தொடர் நாவல்: கலிங்கு (2009 -4) - தேவகாந்தன் -
4
“நேத்தே வருவியளெண்டு பாத்துக்கொண்டு இருந்தம்.” என தயாநிதி சொன்னதற்கு தனபாலன் சலிப்போடு சொன்னான்: “நேற்றே வெளிக்கிட்டிட்டன். வரேலாமப்போச்சு. ஒரு பக்கம் சன நெரிசல். சாமான் ஏத்தின மாட்டு வண்டிலுகள் ஒரு பக்கம். ட்ராக்ரர் லாண்ட் றோவருகள் இன்னொரு பக்கம். காருகள் வானுகளெண்டு அதுகள் வேற. வன்னியில உவ்வளவு வாகனங்கள் நிக்கிறது நேற்று ராத்திரித்தான் தெரிஞ்சுது எனக்கு. அதுக்குள்ள பாதையெல்லாம் வெள்ளமும் சேறுமாய்க் கிடக்கு. பிரமந்தனாறு மேவிப் பாயுது ஒரு பக்கத்தால. அதுக்குள்ள மாட்டுப்பட்டு அரக்க ஏலாமல் நிண்டுகொண்டிருக்கு வாகனமெல்லாம். கண்டாவளை, தறுமபுரம், விசுவமடு எங்கயும் வெள்ளம்தான். வெள்ளம் வீடுகளுக்குள்ள ஏறி நிக்குது. இப்ப வந்ததே கடவுள் புண்ணியத்திலதான்.”
“சரியான நேரத்திலதான், தம்பி, வந்தியள். இல்லாட்டி இந்தக் குஞ்சுகளையும் வைச்சுக்கொண்டு என்ன செய்யிறது, எங்க ஓடுறதெண்டு தெரியாம ரா முழுக்க தலை விறைச்சுப்போயிருந்தன்” என்றாள் நாகி.
“அப்பிடி நீங்கள் செய்ததுதான் நல்லம், அன்ரி. வெளிக்கிட்டிருந்தியளெண்டா இந்தச் சனத்துக்குள்ள லேசில தேடிக் கண்டுபிடிச்சிடேலாது.”
வாகனம் மெதுவாக முன்னேறிக்கொண்டிருந்தது.
வண்டில்களும், ட்ராக்ரர்களும், லாண்ட் றோவர்களும் சாமான்களோடு ஊர்ந்து செல்ல, வீட்டுக்குரியவர்களும் அவர்களது குழந்தைகளும் பின்னால் சென்றுகொண்டிருந்தனர். சைக்கிளில் சாமான்களைக் கட்டி சிறுகுழந்தைகளையும் அதில் ஏற்றிக்கொண்டு தள்ளியபடி செல்லும் கணவர்களைப் பின்தொர்ந்து மனைவிகளும் மற்றும் உறவினர்களும். பைகளை தோளில் கொளுவிக்கொண்டு, மூட்டைகளை தலையில் சுமந்தபடி நடந்துகொண்டிருந்தார்கள் பலர். அந்த நெரிசலுள் கார்களும், வான்களும் உள் நுழைய முயன்று உறுமிக்கொண்டு இருந்தன. அவை எரிந்து கக்கிய மண்ணெண்ணெய்ப் புகை காற்றிலெங்கும் கனத்திருந்தது.