யுவான் வாங் (Yuwan Wang-5) சீனக்கப்பலின் இலங்கை வருகை , பிராந்திய மற்றும் பூகோள அரசியற் பின்னணி பற்றியதோர் அவதானிப்பு! - ஜோதிகுமார்
யுவான் வாங் (Yuwan Wang-5) கப்பலின் வருகையுடன், இலங்கையின் மும்முனை கயிற்றிழுப்பு போட்டியானது, புதிய பரிணாமங்களை வெளிப்படுத்தியது. இலங்கையின், டாலர் தேடல் ஏற்படுத்தியிருந்த, எண்ணெய்-எரிவாயுக்கான நீள் வரிசைகளும் (பல கிலோ மீற்றர் நீளங்களில்) மக்கள் அவ்வரிசைகளில் மணிக்கணக்கில் வாடி நின்று, சிலர் அங்கேயே களைத்து வீழ்ந்து இறந்த நிலையும் (18க்கு மேல்)-போக- இன்று இவை ஓரளவு தணிந்து போன நிலையில், மேற்படி கப்பலின் வரவு, இப்போது அதன் அரசியலை முன்நிலை நோக்கி நகர்த்தி, தற்போதைய செய்திகளில் முதலிடத்தை பிடிப்பதாய் இருந்தது. இதற்கு சில தினங்களுக்கு முன்பாவே அமெரிகக்க-சீன தூதுவர்கள் நேரடியாக சந்தித்து, ஒருவர் கையை ஒருவர் பிடித்து குசலம் விசாரித்துக்கொண்ட செய்தியும் வெளிவந்திருந்தது. கப்பலின் வருகையும், அதற்கு முன்னால் வந்த இந்த செய்தியும், ஓரளவு பேசும் பொருளாக சம்பந்தபட்ட வட்டாரங்களில் இருக்கவே செய்திருந்தது.
அமெரிக்கா, சீனத்தை பாவித்து, இலங்கையிலிருந்து, இந்தியாவை, அப்புறப்படுத்தப் பார்கின்றதா? அல்லது குறைந்த பட்சம் இந்திய நலனை இலங்கையில் ஒரு கட்டுக்குள் அடக்கி விட முயற்சிக்கின்றதா? அல்லது இந்தியாவிற்கான ஒரு அழுத்த புள்ளியை இலங்கையில் உருவாக்குவதோடு அதன் நோக்கம் முடிவடைந்து போகின்றதா- என்பது போன்ற பல்வேறு வினாக்கள், இக்கைகுலுக்களின் போது சர்வதேச மட்டத்தில் தோன்றி மறைந்தவைதாம்.
அதாவது, ஒரு பிரதேச கேள்வியானது, ஒரு சர்வதேச கேள்வியை விட முன்னிலை வகிக்கக் கூடுமா, அல்லது இரண்டுமே தொடர்ச்சியாய் தனித்தனி கேள்விகளாக ஜீவிக்க முற்படுமா என்பன போன்ற கேள்விகள் பூதகரமாய் தோற்றம் தர முற்பட்டிருந்த காலம் அக்காலம்.