ஓரிலக்கிய ஆளுமையின் வாழ்வும் பணிகளும்! - கிறிஸ்ரி நல்லரெத்தினம் – மெல்பன் -
- எழுத்தாளர் – ஊடகவியலாளர் - சமூகச்செயற்பாட்டாளர் முருகபூபதிக்கு ஜுலை 13 இல் அகவை எழுபது! அதனையொட்டி வெளியாகும் கட்டுரையிது. முருகபூபதி அவர்களுக்குப் பதிவுகள் இணைய இதழும், வாசகர்களும் தம் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றார்கள். பதிவுகள் இணைய இதழுக்குத் தொடர்ச்சியாகப் பல்லாண்டுகளாகப் பங்களித்து வரும் அவருக்கு இத்தருணத்தில் நன்றியினையும் பதிவுகள் தெரிவித்துக்கொள்கின்றது. - பதிவுகள்.காம் -
இற்றைக்கு எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் , 1951 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 13 ஆம் திகதி, காலைப்பொழுதில் நுரை தள்ளி கரை நனைக்கும் அலையோசையைத் தவிர எங்கும் அமைதி. நீர்கொழும்பு கடற்கரை வீதியில் அமைந்த அந்தத் தொடர்குடியிருப்பில் ஒரு சிறிய வீட்டில் ஒரு ஆண்குழந்தை வெளியுலகை எட்டிப்பார்த்தது, தாயின் கர்ப்பத்தின் சூடு தணிந்து கடற்காற்றின் குளிர்மை தழுவியதால் 'வீல், வீல்' என்று அலறுகிறது. அதன் அழுகுரலோடு அருகே அமைந்த கோயில்களிலிருந்தும் புனித செபஸ்தியார் தேவாலயத்திலிருந்தும் மணியோசை கேட்கிறது. அந்தக்குழந்தையைப் பெற்ற தாயின் தந்தையான தாத்தா, பேரன் பிறந்துவிட்டான் என்பதை பறைசாற்ற, வீட்டின் கூரையில் ஏறித் தட்டும் அதிசயமும் நடக்கிறது. அது அவரது குடும்பப்பின்னணியின் மரபார்ந்த பண்பாட்டுக்கோலம். அந்த ஒலி அயல்வீடுகளுக்கும் கேட்கிறது. அன்று அந்த வீட்டில் பிறந்த குழந்தையின் குரல் பின்னாளில் உலகெங்கும் கேட்கும் என்றோ, அதன் தாத்தா கூரையைத்தட்டி எழுப்பிய பேரோசை போன்று தாயகம் கடந்தும் செல்லும் என்றோ, அந்தத் தாத்தா உட்பட அதனது பெற்றோரும் உற்றார் உறவினரும் அப்போது உணர்ந்திருக்கமாட்டார்கள்!