இலங்கை வானொலியிலும் தேசிய தொலைக்காட்சித் திட்டமிடல் குழுவிலும் இயங்கிய கலை, இலக்கிய ஊடகர் திருமதி ஞானம் இரத்தினம் பற்றிய நனவிடை தோய்தல்! - முருகபூபதி -
ஜூலை 17 அவரது 92 ஆவது பிறந்த தினம். அதையொட்டி வெளியாகும் கட்டுரை.
அவுஸ்திரேலியாவில் தமிழ் – கலை – இலக்கிய ஊடகத்துறையில் பெண்களின் வகிபாகம் என்ற கட்டுரையை நான் எழுதத் தொடங்கியபோது, இங்கு எம்மத்தியில் வாழும் மூத்தவர் திருமதி ஞானம் இரத்தினம் அவர்களும் முதலில் நினைவுக்கு
வந்தார்கள். அவருக்கு இம்மாதம் 17 ஆம் திகதி 92 வயது பிறக்கிறது என்ற செய்தியை சிட்னியில் வதியும் எழுத்தாளரும் வானொலி ஊடகவியலாளருமான கானா. பிரபா தெரிவித்தார். அத்துடன் நில்லாமல், தாமதிக்காமல் இன்றைய தினம் ஞானம் இரத்தினம் அம்மையாரின் வாழ்வும் பணிகளும் குறித்துப் பேசுவதற்கு இணையவழி காணொளி அரங்கிற்கும் ஏற்பாடு செய்துவிட்டார். எமது சமூகத்திற்காக கலை, இலக்கிய, ஊடகத்துறையில் அயராமல் பாடுபட்ட ஆளுமைகளை வாழும் காலத்திலேயே பாராட்டி கௌரவிக்கவேண்டும் என்ற அவரது தீராத ஆவல் முன்மாதிரியானது. அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் நான், சிட்னியில் வதியும் திருமதி ஞானம் இரத்தினம் அம்மையாரை அங்கு சென்ற சந்தர்ப்பங்களில் சில தடவைகள்தான் சந்தித்திருந்தாலும், இலங்கையில் அவர் தமது அன்புக்கணவர் மூத்த எழுத்தாளர் இசையறிஞர் இ. இரத்தினம் மற்றும் குடும்பத்தினருடன் வாழ்ந்த வெள்ளவத்தை இல்லத்தில் அடிக்கடி சந்தித்துள்ளேன்.
திருமதி ஞானம் இரத்தினம், இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய வேளையில் அவரது அளப்பரிய சேவையை பாராட்டி இக் கூட்டுத்தாபனத்தின் இயக்குநர் நாயகமான (Chairman) திரு. நெவில் ஜெயவீரவும் பாராட்டியுள்ளார்.
இலங்கை வானொலி கல்விச்சேவைக்கும், அங்கிருந்து வெளியான வானொலி மஞ்சரி இதழுக்கும் பொறுப்பாசிரியராக செயல்பட்டிருக்கும் இவர், சிட்னிக்கு வந்த பின்னர் ஆங்கிலத்தில் எழுதிய நூல்: The Green Light. இலங்கையில் வானொலி ஒலிபரப்புக்கலை தொடர்பாக தமது பசுமையான நினைவுகளை அதில் பகிர்ந்துகொண்டவர். சிட்னியில் நடக்கும் பல்வேறு கலை, இலக்கிய நிகழ்வுகளிலும் உரையாற்றிவந்தவர். 90 வயது கடந்தபின்னரும் இவரது சுவாசத்தில் கலையும் இலக்கியமும் வானொலி ஊடகமும் நிரந்தரமாகியிருக்கிறது.