்டு மேற்குக் கரை மற்றும் காஸாவில் நடந்த தேர்தல்களில், காஸாவில் ஹமாஸ் வெற்றியீட்டி அங்கு அரசாங்கம் அமைத்தது. பாலஸ்தீனிய விடுதலை இயக்கமோ மேற்குக் கரையில் தனது ஆட்சியைத் (அப்படியும் அதனை அழைக்கலாம்) தொடர்ந்தது. ஆயுதங்களைக் களைந்து இஸ்ரேல் அரசுடன் மிதவாதப் போக்குடன் நடந்து கொண்ட பாலஸ்தீனிய விடுதலை இயக்கத்திற்கும் ஹமாஸிற்கும் இடையில் ஓர் முறுகல் நிலை இருக்கத்தான் செய்தது.
காஸாவானது ஒருபுறம் இஸ்ரேலினாலும் மறுபுறம் எகிப்தினாலும் மூன்றாவது புறம் கடலினாலும் சூழப்பட்ட ஒரு நீண்ட மெலிந்த நிலப்பரப்பாகும். ஹமாஸ் பயங்கரவாத இயக்கம் எனத் தீர்மானிக்கப்பட்டு அது ஆட்சியேற்ற நாள் தொடங்கி இஸ்ரேலுக்கும் காஸாவுக்குமான தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. பாலஸ்தீன மக்களை நான்கு சுவர்களுக்குள் அடைத்து சுதந்திரமான போக்குவரத்தும் இல்லாது செய்தால் அவர்களுடைய பொருளாதாரம் எப்படித் தழைப்பது? இதனால், எகிப்திலிருந்து வரும் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரிகளை மட்டும் கொண்டே தனது ஆட்சியினை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஹமாஸிற்கு. சென்ற வருடம் எகிப்தில் இராணுவ ஆட்சிப் புரட்டு நடந்தபின்பு ஆரம்பித்தது பிரச்சினை. இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பிற்கு நட்பாக இருந்த ஆட்சி மாற்றப்பட்டு அமெரிக்க ஆதரவாளராக இருக்கும் ஜெனரல் அப்தல் ஃபட்டா எல் சிசி ஜனாதிபதியானார். அவர் செய்த முதல் வேலைகளில் ஒன்று காஸாவுக்கான பொருள் போக்குவரத்துக்கான தடை விதித்ததுதான். சிரியாவில் நடக்கும் யுத்தத்தினாலும் ஈரானின் மீது மேற்கொள்ளப்பட்டிருக்கும் பொருளாதாரத் தடையினாலும் அவ்விரண்டு நாடுகளுடனான உறவும் ஹமாஸிற்குத் தொலைந்து போயிருந்தன. எகிப்து விதித்த தடையினால் இப்பொழுது அதன் வருமானம் முற்றாகவே இல்லாமல் போயிற்று. முக்கியமாக, அதன் நிர்வாகத்தின் கீழ் பணிபுரிந்த 43,000 அரச அலுவலர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு கையில் காசு இல்லை. இந்த நிர்ப்பந்தங்களினால், பாலஸ்தீனிய விடுதலை இயக்கத்துடன் (பிஎல்ஓ) முழுக்க முழுக்க அதன் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே கருத்தொருமித்த அரசாங்கத்தை அமைக்க முன்வந்தது. இந்த அரசாங்கத்தில் ஒரு ஹமாஸ் உறுப்பினரேனும் அங்கத்துவம் வகிக்கவில்லை. ஹமாஸின் கொள்கைகளுக்கு முரணாக, இஸ்ரேல் அரசினை அங்கீகரித்து ஆயுதங்களைக் களைவது என்பது போன்ற நிபந்தனைகளும் இதில் அடங்கின. அப்படியிருந்தும் இந்த வருடம் ஜுன் மாதம் இது நடந்தது முதல் இஸ்ரேலுக்கு நிலை கொள்ளவில்லை. ஐக்கியப்பட்ட பாலஸ்தீனிய நாட்டைக் குறித்து அது பயப்பட்டது. இதன் மூலம் மேற்குக் கரையிலும் ஹமாஸ் காலூன்றலாம் என அஞ்சியது.
ஹமாஸின் முதலாவது தேவை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதாகும். மேற்குக் கரைக்கு இஸ்ரேலூடாக வரும் பொருட்களுக்கு வரிகளை விதித்து பாலஸ்தீன அரசின் சார்பில் அதன் வருமானத்தை எடுத்தக் கொள்வது இஸ்ரேல் அரசாகும். பாலஸ்தீனத்தின் செலவுகளுக்கான நிதிகளை அது பின்பு வெளியிடுகின்றது. இங்கு ஒரு அரசின் வருமானத்தை அதன் எதிரியாக இருக்கும் அரசு எடுத்து எப்படி அதற்காக செலவு பண்ணுகின்றது என வாசகர்கள் குழம்புவது தெரிகின்றது. ஆனால் குழப்பம் தருவதுதான் மத்திய கிழக்கு நாடுகளின் அரசியலென்பதனால் அதிகம் கவலைப்படாதீர்கள். எனவே, காஸாவிற்கான நிதிகளைக்கொடுக்க வேண்டிய இஸ்ரேல் அதனைக் கொடுக்க மறுத்தது. இந்த இக்கட்டினைப் பார்த்த விட்டு கட்டார் நாடு இந்த சம்பளத்தைக் கட்ட முன்வந்தது. ஆனால் அமெரிக்க அரசாங்கம், பயங்கரவாதிகளுக்கு (அதாவது தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட ஹமாஸ் அரசாங்கத்திற்குப் பணிபுரிந்தவர்கள்) சன்மானம் கொடுப்பது சட்டத்தில் தடை செய்யப்பட்டிருக்கின்றது என கட்டாரிற்கு எச்சரிக்கை விடுத்ததனால் அத்திட்டம் கைவிடப்பட்டது. ஒரு ஐ.நா பிரதிநிதி கட்டாரை இதில் ஈடுபடுத்தாமல் நடுநிலையான அமைப்பின் பிரதிநிதி என்கின்ற வகையில் தான் இதனைக் கொடுப்பதற்கு முன்வந்தார். இஸ்ரேல் பிரதம மந்திரி அவரை வெளியேற்றுமாறு கூவும்போது யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை. இவ்வாறாக, சமாதானமாக மிகப் பவ்வியமாக ஹமாஸ் செய்ய முன்வந்த விடயத்தை இனி அது ஆயுதத்தின் உதவியுடன் செய்வதற்குத் தள்ளப்பட்டது.
இது இஸ்ரேலியர்களின் கொடூரத்தினையும் அமெரிக்க அரசின் கபடத்தனத்தினையும் உலகுக்கு உணர்த்தியது எனலாம். காஸாவின் மீது இஸ்ரேல் நடத்திய குண்டுத்தாக்குதல்களைப் பார்த்து இரசித்து ஆரவாரப்படுவதற்கு தமது மலை முகடுகளில் பிக்னிக் வந்த இஸ்ரேலியர்கள் எவ்வளவு பேர்கள்? ஒரு இளம் பெண் பாராளுமன்ற உறுப்பினர் காஸாவிலுள்ள ஒவ்வொரு ஆண் பெண் பிள்ளையும் கொல்லப்படவேண்டும் என பாராளுமன்றில் உரையாற்றினார். ஆமெரிக்காவின் சிரேஷ்ட அரசியல்வாதிகள் சகலரும் இஸ்ரேல் தனது பாதுகாப்பிற்காக காஸாவினைத் தாக்குவது சரிதான் என்றார்கள்.
உண்மையில் ஹமாஸ{ம் பிஎல்ஓவும் உருவாக்கிய உடன்பாட்டு அரசாங்கம் ஹமாஸினை அதன் ஆதரவாளர்களிடமிருந்து பிரித்தெடுப்பதற்கான ஒரு நல்ல வாய்ப்பு எனலாம். இஸ்ரேல் எல்லைப் புறங்களைத் திறந்து விட்டு சம்பளங்களை வழங்கி ஹமாஸின் கீழிருப்பது போலல்லாமல் இப்பொழுது வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளது எனக் காட்டியிருக்கலாம். ஆனால் இப்பொழுதோ நிலைமை ஹமாஸ் அரசின் கீழ் இருந்ததைவிட மோசமாகி விட்டிருக்கின்றது. ஒவ்வொரு நாளும் பல மணிநேர மின்சாரத்தடை. இதனால் கழிவுகளை சுத்தம் செய்ய முடியாமல் அது வீதிக்கான்களில் மிதக்கின்ற காட்சி. தொழிலகங்கள் மூடப்பட்ட நிலைமை. நோயாளர்கள் எகிப்தின் வைத்தியசாலைகளுக்குப் போக வேண்டுமானால் எல்லைப்புற படையினருக்கு ஆளுக்கு 3000 டொலர் மட்டில் இலஞ்சம் கொடுக்க வேண்டிய அவலம். இனி இந்த நிலைமையை மாற்றவேண்டுமென்று எந்தக் குடிமகனும் அதற்கு என்ன விலையானாலும் கொடுக்கத் தயாராக இருப்பான். ஹமாஸின் ஆதரவுத் தளம் இன்னும் தீர்க்கமாகப் போடப்பட்டு விட்டது.
ஈழப் போராட்டம் ஆரம்பித்த கால கட்டத்தில் இஸ்ரேல் அரசே அதன் அகத்தூண்டுதலாக இருந்தது எனக்கு ஞாபகம். இன்றும் ஈழத்தமிழரை ஆசியாவின் யூதர்கள் என்று பலர் அழைக்கக் கேட்டிருக்கின்றேன். யதார்த்தம் இதனைவிட மாறுபாடாக இருக்க முடியாது. இன்று, எமது நாட்டில் வடக்கில் அரசாங்கம் தமிழ் மக்களின் இனச்சுத்திகரிப்பிற்காகச் செயற்படுத்தும் ஒவ்வொரு திட்டமும் இஸ்ரேலிடமிருந்து கற்றுக்கொண்டதுதான் என்கிறார்கள். அங்கிருக்கும் கோல்டாமெயர் இராணுவக் கல்லுரியில் எமது தளபதிகள் பயிற்றப்படுகின்றனர். எமது பாதுகாப்பு அமைச்சின் அதியுயர் அதிகாரிகளும் அங்கு அடிக்கடி போய் வருகின்றனர். இன்று இஸ்ரேலுக்கெதிராக எமது அரசாங்கம் காத்திரமான அறிக்கைகளை விடாததும் இந்தக் காரணத்தினால்தான். இங்கு தமிழர்களுக்கு நடந்தது போலவே அங்கும் நோர்வே மத்தியஸ்தம் செய்த சமாதான உடன்படிக்கையுடன்தான் பாலஸ்தீனியப் போராட்டம் ஆயுதம் களையப்பட்டு நலிவடைந்தது. அவர்களுடைய வருமானத்தையே இஸ்ரேல் தான் எடுத்து அவர்களுக்காக செலவு செய்யும் உடன்படிக்கையல்லவா அது? ஈழத்தமிழர்கள் யூதர்கள் அல்ல ஐயா. நாம் பாலஸ்தீன மக்களின் போராட்டங்களிலிருந்துதான் எமது பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டியதாக இருக்கின்றது.
அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்
நன்றி: வெளிச்சவீடு இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.