மாலை வெயில் திண்ணையில் விழுந்திருந்தது. சின்னப்பா திண்ணையில் ஏற்றி வைத்திருந்த சைக்கிளை படியால் இறக்கி முற்றத்தில் நிற்பாட்டி விட்டு பெடலுக்கு மேலே V வடிவில் சந்திக்கும் உலோகத் தண்டுகளுக்கிடையில் அமுக்கி வைத்திருந்த அழுக்குத் துணியை எடுத்து துடைக்கத் தொடங்கினான். வாயில் சிகரட் புகைந்து கொண்டிருந்தது.
அது திண்ணையில் ஏற்றி வைக்குமளவுக்கு அப்படி ஒரு புது சைக்கிள் இல்லை. ஆனால் முற்றத்தில் நின்றால் அயலிலுள்ள நாய்கள் வந்து சில்லில் மூத்திரம் பெய்து விட்டுப் போகின்றன. அதனால் றிம்மில் பொருத்தியுள்ள கம்பிகள் கறல் பிடித்துப் போகின்றன.
தகர பேணிக்குள்ளிருந்த கொஞ்சத் தேங்காயெண்ணெய்க்குள் போத்தலிலிருந்த மண்ணெணெயில் கொஞ்சம் கலந்தான். மண்ணெணெயின் நாற்றம் மூக்கிலடித்தது. வெள்ளைத்துணியைப் பேணிக்குள் ஒற்றி மட்காட் வளைவுகளைத் துடைக்கத் தொடங்கியபோது பொக்கற்றுக்குள் இருந்த கைத்தொலைபேசி அழைப்பு நெஞ்சில் கிறு கிறு என்று கீச்சம் காட்டியது.
இடக்கையால் அதை எடுக்க தொலைபேசியில் கோமதி
" சின்னா ஒருக்கா ஆஸ்பத்திரிக்குப் போய் வாடா" அவள் இப்படிக் கெஞ்சுவதற்கு ஒரு ராகம் இழுத்தாள்.
“ஏன் உன்ரை புருஷன் எங்கை?"
“கொழும்புக்கு அவர் வான் கொண்டு போய் ஒரு கிழமையா இன்னும் வரேல்லை. அங்கயிருந்து வேற ஒரு ஹயர் வந்ததால கதிர்காம பக்கம் போக வேண்டி வந்திட்டுதாம்”.
“சரி விடு. ஏன் இப்ப ஆஸ்பத்திரிக்கு?
“குட்டித்தம்பிக்கு தொய்வு வந்து முந்தநாள் நான் ஆட்டோவில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக அங்க மறிச்சிட்டாங்கள். இண்டைக்குத்தான் துண்டு வெட்டி விடுவாங்களாம்.”
சின்னப்பா மௌனமாக இருந்தான், அதை புரிந்து கொண்டவள் மேலே தொடர்ந்தாள்
“அதுக்கிடையிலை சாந்திக்கு காய்ச்சல் வந்திட்டுது. அவளை வீட்டை விட்டிட்டு நான் எப்பிடி ஆஸ்பத்திரிக்குப் போவன்?”
சாந்தி கோமதியின் மூத்த பெண்.
"ப்ளீஸ் சின்னா"
இப்படிக் கெஞ்சும் போது கோமதியின் முகத்தை கற்பனையில் கண்டால் பிறகு சின்னப்பா மறுக்க மாட்டான் என்பது அவளுக்குத் தெரியும். அதிலும் மகேஷ் வீட்டிலிருக்கும் போது அங்கு வரமாட்டான் என்பதும் கோமதிக்குத் தெரியும்.
" சரி போறன், எந்த வாட்டு?"
கேட்டுக் கொண்டே தொலை பேசியை தோளை உயர்த்தி காதில் இடுக்கிக் கொண்டு அழுக்குத் துணியை பழையபடி பெடலுக்கு மேலே சொருகி விட்டவன் சைக்கிளை திருப்பிக்கொண்டு படலைக்கு போனான்.
கோமதிக்கு அவனிலும் இரண்டு வயது அதிகம். கோமதியின் திருமணத்தின் பின் சின்னப்பா வேலைக்கு மத்திய கிழக்குக்கு வேலைக்குப் போனான். அந்தப் பணத்தில்தான் மகேஷ் வான் வாங்குவதற்கு கொடுத்திருந்தான். பிறகு கொஞ்சக் காலத்திலேயே மத்திய கிழக்கிலிருந்து திரும்பி வந்து உள்ளூரில் மூன்று நாலு தொழில்கள் செய்து பார்த்து விட்டான். எதிலும் நிலைக்கவில்லை. சற்று முற்கோபம் இருப்பதால், எதிலும் ஒரு தகராறு வந்து விடும். இப்போது சாப்பாட்டுக் கடையொன்றில் காஷியராக வேலை.
ஆஸ்பத்திரிக்கு வெளியே வேப்ப மர நிழலில் சைக்கிளை நிறுத்திவிட்டு வாட்டுக்குப் போய் துண்டு வெட்டிக் கூட்டிக் கொண்டு வந்தவன் பின் கரியரில் குட்டித்தம்பியின் ஆஸ்பத்திரி உடுப்பு பையை சொருகியபடி
" ஏறு " என்றான்.
பெடலுக்கு மேலே இருந்த அச்சில் காலை வைத்து ஏறி பாரில் இரு கால்களையும் ஒருபுறம் தொங்கப் போட்டபடி இருந்தான் குட்டித்தம்பி. அவனுக்கு எட்டு வயதிருக்கும்.
சைக்கிள் வேகம் எடுக்கத் தொடங்கியபின் "உனக்கு இப்ப எல்லாம் சுகம் தானே?" என்றான் சின்னப்பா.
"ம்" என்று விட்டுப் பேசாதிருந்தான் குட்டித்தம்பி.
"வாயத் திறந்து சொல்லேன்"
கோமதியின் புருஷனும் மகேஷும் ஒரு உம்மாண்டி. இவனும் அவன் சாங்கம்தான்.
"ஓம் இப்ப சுகம்" தயங்கியபடி பதில் வந்தது.
கோமதியின் கணவன் மகேஷுடனான உறவில் விரிசல் வந்தது சின்னப்பாவின் திருமணம் என்னும் அரைகுறை நாடகம் நடந்த பிறகுதான். கோமதிதான் மகேஷின் தங்கைக்கு சின்னப்பாவை கட்டிக் கொடுக்க ஏற்பாடுகள் எல்லாம் செய்து கொண்டிருந்த வேளை திருமணத்துக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் தங்கை வேறொருவனை விரும்பியதையறிந்து மகேஷ் திருமணத்தை நிறுத்தினான். இதன் பிறகு அவர்கள் வாழ்வினின்றும் முடிந்த வரை ஒதுங்கினான் சின்னப்பா.
மாலை நேரமாதலால் போக்குவரத்து அதிகமாகி, வாகனங்கள் அவ்வப்போது தெருப் புழுதியை கிளப்பிச் சென்றன.
"மூக்கை பொத்திக்கொள். புழுதிக்கு திருப்பி தொய்வு வந்தாலும் வந்திடும்"
பேசாமல் மூக்கை ஒருகையால் பொத்திக் கொண்டான் குட்டித்தம்பி.
சின்னப்பாவின் சைக்கிள் இன்னும் வேகமெடுத்தது.
மருந்துக்கு கடை வளைவைத் தாண்டி அருகிலிருந்த மதகடிக்கு வந்ததும் சைக்கிள் தானாக பிரேக் பிடிப்பதைப் போல தெரிந்தது.
பிரேக் றிம்மில் முட்டுகிறது என்று நினைத்துக் கொண்டே வலித்து பெடலை மிதிக்கத் தொடங்கினான்.
அடுத்த அரை நிமிடத்தில் கட கட என்று முன் சில்லில் ஒரு சத்தமும் வந்தது.
இப்போது சைக்கிள் முற்றாக சடன் பிரேக் பிடித்தது போல நிற்க, குதித்து இறங்கி முன் சில்லை பார்த்தான் சின்னப்பா.
குட்டித்தம்பியின் வலக்கால் முழங்காலுக்கு கீழே சைக்கிள் றிம் கம்பிகளுக்கும், போர்க்கிற்குமிடையில் சிக்கியிருந்தது.
வந்த கோபத்தில் குட்டித்தம்பியின் முதுகில் ஒரு அறை விட்டான்.
“ என்னடா வாயிலை என்ன முட்டையே? கால் சில்லுக்கை சிக்கினால் ஒருக்கா கத்தினாலென்ன, மொக்கா"
சில்லுக்குள்ளே கால் போய் அரை நிமிடமாகியும் ஒரு கத்தலோ, குளறலோ இன்றி வாயைத்திறக்காமல் இருந்திருக்கிறான்.
றிம்மின் கம்பிகள் பல உடைந்திருந்தன.
குட்டித்தம்பியின் கால் தசையின் தோலுரிந்து வெள்ளைத்தோல் தெரிந்தது. பிறகு முத்து முத்தாக இரத்தப் பொட்டுகள் தோன்றி தோல் சிவப்பாக மாறியது.
குட்டித்தம்பியின் காலை மெல்ல வெளியே இழுத்தெடுத்த சின்னப்பா, சைக்கிளை அங்கேயே பக்கத்துக்கு கடையில் விட்டு விட்டு குட்டித்தம்பியை ஆட்டோ ஒன்றில் மீண்டும் அந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனான்.
இரண்டு நாட்கள் கடந்தன. மதியம் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஆலடி மகாவித்தியாலயம் நோக்கிப் போனான் சின்னப்பா.
தெருவோரமாக நின்ற வாகை மர நிழலில் சைக்கிளை நிறுத்திவிட்டு சிகரட் ஒன்றை எடுத்து புகைக்க ஆரம்பித்தான். வாகையின் கீழ் விழுந்திருந்த மஞ்சட் பூக்கள் மரத்தை சுற்றியிருந்த நிலத்தை மூடியிருந்தன.
பிறகு கம்பி வேலிக்கு அப்பாலிருந்த மகாவித்தியாலயப் பள்ளி சிறுவர் விளையாட்டு மைதானத்தைப் சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். மதிய இடைவேளை மணியடித்ததும் சிற்றோடைகள் வேகமாய் பாய்ந்து வந்து குட்டைக்குள் விழுவதைப் போல எல்லாக் கட்டிடங்களிலிருந்தும் வரிசையாக வந்த பள்ளிச் சிறுவர்கள் மைதானத்துக்குள் வந்தனர்.
மெல்ல மெல்ல நொண்டியபடி முழங்காலுக்கு கீழே அன்றைக்கு போட்ட வெள்ளை பாண்டேஜ் உடன் குட்டித்தம்பி கடைசியாக வந்தான். மைதானத்துக்கு அருகிலிருந்த சுவர் விளிம்போன்றில் இருந்து மற்றவர்கள் விளையாடுவதை குட்டித்தம்பி பார்த்துக் கொண்டிருந்தான். சின்னப்பாவுக்கு குட்டித்தம்பி மேல் இரக்கம் வந்தது. அன்றைக்கு முதுகில் அடித்தது வேறு நினைவுக்கு வந்தது.
பத்து நாட்கள் கழிந்து மீண்டும் அந்த வாகை மரத்தடியில் நின்றான் சின்னப்பா. வழமைப்படி மணியடித்ததும் பிள்ளைகள் வெளியே ஓடி வந்தனர். இப்போது குட்டித்தம்பி காலில் பிளாஸ்டர்தான் போட்டிருந்தான். மற்றைய சிறுவர்களுடன் விளையாட்டிலும் சேர்ந்து கொண்டான்.
ஒருவேளை கோமதியின் கணவன் வீட்டுக்கு வந்திருப்பான். ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் சென்று பேண்டேஜை மாற்றி பிளாஸ்டர் போட வைத்திருப்பான்.
கீழே நிலத்தில் அன்றைக்கு வாகை பரப்பியிருந்த மஞ்சல் பூக்கள் எதையும் காணவில்லை. அவை முதல் நாளிரவு பெய்த மழையால் அடித்து செல்லப்பட்டிருந்தன.
சின்னப்பாவின் சைக்கிள் முன் சில்லுக்கு போட்டிருந்த புதிய கம்பிகள் வெயிலில் பளபளத்தன. இப்போது அவன் மனதிலும் பாரம் குறைந்து அது துலக்கமாக இருந்தது.
Solomon Yoganantham <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.