ஹவாய் தீவுகளில் தமிழர் கலாச்சாரம்! - குரு அரவிந்தன் -
‘இந்துசமுத்திரத்தில் ஒரு முத்து’ என்று எப்படிக் கடற்பயணிகள் இலங்கைத்தீவை வர்ணித்தார்களோ அதேபோலத்தான் சுற்றுலாப் பயணிகள் ‘பசுபிக்சமுத்திரத்தின் பரடைஸ்’ என்று இந்தத் தீவுகளை அழைக்கிறார்கள். இந்த ஹவாய் தீவுகள் எரிமலைக் குளம்புகளால் உருவானவை என்பதை நீங்கள் நம்பமறுக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. சுமார் 2000 மைல்கள் சுற்றாடலில் எந்த நிலப்பரப்பும் இல்லாத ஹவாய் தீவுகள், அமெரிக்காவின் 50 வது மாகாணமாக ஆகஸ்ட் மாதம் 1959 ஆண்டு பிரகடனப் படுத்தப்பட்டது. சுமார் 1500 வருடங்களுக்கு முன்பாக போலிநேஷன் (Polynesian) என்று சொல்லப்படுகின்ற குடும்ப அமைப்பு இங்கே முதலில் உருவானது. முக்கியமாக Samoa, Cook Islands, New Zealand, Easter Island, Hawaii, Tonga, Tuvalu, Wallis and Futuna, Fiji போன்ற இடங்களில் இருந்து கடலில் திசைமாறி வந்து, திரும்பிச் செல்ல வழியில்லாமல் குடியேறியவர்களே இங்குள்ள பழங்குடி மக்களாவார். இங்குள்ள தீவுகளில் சுமார் எட்டுத் தீவுகளே ஓரளவு பெரிய தீவுகளாக, மனிதர் வாழக்கூடியதாக இருக்கின்றன.
1778 ஆம் ஆண்டு ஐரோப்பியரான கப்டன் ஜேம்ஸ் குக் என்ற கடற்பயணிதான் முதன் முதலாக இத்தீவுகளில் கால்பதித்தார். புகழ்பெற்ற பேர்ள்ஹாபர் (Pearl Harbour), உயிர்ப்புடன் இருக்கும் எரிமலைகள் (Valcano Park), தொலைநோக்கி மையம் (Mauna Kea Summit) இந்துக்கோயில், டோல் அன்னாசிப்பழத் தொழிற்சாலை போன்றவற்றைப் பார்க்க வேண்டும் என்ற எனது ஆவலை நிறைவேற்ற பாம்புகளே இல்லாத ஹவாய்க்குப் பயணமானேன். ஹவாயில் உள்ள விமான நிலையத்தை டானியல் கே. இனோஜி சர்வதேச விமான நிலையம் (Daniel K. Inouye International Airport) என்று அழைக்கிறார்கள். சுமார் 22 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இந்த விமானநிலையத்திற்கூடாக வருடாவருடம் பயணிக்கிறார்கள். விமானத்தை விட்டு வெளியே வந்ததும் ஹவாயின் பாரம்பரிய உடையணிந்த, கழுத்திலே பூமாலை அணிந்து, தலையிலே ஒற்றைப்பூ சூடியிருந்த இளம் பெண்கள் எங்களை வரவேற்றார்கள். காதில் விழுந்த முதல் வார்த்தை ‘அலோகா’ என்பதாகும். ‘அலோகா’ ((Aloha) என்றால் வணக்கம், சென்ற இடமெல்லாம் அலோகா சொன்ன போது, எனக்கு ‘அரோகரா’ என்பது போலக் கேட்டது. ஏன் அப்படிச் சொல்கிறார்கள் என்று அதைப்பற்றிப் பின்பு ஆராய்ந்து பார்த்த போது, எங்கள் பண்பாட்டிற்கும் அதற்கும் ஒருவித தொடர்பு இருப்பதை அறிய முடிந்தது.