'தேசபக்திக்கும் இனவாதத்துக்குமிடையிலான எல்லையினை நிர்ணயித்தல்' (Demarcating Patriotism and Racism ) - வ.ந.கிரிதரன் -
'தேசபக்திக்கும் இனவாதத்துக்குமிடையிலான எல்லையினை நிர்ணயித்தல்' (Demarcating Patriotism and Racism ) என்னும் கட்டுரையினை 'சிலோன் டுடே' (Cedylon Today) பத்திரிகையில் அமா ஹெச். வன்னியராச்சி ( Ama H. Vanniarachchy) எழுதியிருக்க்கின்றார். நல்லதொரு கட்டுரை. தற்போதுள்ள சூழலில் அனைவரும் வாசிக்க வேண்டிய கட்டுரை.
இக்கட்டுரை சிங்களக் கவிஞை சந்திரசிறி சுதுசிங்கவின் (Sandarasee Sudusinghe ) புதிதாக வெளியான கவிதைத்தொகுதியான 'எரிந்த சிறகுகள்' ('ஹினி வான்டு பியாபத்' - Gini Wandu Piyapath) பற்றியது.
இக்கட்டுரை இக்கவிதைத் தொகுதியை வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றது.
இக்கவிதைகள் இலங்கையில் இன்னும் நீறு பூத்த நெருப்பாக எரிந்துகொண்டிருக்கும் இனப்பிரச்சினை, பதவிக்காக இனவாதத்தைத் தேசபக்தி என்னும் போர்வையில் பேசும் அரசியல்வாதிகள், யாழ் நூலக எரிப்பு , தீண்டாமை மற்றும் வரதட்சணைச் சமூகக்கொடுமைகள் போன்றவற்றை மிகவும் கடுமையாக விமர்சிக்கின்றது என்பதை இக்கட்டுரைவாயிலாக அறிந்துகொள்ள முடிகின்றது.
பதவிக்காக தேசபக்தி என்னும் போர்வையில் இனவாதம் பேசும் ஆட்சிக்கட்டிலிருக்கும் அரசியல்வாதிகளை 'ஆளும் நரிகள்' என்று கவிஞை வர்ணிக்கின்றார் என்பதையும், அந்நரிகளே சொர்க்கத்தீவின் சீரழிவுக்குக் காரணமென மேலும் அவர் குற்றஞ் சாட்டுகின்றார் என்பதையும் மேற்படி கட்டுரை வெளிப்படுத்துகின்றது.