அஞ்சலிக்குறிப்பு: கதைசொல்லிக் கலைஞர் மாஸ்டர் சிவலிங்கம் மறைந்தார்! - முருகபூபதி -
மகாபாரதக் கதையை வியாசர் முதல் ஜெயமோகன் வரையில் பலரும் எழுதியிருக்கின்றனர். ஜெயமோகன் வெண்முரசு என்னும் தலைப்பில் ஆயிரக்கணக்கான பக்கங்களில் தொடர்ந்து எழுதினார். 2014 ஆம் ஆண்டில் விஷ்ணுபுரம் விருது விழா முடிந்து வீடு திரும்பியதும், தனது குழந்தைகளுக்கு மகாபாரதக் கதையைச் சொல்லி, அதில் வரும் பாத்திரங்களின் இயல்புகளையும் விபரித்திருக்கிறார்.
அவர் கதைசொல்லும் பாங்கினால் உற்சாகமடைந்த அவரது குழந்தைகள், " அப்பா, இந்தக்கதையையே இனி எழுதுங்கள்." என்று வேண்டுகோள் விடுத்ததும், அவர் அன்றைய தினமே மகாபாரதக்கதைக்கு வெண்முரசு என்று தலைப்பிட்டு ஒவ்வொரு பாகமும் சுமார் 500 பக்கங்கள் கொண்டிருக்கத்தக்கதாக எழுதினார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் விரும்பிய காவியம்தான் மகா பாரதம்.
இலங்கையில் ஒரு காலகட்டத்தில் மாணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் மகா பாரதக்கதையைச் சொல்லிக்கொண்டிருந்த இரத்தினம் சிவலிங்கம் என்ற இயற்பெயர்கொண்ட மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள் நேற்று முன்தினம் 11 ஆம் திகதி மறைந்துவிட்டார் என்ற துயரச்செய்தி எம்மை வந்தடைந்தபோது மகாபாரதம்தான் மனக்கண்ணில் தோன்றியது. இறுதியாக அவரை கடந்த 2019 ஆம் ஆண்டு எழுத்தாளர் செங்கதிரோன் கோபாலகிருஷ்ணனுடன் சென்று பார்த்தேன். அச்சமயம் அவர் சிறுநீரக உபாதையினால் சிகிச்சைக்குட்பட்டிருந்தார். தொடர்ந்தும் அவரை வருத்த விரும்பாத காலன் தற்போது அவரை கவர்ந்து சென்று, நிரந்தர ஓய்வு கொடுத்துவிட்டான்.