சிறுகதை, நாவல் திறனாய்வுப் போட்டி – 2021 முதற் பரிசுபெற்ற கட்டுரை: எழுத்தாளர் குரு அரவிந்தன் சிறுகதைகள் ஓர் அலசல்! - த. நரேஸ் நியூட்டன், கழுபோவிலை, இலங்கை. -
- குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய சிறுகதை, நாவல் திறனாய்வுப் போட்டி – 2021 இல் 14 நாடுகளில் இருந்து வந்த நூற்றுக்கு மேற்பட்ட திறனாய்வுக் கட்டுரைகளில் இருந்து தெரிவாகி முதலாவது பரிசு பெற்ற திறனாய்வுக்கட்டுரை. -
அறிமுகம்
தமிழ் இலக்கிய படைப்புலகில் உலகின் பல பாகங்களிலும் புகழ்பெற்று விளங்கும் எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களுக்கு முதலில் எனது வாழ்த்துக்களையும் அவருடைய தமிழ் இலக்கியயப்பணி மேலும் பல்லாண்டுகள் சிறக்க ஆசிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். எழுத்தாளர் குரு அரவிந்தன் பற்றி தெரியாத தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் இருக்க முடியாது. அதற்கு காரணம் தனது பல்வேறுவிதமான இலக்கியப் படைப்புக்களால் உலகளவில் பிரபல்யம் அடைந்துள்ளதோடு அங்கீகாரமும் பெற்றவர். இவர் யாழ் காங்கேசன்துறை மாவிட்டபுரம் தந்த இலக்கியச் செம்மல். நடேஸ்வராக் கல்லூரி, மகாஜனாக்கல்லூரி, மற்றும் பட்டயக்கணக்காளர் நிறுவனம் போன்றவற்றின் பழைய மாணவர். ஈழத்து மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் பலவற்றில் இவரது படைப்புக்கள் களம்பெற்றுள்ளதோடு பல்வேறு பரிசுகளையும் விருதுகளையும் பெற்று சாதனை படைத்துள்ளவர். நான் படித்த இவரது சிறுகதைத் தொகுப்புக்களில் சில சிறுகதைகளை தேர்வுசெய்து அவைசார்பான எனது ஆய்வை சமர்ப்பிப்பதில் நானும் சிறிதளவு பெருமைப்பட்டுக்கொள்கிறேன்.
சிறுகதைகள், நாவல்கள், ஒலிப்புத்தகங்கள், மேடை நாடகங்கள் மற்றும் சிறுவர் இலக்கியங்கள் போன்ற பல்வேறு படைப்புக்களை தனக்கேயுரிய பாணியில் வாசகர் மனமறிந்து வழங்குவதில் இவருக்கு நிகர் இவர்தான் என்று கூறலாம். இவர் பல்வேறு வகையான படைப்புக்களை வழங்குவதில் முனைப்புடன் செயற்பட்டு வந்தாலும் இக்கட்டுரை இவரது சிறுகதைளின் நான்கை மட்டுமே ஆய்வு செய்வதாக அமைகிறது. ஒரு சிறுகதையை எப்படி எழுதுவது என்பதற்கான ஒழுங்குமுறைகள் பல இலக்கிய கர்த்தாக்களாலும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் ஒன்றுவிடாமல் வாசித்து அவற்றை பின்பற்றி எழுதுகின்ற ஆற்றலை சிறப்பாக வளர்த்து வைத்திருக்கின்றார் என்பது இவரது ஒவ்வொரு சிறுகதையிலும் இளையோடிப் போயிருக்கும் கதையெழுதும் முறைமையிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.