இந்திய வம்சாவளித் தமிழர்கள், இலங்கைத் தமிழர்கள் , நிர்மலா சீதாராமனின் இலங்கை விஜயம் , 200ம் ஆண்டின் செல்திசை? - ஜோதிகுமார் -
Iஅண்மையில் வெளிவந்த, பதிவாளர் நாயகத்தின், சுற்று நிரூபத்தின்படி இந்திய வம்சாவளி தமிழர்கள், இனி இலங்கை தமிழர்கள் என அழைக்கப்படலாம். சுற்று நிருபத்தின் தலைப்பே பின்வருமாறு கூறுவதாய் உளது: “இனத்தினை குறிப்பிடும் பொழுது இந்தியத்தமிழ்… என்பதனை இலங்கைத்தமிழ்… என பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள்…”
சுற்று நிருபத்தின் முதலாவது ஷரத்து விடயத்தினை மேலும் தெளிவாக்குகிறது: “முன்னைய பரம்பரை இரண்டு, (தகப்பன் மற்றும் பாட்டன்), இலங்கையில் பிறந்திருந்தால், தமிழ் மற்றும் சோனகர்கள், இலங்கை தமிழர் அல்லது இலங்கை சோனகர் என அடையாளம் காணப்படல் வேண்டும்.” என்பதாகும்.
“காணப்படுதல் வேண்டும்” என்ற வார்த்தை பிரயோகம் எமது கவனத்தை ஈர்ப்பதாகும். இக் குறித்த சுற்று நிரூபமானது, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் முயற்சியால் மீளப்பெறப்பட்டுள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வெளியிட்ட ஊடக அறிக்கையில் உண்மையிருப்பதாக தெரியவில்லை (அறிக்கை விபரம் :வீரகேசரி 25.10.2023).
ஏனெனில் இலங்கை தொழிலாளர் காங்கிரசிற்கு (அதாவது செந்தில் தொண்டமானுக்கு) பதிவாளர் நாயகத்தால் அனுப்பப்பட்டிருக்கும் கடித்தில், அப்படியே அந்த சுற்று நிரூபம் வாபஸ் பெற்றுள்ளது குறித்து எந்தவொரு கூற்றும் இருப்பதாக இல்லை (25.10.2023). மேலும் இக்கடித பரிமாற்றங்கள், “ஒரே தினத்தில்” நடந்தேறியுள்ளமை, தனியாக குறிப்பிடக்கூடியது (ஏதோ சொல்லி வைத்தாற் போல்). இதே போன்று சுற்றறிக்கை தொடர்பான முதலாவது செய்தி வெளியுலகிற்கு, சுரேஷ் வடிவேலின் அறிக்கைக்கூடாகவே, வெளிவந்தது அநேக சந்தேகங்களை கிளப்பியதாய் இருந்ததும் குறிப்பிடத்தக்கதே.