கவிஞர் அம்பி விடைபெற்றார்! குழந்தை இலக்கியத்திற்கு வளமூட்டிய கவிஞர்! - முருகபூபதி -
அன்புக்கோர் அம்பி என அனைவராலும் விதந்து சொல்லப்பட்ட கவிஞர் அம்பி அவர்கள் நேற்று ( 27 ஆம் திகதி ) இரவு அவுஸ்திரேலியா சிட்னியில் தமது 95 ஆவது வயதில் மறைந்துவிட்டார். தன்னைப்பற்றிய பசுமையான நினைவுகளை எமக்குத் தந்துவிட்டு, விடைபெற்றிருக்கும் கவிஞர் அம்பி அவர்கள் இலங்கையில் வடபுலத்தில் நாவற்குழியில் 17-02-1929 ஆம் திகதி பிறந்தார்.
தனது ஆரம்பக் கல்வியை நாவற்குழி சி.எம்.எஸ் பாடசாலையிலும் பின்னர் உயர் கல்வியை யாழ். பரியோவான் கல்லூரியிலும் தொடர்ந்த அவர், விஞ்ஞான மற்றும் கணித ஆசிரியராக இலங்கையில் பல பாகங்களிலும் பணியாற்றினார். கொழும்பு கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் தமிழ் பாடநூல் ஆசிரியராகவும் பணியாற்றிய அம்பி, 1981 இல் பாப்புவா நியூகினி நாட்டிற்கு பணிநிமித்தம் சென்று அதன்பின்னர் 1992 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தார்.
இளம் பராயத்திலிருந்தே கவிதை, கவிதை நாடகம், சிறுகதை, கட்டுரை, விமர்சனம், ஆய்வு முதலான துறைகளில் அவர் அளப்பரிய பணிகளை மேற்கொண்டிருந்தபோதிலும் தமிழ்கூறும் நல்லுலகில் கவிஞர் என்றே அறியப்பட்டவர்.
ஏறினால் கட்டில் இறங்கினால் சக்கர நாற்காலி. இதுவே அவரது பல வருட வாழ்க்கையாகியிருந்தபோதிலும், தனது முதிய வயதிலும் மெய்நிகர் அரங்குகளில் தோன்றி கருத்துரைத்தார். அம்பி எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினர். அத்துடன் இச்சங்கத்தின் மதிப்பார்ந்த காப்பாளராகவும் இருந்தவர்.