அண்மையில் இலக்கியவெளியின் சார்பில் எழுத்தாளர் ஐ.சாந்தனுடன் நிகழ்ந்த உரையாடலொன்றின் காணொளியைப் பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அவரை நேர்காணல் கண்டவர்கள் கலாநிதி சு.குணேஸ்வரன் மற்றும் எழுத்த்தாளர் எஸ்.ரமேஷ்.
இவ்வுரையாடலின் ஆரம்பத்தில் ரமேஷ் கேட்ட கேள்வியொன்று என் கவனத்தை ஈர்த்தது. அது எழுத்தாளர் சாந்தனின் ஆங்கிலத் தமிழ்ப்புலமை பற்றியது. இரு மொழிகளிலும் எழுதும் அவரது ஆற்றல் பற்றியது. கேள்வியைக் கேட்கையில் ரமேஷ் அவர்கள் தமிழில் ஆங்கிலத்திலும், தமிழிழும் எழுதும் ஆற்றல் பெற்ற எழுத்தாளர் கே.எஸ்.சிவகுமாரனுக்குப் பின்னர் அவ்விதம் எழுதும் ஆற்றல் பெற்ற ஒருவர் சாந்தனே என்று குறிப்பிட்டிருந்தார். அது தவறானதொரு கூற்று என்பதால் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. எனக்குத் தெரிந்து ஆங்கிலம், தமிழ் இரு மொழிகளிலும் எழுதும் ஆற்றல் மிக்கவராக விளங்கியவர் எழுத்தாளர் அ.ந.கந்தசாமி. அவர் திருக்குறள் பற்றி, அர்த்தசாத்திரம் பற்றியெல்லாம் டிரிபியூன் ஆங்கிலச் சஞ்சிகையில் எழுதியுள்ளார். திருக்குறள் பற்றி அவர் ஆங்கிலத்தில் எழுதியதை ஒரு நூலாகப் போட முடியுமென்று எழுத்தாளர் அந்தனி ஜீவா தனது அ.ந.க பற்றிய 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' கட்டுரையில், தினகரனில் தொடராக வெளிவந்தது, பின்வருமாறு குறிப்பிட்டிருப்பார்:
"ஆங்கில வார இதழான டிரிபியூனில் பணியாற்றிய காலத்தில் ஆங்கிலத்தில் சில ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியதுடன் திருக்குறளைப் பற்றிப் புத்தகம் போடுமளவிற்கு நிறையக் கட்டுரைகள் எழுதியுள்ளார். அ.ந.கந்தசாமியின் ஆங்கில ஆராய்ச்சிக் கட்டுரைகள் காலஞ்சென்ற அறிஞர் ஆபிகாம் கோவூர் போன்ற பகுத்தறிவுவாதிகளின் பாராட்டுதலைப் பெற்றன."
அ.ந.க.வின் ஆங்கில எழுத்துகள் பத்திரிகை, சஞ்சிகைகளில் மறைந்து கிடக்கின்றன. அவை தேடிக் கண்டுபிடிக்கப்பட வேண்டியவை. 'பதிவுகள்' இணைய இதழில் பின்வரும் ஆங்கிலக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன:
1. Tribune, December 4,1965 (SriLanka): From the pages of arthasastra! Hoarders, Blackmarketeers & Smugglers! By A.N.Kandasamy
https://www.geotamil.com/index.php/2021-02-14-02-15-27/2600--tribune-december-41965-srilanka-from-the-pages-of-arthasastra-hoarders-blackmarketeers-a-smugglers-
2. Tribune (Sri Lanka), Oct. 16, 1965 : Valluvar-1! What is unique? Three sided genius. By A.N.Kandasamy
https://www.geotamil.com/index.php/2021-02-14-02-15-27/2601-tribune-oct-16-1965-sri-lanka-valluvar-1-what-is-unique-three-sided-genius-
3. Tribune ( (Sri Lanka) Oct. 23, 1965: Valluvar -2 ON PRINCES and STATECRAFT By A.N.Kandasamy
https://www.geotamil.com/index.php/2021-02-14-02-15-27/2616-valluvar-2-on-princes-and-statecraft-
அ.ந.க பட்டதாரியல்லர். கல்லூரியில் உயர்வகுப்பு சித்தியடைந்தவுடன் படிப்பை நிறுத்திச் சமூக, அரசியல் மற்றும் இலக்கியச் செயற்பாடுகளில் இறங்கியவர். ஆனால் ஆங்கிலத்தில் மிகுந்த புலமை மிக்கவர். அதன் காரணமாகவே இலங்கைத் தகவற் திணைககளத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரிந்தார்.
நவம்பர் 1965இல் வெளியான வசந்தம் சஞ்சிகையில் வெளியான 'தான்தோன்றிக் கவிராயரின் கவிதைகள் Blank Verse ஆ?!' என்னும் அவரது கட்டுரையும் அவரது ஆங்கில இலக்கியப் புலமையினை வெளிப்படுத்தும். அதற்கான இணைப்பு - https://www.geotamil.com/index.php/2021-02-14-02-15-27/7167-blank-verse
அவரது ஆங்கிலப்புலமையினை வெளிப்படுத்தும் சுதந்திரனில் அவர் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்து வெளியிட்ட எமிலி ஷோலாவின் 'நாநா' நாவலின் தமிழாக்கம்.
சாந்தன் இவ்வுரையாடலில் குறிப்பிட்ட இன்னுமொரு விடயமும் என்னைக் கவர்ந்தது. அது தனக்கு ஆங்கிலம், தமிழ் ஆகியவற்றின் இலக்கணம் பெரிதாகத் தெரியவில்லை. வாசிப்பின் பயனாக ஏற்பட்ட பழக்கமே தன்னால் இரு மொழிகளிலும் எழுதும் ஆற்றலைத் தந்தது என்று அவர் குறிப்பிட்டதைத்தான் இங்கு குறிப்பிடுகின்றேன்.
இங்கு சாந்தன் குறிப்பிட்ட மேலுமொரு விடயமும் என் கவனத்தை ஈர்த்தது. அது ஆங்கிலத்தில் எழுதும் தமிழர்கள் தமிழில் சிந்தித்து ஆங்கிலத்தில் எழுதுவது அல்லது ஆங்கிலத்தில் சிந்தித்துத் தமிழில் எழுதுவது பற்றியது. அது தவறானது. மொழிக்கும் சிந்தனைக்கும் தொடர்பில்லையென்பது சாந்தனின் கருத்து. அதற்காதாரமாக அவர் குறிப்பிடுவது மொழி தெரியாது பிறக்கும் ஒருவன் சிந்திப்பதில்லையா என்னும் கேள்வியைத்தான். ஒரு மொழியில் எழுதுவது பழக்கத்தில் வருமொன்று என்பது அவர் கருத்து.
இத்தருணத்தில் ஒரு விடயம் நினைவுக்கு வருகின்றது. அண்மையில் தனது வட அமெரிக்கப் பயணத்தைப்பற்றித் தனது வலைப்பதிவில் எழுதிய எழுத்தாளர் ஜெயமோகன் தனது ஆங்கில உரைகள் பற்றிக் குறிப்பிடுகையில் பின்வருமாறு குறிப்பிட்டிருப்பார்:
"என்ன சிக்கலென்றால் நான் தமிழில் யோசித்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து பேசுகிறேன். ஒரு மொழியிலேயே சிந்தித்தால், அந்த மொழிச் சொற்றொடர்களை அப்படியே சொற்றொடர்களாக எடுத்துப் பயன்படுத்தினால் மட்டுமே இயல்பாக அமையும். அகமொழியாக்கம் என்றால் சொற்றொடர்களில் மூலமொழியின் தன்மை வந்துவிடும். அது பிழையான சொற்தேர்வு, சிறு சிறு இலக்கணச்சிக்கல்கள என நிகழும். எங்காவது சிக்கிக்கொண்டால் அவ்வளவுதான், மொத்தமும் குழம்பிவிடும்."
அடுத்து இன்னுமொரு கேள்வியும் என் கவனத்தை ஈர்த்தது. அது கலாநிதி குணேஸ்வரன் அவரது சிறுகதைகள் பெரும்பாலும் குறுங்கதைகளாக இருப்பதைப் பற்றிக் குறிப்பிடுகையில் குறிப்பிட்டது. அதற்குப் பதிலளித்த சாந்தன் வடிவத்தைத் தான் மையமாக வைத்துக் கதைகளை உருவாக்குவதில்லை. கதைகள் அவற்றைத் தீர்மானிக்கின்றன். ஒருவேளை தன் பொறியியல் துறையின் காரணமாகத் தனக்கு அப்ப்ழக்கம் வந்திருக்கலாம் என்றார்.
அப்பொழுது குணேஸ்வரன் அவ்விதமான குறுங்கதைகளைச் சிறுகதைக்குள் வைப்பதிலும் சில சமயங்களில் சிரமமுண்டு என்று கருத்துப்படக் கூறினார். உண்மையில் உலகச் சிறுகதைப் படைப்புகளில் பல சிறுகதைகள் ஓரிரு பக்கங்களைக் கொண்டவையாக இருப்பதை அவற்றைத்தாங்கி வெளிவரும் தொகுப்புகள் மூலம் அறிய முடியும்.
நம் புதுமைப்பித்தனின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றான , இன்று வரை பேசப்படும் 'பொன்னகரம்' ஓரிரு பக்கச் சிறுகதைதான். சிறுகதையென்றால் குறைந்தது இத்தனை பக்கங்களாவது இருக்க வேண்டுமென்ற கட்டுப்பாடுகள் எவையுமில்லை. ஒரு சம்பவத்தை விபரிப்பதாக அது இருக்கலாம். ஓருணர்வை வெளிப்படுத்துவதாக அது இருக்கலாம். ஓர் எண்ணத்தை வெளிப்படுத்துவதாகக் கூட அதுவிருக்கலாம். இத்தருணத்தில் எழுத்தாளர் அ.ந.கந்தசாமி தனது 'ம்னக்கண்' நாவலுக்கான முடிவுரையில் நாவல் நதியைப் போல் ஆடி, அசைந்து செல்ல வேண்டுமென்றும், சிறுகதை நீர் வீழ்ச்சியைப் போல் இருக்க வேண்டுமென்றும் எழுதியுள்ளது நினைவுக்கு வருகின்றது. சிறுகதை வாசித்து முடித்ததும் வாசகருக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இவை என் கருத்துகள்.
எழுத்தாளர் சாந்தனுடனான உரையாடல் - https://www.youtube.com/watch?v=bhWjr8AtKls
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.