அஃக்கன்னாவும், தமிழ்ப் பேராசிரியர் ஒருவரின் பெயரும்! - வ.ந.கிரிதரன் -
- அண்மையில் முகநூலில் நானிட்டிருந்த பேராசிரியர் நுஃமானின் பெயர் பற்றிய பதிவும் , அதற்கான எதிர்வினைகளும் இவை. ஒரு பதிவுக்காக இங்கு பதிவு செய்கின்றேன். - வ.ந.கி -
பேராசிரியர் நுஃமான் அவர்கள் தனது பெயரை அஃக்கன்னா பாவித்து எழுதுகையில் அஃக்கன்னாவுக்குரிய தமிழ் இலக்கண விதியைப் பாவிப்பதில்லை (நுஃமான் என்பதற்குப் பதிலாக நுஃகுமான் என்றிருந்தால் அது தமிழ் இலக்கண விதிக்குப் பொருத்தமாக இருந்திருக்கும்) . அது ஏன் என்ற கேள்வியும் எனக்கிருந்தது. தற்போது அதற்கான பதில் அவரது முகநூல் எதிர்வினையொன்றின் மூலம் கிடைத்துள்ளது. 'அடிப்படைத் தமிழ் இலக்கணம்' என்னும் தமிழ் இலக்கண நூலில் அஃக்கன்னா என்னும் எழுத்துக்குரிய இலக்கண விதியையும் குறிப்பிட்டு விட்டு அதே அட்டையில் நுஃமான் என்று போட்டிருந்ததுதான் என் கவனத்தைக் கவர்ந்தது. அந்நூல் மூலம் தமிழ் படிக்கும் எவருக்கும் இக்கேள்வி எழும்.
அண்மையில் எழுத்தாளர் ந.சுசீந்திரன் அவர்கள் தனது பதிவொன்றில் அஃக்கன்னா பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அஃக்கன்னா என்னும் எழுத்தை நுஃமான் அவர்கள் தொடர்ந்தும் வாழ வைத்துக்கொண்டிருப்பதாக அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். அதிலும் நான் என் நுஃமான் பெயர் பற்றிய குழப்பத்தை எதிர்வினையாகக் குறிப்பிட்டிருந்தேன். சுசீந்திரனின் குறிப்புக்கான எதிர்வினையில் நுஃமான் அவர்கள் தான் ஏன் அவ்விதம் இலக்கணத்தவறுடன் தன் பெயரைப் பாவிக்கின்றார் என்பதற்கான காரணத்தைக் குறிப்பிட்டிருக்கின்றார். அது முக்கியமான தகவலென்பதால் அதனைக் கீழே தருகின்றேன்.