முன்னுரை
மக்களின் வாழ்வாதரமாக அமைவதும் முதன்மை பெறுவதும் உணவாகும். உணவு வகைகளுள் தானியங்கள் சிறப்பிடம் பெறுகின்றன. இதில் மிகவும் சக்தி வாய்ந்தவையாக இருப்பது சிறுதானியங்கள் ஆகும். சிறுதானிய வகைகளில் மிகவும் பழமை வாய்ந்தவையாக கேழ்வரகு, சாமை, தினை, கம்பு, சோளம். வரகு குதிரைவாலி போன்றவை அடங்கியுள்ளன. சிறுதானியங்களை சங்ககால மக்கள் மிகுதியாக பயன்படுத்தியுள்ளன. அவர்களைப் போல் இன்றையக் காலக்கட்ட மக்களும் மிகுதியாக பயன்படுத்தி வருகின்றன, சிறுதானியங்கள் சங்ககால மக்கள் பயன்படுத்திய உணவு வகைகளில் பெரும்பங்கு வகித்துள்ளன என்பதை சங்க இலக்கியப் பாடல்கள் எடுத்துரைத்துள்ளதை காணமுடிகின்றது. அது மட்டுமின்றி நீதி இலக்கியமான திருக்குறளில் பல்வேறு குறட்பாக்களில் 'தினை' என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளதையும் பார்க்கமுடிகிறது. எனவே. சங்ககாலம் முதல் சிறுதானியங்களை மக்கள் பயன்படுத்தினர் என்பதையும் அறியமுடிகிறது.
சங்க இலக்கியங்களில் சிறுதானியங்கள்
சங்ககால மக்கள் சிறுதானியங்களைச் சோறாக அவித்தும், தின்பண்டமாகவும், மாவாக இடித்து இனிப்பு சேர்த்தும் உண்டுள்ளனர். தினையரிசிச் சோற்றை நெய்யில் பொரித்த இறைச்சியுடன் சேர்த்து உணவாக உண்டனர் என்பதை,
பருஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேலையொடு
குரூஉக்கண் இறடிப் பொம்மல் பெறுகுவிர் (மலைபடு. 168-169)
என மலைபடுகடாம் பாடல் வரிகளின் மூலம் அறியமுடிகிறது.
ஆடு, மாடுகளை மேய்த்தல் தொழிற்புரியும் ஆயர்குலப் பெண்கள் மோர், நெய் ஆகியவற்றை விற்று, பின் கடும்பசியுடன் தன் வீட்டை அடைவாள். அவள் தினையால் ஆக்கிய சோற்றைப் பாலுடன் சேர்த்து உண்பாள் என்பதை பெரும்பாணாற்றுப்படை (பெரும்பாண்.100-103) உணர்த்துகின்றது.
தினைக்கதிர், எள், வரகு ஆகிய உணவுப்பொருட்கள் நிறைந்து காணப்பட்டதை மதுரைக்காஞ்சி (மதுரை.292-293) குறிப்பிடுகின்றது.
முள்வேலியுடைய தோட்டத்தில் ஆடூ தின்று மீதமுள்ள முன்னைக்கீரை இலையைப் பறித்து சாறாக்கி வரகுச் சோற்றுடன் உண்டனர் என்பதினை,
இடுமுள் படப்பை மறி மேய்ந்து ஒழிந்த
குறுநறு முஞ்ஞைக் கொழுங் கண் குற்றடகு
புன்புல வரகின் சொன்றியொடு, பெறூஉம் (புறம். 197:10-12)
என புறப்பாடல் வரிகள் எடுத்துரைக்கிறது.
சிறுதானிய வகைகளுள் வரகு முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு வரகு அரைப்புறுகிறது. அ..தாவது வரகு குற்றப்படுகிறது. இதனால் கிடைப்பது வரகரிசி. கதிரிலிருந்து பெறப்பட்ட வரகினைக் குற்றி அரிசியாக்குகின்றார்கள். அதுவே வரகின் பச்சரிசி. இதை சோறாக்கினால் இது விரைவாக குழைந்துப்போகும். இதனால் இவற்றை தயிருடன் சோத்து உண்டிருக்கின்றனர்.
இதை,
கவைக் கதிர் வரகின் அவைப்புறு ஆக்கல்
தாதுஎ௬ மறுகின் போதொடூ பொதுளிய
வேளை வெண்பூ வெண் தயிர்க் கொளீடு,
ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை (புறம். 215:1-4)
புறப்பாடல் வரிகள் மூலம் அறியமுடிகிறது.
பண்டைய உணவுப் பண்பாட்டில் வரகரிசிச் சோறு முதன்மையாக இடம்பெற்றிருந்ததை ஒளவையின் தனிப்பாடல் திரட்டில் (32-வது வெண்பா) குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் புல்வேலூரைச் சேர்ந்த பூதன் என்பவன் ஒளவைக்கு வரகரிசி உணவளித்த செய்தியைக் காணலாம். அவன் அளித்த விருந்து இவ்வுலகையே பரிசாக வழங்கியதற்கு ஒப்பானதாம். அப்படியென்றால் அந்தளவுக்கு ஒளவைப் பிராட்டிக்கு அவ்வுணவு சுவையானதாக இருந்திருக்கும் என்பதை அறியமுடிகிறது.
மேலும், கரிய அடிப்பகுதியையுடைய வரகுப் பயிர், பெரிய கதிர்களையுடைய தினை, சிறிய கொடியாக வளரும் கொள், அவரை போன்றவை இவ்வூரின் முக்கிய உணவாக மாங்குடி கிழார் புறநானூறு பாடலில் (335) குறிப்பிட்டுள்ளார்.
பாரியின் நாடு கதிர்கள் வளைந்து ஒடியாமல் வரகானது மிகக் காய்ந்து விளைந்தது. அந்த வரகை அறுக்கவும், தினையை அரியவும், கொடி அவரையையும் அறுக்கவும் அந்நாடு ஆரவாரம் உடையதாயிருந்தது என்பதை,
கீழும் மேலும் எஞ்சாமைப் பல காய்த்து
வாலிதின் விளைந்த புது வரகு அரிய
திணை கொய்ய, கல்வை கறுப்ப, அவரைக்
கொழுங்கொடி விளர்க் காய் கோட் பதம் (புறம். 120:8-11)
என பாரிநாட்டின் வளத்தை புகழ்ந்து கபிலர் சிறப்பித்துள்ளார்.
ஒருவர் தினையளவு நன்மையை ஒருவர் செய்தால்கூட அதை பனையளவு கருதவேண்டும் என்று திணையை ஒப்பிட்டு உவமையாக,
தினைத்துணை நன்றி செய்யினும் பனைத்துணையாகக்
கொள்வர் பயன்தெரி வார் (திருக். 104)
என்று பொய்யில் புலவர் திருக்குறளில் குறிப்பிட்டுள்ளார்.
நன்னனது மலைநாட்டு நிலத்தார் அவரை விதைகளையும் மூங்கில் அரிசியையும், நெல்லின் அரிசியையும் கலந்து புளி கரைக்கப்பட்ட உரையிற்பெய்து புளியற்கூழாகக் குழைத்து உட்கொண்டனர் என்பது சங்க இலக்கிய பாடல்கள் விளக்கியுள்ளது.
தொண்டை நாட்டில் முல்லைநில மக்கள் பால் கலந்த தினையரிசி சோறும், வரகரிசி சோற்றுடன் அவரைப் பருப்பு கலந்து செய்து 'கும்மாயம்' என்ற உணவையும் உண்டனர். மேலும், முல்லை நிலத்தைச் சார்ந்திருக்கும் புன்செய் நிலங்களையுடைய சிறிய ஊர்களில் நெல் விளைவதில்லை. அந்நிலங்களில் விளைந்த வரகும் தினையுமாகிய உணவுப் பொருட்களை பொருள் இல்லாதவர்களுக்கு தானமாக வழங்கினர் என்பதினை,
உடை முதல் புறவு சேர்ந்திருந்த
புன்புலச் சீறூர், நெல் விளையாதே; (ஐங். 285:2-3)
மேலும்,
வரகும், தினையும் உள்ளவை எல்லாம்
இரவலம் மாக்களுக்கு ஈயத் தொலைந்தன (ஐங் 261:1-2)
என ஐங்குநுறூறு பாடல் வரிகள் அறியலாகிறது.
கானவா்க்கு அஞ்சாத கொடிய பற்களை உடைய பன்றிகள் மென்மையான தினையை மேய்ந்தது. அத்தகைய வலிய கற்கள் பொருந்திய மலைநாடவன் என்பதை,
சிறுதினை கொய்த இருவி வெண்கால்
காய்ந்த அவரைப் படூ கிளி கடியும்
யாணர் ஆகிய நல்மலை நாடன் (ஐங் 286:1-3)
என ஐங்குநுறூறு பாடல் வரிகள் செப்புகின்றன.
இவ்வாறு பழங்காலம் முதல் இக்காலம் வரை சிறுதானியங்கள் உணவில் முக்கிய பங்கு பெற்று வருகிறது என்பதை அறியமுடிகிறது.
சிறுதானியங்கள்
வரகு
சிறுதானிய வகைகளுள் முக்கியமானது வரகு. இது கோதுமையை விட சிறந்தது. வரகில் இருக்கும் நார்ச்சத்து அரிசி, கோதுமையில் இருப்பதை விட சற்று அதிகமாக காணப்படுகிறது. வரகில் மாவுச்சத்தும் குறைந்த அளவில் காணப்படுவதால் இது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததாக காணப்படுகிறது. இதில் அதிக அளவு புரதச்சத்துக்களும், தாது உப்புக்களையும் கொண்டதாக இருக்கிறது.
மாதவிடாய் கோளாறு உடைய பெண்கள் வரகு சமைத்து உண்பதால் கோளாறுகள் நீங்குகிறது. வரகு சர்க்கரை அளவை குறைக்கிறது. மேலும்,மூட்டு வலியைக் குறைக்கிறது. இதில் புரதம், இரும்புச்சத்து மற்றும் சுண்ணாம்புச்சத்து அதிக அளவில் காணப்படுகிறது.
சாமை
சாமை நெல்லரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்ச்சத்து அதிகம் கொண்டுள்ளது. சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் கொண்டுவர முக்கிய பங்கு வகிப்பது நார்ச்சத்து. சாமையில் இரும்புச்சத்து அளவிட்டால் மற்ற சிறுதானியங்களைக் காட்டிலும் அதிகம். இவை இரத்தசோகை வருவதை தடுக்கிறது. வயிறு கோளாறுக்கு சாமை நல்ல ஒரு மருந்தாக திகழ்கிறது. மேலும் இவை தாதுப்பொருட்களை உடலில் அதிகரித்து உயிரணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துவதில் சாமை பெரும்பங்கு வகிக்கிறது.
கம்பு
இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்றாகும். நம் முன்னோர்கள் காலையில் கம்பை கஞ்சியாக்கி குடித்தனர். சிலர் அரிசியைப்போல வேகவைத்து வடித்து தின்றனர். கம்பு உடல் சூட்டைத் தணிக்கக்கூடியது. மேலும், இவை செரிமானக்கோளாறுகள் நீக்கி நன்கு பசி எடுக்கவைக்கும். வயிற்றுப்புண், வாய்ப்புண்ணை கம்பு குணப்படுத்தும். கம்பு தானியத்தில் அதிக அளவில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, ரைபோபுளோவின், நயாசின் சத்துக்கள், வைட்டமின்கள், தாது உப்புக்கள், மாவுச்சத்து, பி11 வைட்டமின், கரோட்டின், லைசின் போன்ற அமிலங்கள் உள்ளதால் உணவுச் சத்துத் தரத்தில் கம்பு முதலிடம் வகிக்கிறது. அரிசையை விட எட்டு மடங்கு அதிக இரும்பு சத்து கம்பு தானியத்தில் உள்ளது.
சோளம்
சோளத்தில் ஆற்றல், புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, பி-கரோட்டின், 47 மி.கி. தயமின், ரிபோப்ளோவின், நயசின் ஆகிய சத்துக்கள் உள்ளன.
குதிரை வாலி
குதிரைவாலியில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை உண்டு. நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. ஆண்டி ஆக்சிடன்ட் ஆக வேலை செய்கிறது. கோதுமையை விட ஆறு மடங்கு நார்ச்சத்து உள்ளது.
தினை
பழங்காலத்தில் முதலாவதாக பயிரிடப்பட்டு மனிதனால் உபயோகிக்கப்பட்ட தானியவகை தினை. அதுவும் கி.மு.6000-ல் சீனாவில் பயிரிடப்பட்டு உபயோகிக்கப்பட்டு வந்துள்ளது. இது இதயத்தைப் பலப்படுத்தும். பசியை உண்டாக்கும். இதில் புரதச்சத்துக்கள், கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள், நார்ச்சத்துக்கள், மாவுச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் பி, பாஸ்பரஸ், சுண்ணாம்புச் சத்து உள்ளது.
ராகி (௭) கேழ்வரகு
ராகி அரிகி கோதுமையைக் காட்டிலும் சக்தி நிறைந்ததாகும். கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின், கார்போஹைட்ரேட் போன்றவை உள்ளன. இது தவிர பி கரோட்டின், நயசின், ரிபோப்ளேவின் போன்ற சிறிய ஊட்டச்சத்துக்களும், அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளன. ராகி களி உடல் சூட்டை தணிக்கக்கூடியது. ராகி இரத்தத்தைச் சுத்தம் செய்யும்; எலும்பை உறுதிப்படுத்தும்; சதையை வலுவாக்கும்; மலச்சிக்கல் ஒழியும்; அதிக நேரம் பசி தாங்கச் செய்யும்.
சிறுதானியத்தின் பயன்கள்
சிறுதானியங்கள் உடல்நலத்திற்கு தீங்கு விளைக்கும் கிருமிகளை அளிக்கிறது. இவை உடல் வளர்ச்சியை தூண்டுவதோடு உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க தேவையான செராட்டின் உற்பத்திக்கு உதவுகின்றது. பெருங்குடலின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துகிறது. சிறுதானியங்களில் அதிக அளவில் மெக்னீசியம் இருப்பதால் ஆஸ்துமா மற்றும் ஒற்றை தலைவலியை தடுக்கிறது. மேலும், இவை இரத்த அழுத்தத்தை சீராக்குவதால் இதய நோயிலிருந்து பாதுகாக்கிறது.
சிறுதானியங்களில் உள்ள நியாசின் (வைட்டமின்3) இரத்தத்தில் அதிக அளவு கொழுப்பு சேர்வதைத் தடுக்கிறது. சிறுதானியங்களை அன்றாட உணவில் சோத்துக்கொள்வதால் சார்க்கரை நோய் வருவதில்லை. மேலும் இரத்தத்தில் உள்ள சா்க்கரை அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவுகின்றது. சிறுதானியம் பயன்படுத்துவதால் பெண்களுக்கு பித்தப்பையில் கற்கள் வருவதை கட்டுப்படுத்துகிறது. மேலும், இவற்றில் அதிக அளவில் நார்ச்சத்துக் காணப்படுவதால் புற்றுநோய் வருவதைத் தடுக்கிறது. உடல் பருமன் உடையவர்கள் உடல் எடையைக் குறைக்க உதவுகின்றது. எலும்பு வளர்ச்சிக்கும் சராசரி உடல் ஆரரோக்கியத்திற்கும் சிறுதானியங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது.
எனவே, தற்கால உணவு முறையில் பயன்படுத்தப்படும் மைதா, பீட்சா, நூடுல்ஸ் போன்றவற்றை தவிர்த்து, பாரம்பரிய உணவுப் பொருட்களான சிறுதானியங்களைப் பயன்படுத்துவதால் உடல் ஆரோக்கியத்துடன் நோயற்ற வாழ்வை வாழமுடியும் என்பதை அறியமுடிகிறது.
தொகுப்புரை
பண்டையத் தமிழர்கள் மேற்கொண்ட உழவுத்தொழில், நீர்பாசன முறைகள், உணவு பழக்கங்கள் இன்றும் காணப்படுகிறது. ஐவகை நிலத்தில் வாழ்ந்த மக்கள் சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்டு வாழ்ந்துள்ளனர். இவர்கள் பெரும்பாலும் உணவில் இறைச்சியையே பயன்படுத்தியுள்ளனர். ஐவகைநில மக்களின் காட்டு மிராண்டித்தனங்கள் மாறி உணவு வாயிலாகச் சமுதாய உணர்ச்சி வளர ஆரம்பித்த காலம் பல வகையான உணவுப்பொருட்கள் உண்டாக்கி உண்ணும் முறைகள் மாறமாற உணவுடன் சுவையும் நாகரிகமும் வளரத் தொடங்கின. பயிர்தொழில் ஆரம்பித்து வேளாண்துறையில் மிக்க தேர்ச்சி பெற்றனர். நாம் இன்று உண்ணும் உணவுப்பொருட்கள் தோன்றுதலுக்கும் வளர்ச்சிக்கும் வித்திட்டவர்கள் ஐந்நிலமக்களே என்பதில் ஐயமில்லை.
துணை நின்ற நூல்கள்
கதிர் முருகு, மலைபடுகடாம்,சாரதா பதிப்பகம், சென்னை.2016.
முத்து.இராமமூர்த்தி, பெரும்பாணாற்றுப்படை, கௌரா பதிப்பகம்,2005.
ஸ்ரீ சந்திரன், மதுரைக்காஞ்சி, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை,1999.
ஒளை துரைசாமிப் பிள்ளை, புறநானூறு, கழக வெளியீடு, சென்னை. 1986.
கலைச்செல்வி (தொ.ஆ) தனிப்பாடல் திரட்டு, மீனாட்சி பதிப்பகம், புதுக்கோட்டை,1960.
பரிமேலழகம்,திருக்குறள், பூம்புகார் பிரசுரம், சென்னை.1980.
மாணிக்கம், ஐங்குறுநூறு வர்த்தமானன் பதிப்பகம், சென்னை.1999.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.