ஆய்வு: முல்லைப் பாட்டில் அகமும் புறமும் -- முனைவர் நா. சுமதி, உதவிப் பேராசிரியர்,,தமிழ்த்துறைத் தலைவர்,,சுவாமி விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஒரத்தூர், விழுப்புரம் -
முன்னுரை
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல குறைவான அடிகளைக் கொண்டு விளங்கினாலும் முல்லைப் பாட்டில் இல்லாத செய்திகளே இல்லை எனலாம். சங்க காலத்தில் வணிகத் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களும் புலமையில் சிறந்து விளங்கினார்கள் என்பதை முல்லைப்பாட்டின் வழி காணலாம். “முல்லை சான்ற கற்பு” என்று கற்புடன் தொடர்புபடுத்திப் பேசப்படும் இத்திணையின் உரிப்பொருள் ‘இருத்தல்’ ஆகும். போர்க் காரணமாகவோ பொருள் தேடும் பொருட்டோ பிரிந்து சென்ற தலைவன் கார்காலத் தொடக்கத்திற்குள் வந்து விடுவதாகக் கூறி பிரிவான். அத்தலைவன் வரும் வரை ஆற்றியிருத்தல் தலைவியின் கடமையாகும். இதுவே முல்லைத் திணையின் சிறப்பாகப் போற்றப்படுகிறது.
நிலம், காலம், பொருள் ஆகிய இயற்கையின் அடிப்படையில் எழும் மனம் உணர்வை முல்லைப் பாட்டு எடுத்துக் கூறுகிறது. அகத்திணை ஒன்றினை முதன்மையாக் கொண்டு அதற்கு இயைபான புறத்திணையும் கொடுத்துப் பாடும் ஓர் அரிய நூலாக முல்லைப் பாட்டு விளங்குகின்றது. புறத்திணையான வஞ்சி முல்லை திணையோடு தொடுக்கப்பட்ட போதிலும்,
மக்கள் நுதலிய அகன்ஐந் திணையும்
சுட்டி ஒருவர்ப் பெயர்கொளப் பெறாஅர் (தொல்.அகத்.நூ.5)
என்னும் அகநூல் மரபைப் பின்பற்றி, பாட்டுடைத்தலைவனின் இயற்பெயரைச் சுட்டிக் கூறாத அப்பொருள் சார்ந்த இலக்கியமாகவே இந்நூல் விளங்குகிறது. முதல், கரு, உரி ஆகியவற்றால் ஒன்றுக்கொன்று தொடர்புடைய முல்லை, வஞ்சி என்னும் இவ்விரண்டு திணைகளையும், நப்பூதனார் தம் முல்லைப் பாட்டில் முல்லை ஒழுக்கமே முதன்மை பெறுகின்றது என்கிறார்.