எழுத்தாளர் அ.இரவியின் 'கொற்றவை பற்றிக்கூறினேன்' பெருநாவலை வாசித்தேன். ஆகுதி பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள நாவல். எழுத்தாளர் அ.இரவியின் கடந்தகாலப் படைப்புகளூடு அவரது மண் வாசனை மிக்க , வாசகர்களை ஈர்க்கும் எழுத்து நடை பற்றி அறிந்திருந்தேன்; புரிந்திருந்தேன். அப்புரிதலுடன் இந்நாவலை வாசிக்கத்தொடங்கினேன். பொதுவாக எனக்கு எழுத்தாளர்களின் சுய சரிதைப் பாதிப்புள்ள நாவல்கள் , அதுவும் பெரு நாவல்களென்றால் மிகவும் பிடிக்கும். என் அபிமான எழுத்தாளர்களில் ஒருவரான எம்.டி.வாசுதேவன் நாயரின் நாவல்கள் பலவற்றில் அவரது சொந்த வாழ்வின் பாதிப்புகளிருக்கும், ஃபியதோர் தத்யயேவ்ஸ்கியின் நாவல்களிலெல்லாம் அவரது சொந்த வாழ்வின் அனுபவப் பாதிப்புகள் நிறையவே இருக்கும். டால்ஸ்டாயின் நாவல்களும் இத்தகையவையே. தமிழ் எழுத்தாளர் அகிலனின் 'பாவை விளக்கு' நாவல் அவரது சொந்த வாழ்வு அனுபவங்களை உள்ளடக்கிய நாவலென்று அவரே கூறியுள்ளதை வாசித்திருக்கின்றேன்.
இவ்விதமான சொந்த வாழ்வின் அனுபவங்களின் பாதிப்புகளை உள்ளடக்கிய நாவல்கள் ஒருவகை. இன்னுமொரு வகையோ எழுத்தாளர்களின் சுயசரிதை அனுபவங்களையே பிரதானமாகக் கொண்டு சிறிது படைப்பாற்றல் மிளிரும் கற்பனையையும் தூவிப் படைக்கப்படும் நாவல்கள். இதில் இரவியின் 'கொற்றவை பற்றிக் கூறினேன்' நாவலை இரண்டாவது வகை நாவலாக நான் கருதுவேன். என் 'அமெரிக்கா', 'குடிவரவாளன்' இத்தகைய வகை நாவல்களே. இவ்வகை நாவல்கள் எனக்குப் பிடிப்பதற்கு முக்கிய காரணங்களிலொன்று, என் சொந்த எழுத்தனுபவத்திலிருந்து கூறினால், எழுத்தாளர்கள் தாம் அடைந்த அனுபவங்களை, அவை விளைவித்த எண்ணங்களைத் தாராளமாக , அனுபவபூர்வமாக, உணர்வு பூர்வமாக, மனதொன்றி எழுத முடியும் மட்டுமல்ல, அவ்வகை எழுத்துகளுக்கு அவர்களே முதல் வாசகர்களாகவும் இருந்து விட முடியும் தன்மையால்தான். என் அனுபவங்களைப் பிரதிபலிக்கும் என் நாவல்கள் பலவற்றை நானே மீண்டும் , மீண்டும் விரும்பி வாசிப்பதுண்டு. அவ்வேளைகளிலெல்லாம் என் மனம் அக்காலகட்டங்களுக்கே சிறகடித்துச் சென்று விடும். உள்ளத்தில் இன்பத்தைப் பெருவெள்ளமெனப் பாய வைக்கும். எனவே இவ்வகையான நாவல்கள் வாசகர்களுக்காக எழுதப்படும் அதே சமயம் அவற்றை எழுதும் எழுத்தாளர்களுக்காகவும் எழுதப்படுகின்றன என்பது என் எண்ணம். எவ்விதம் எம் ஒருகாலப்புகைப்படங்கள் எமக்குக் அக்காலகட்டப் பிரதிபலிப்புகளாக இருக்கின்றனவோ அவ்விதமே இவ்வகையான நாவல்களும் ஒரு கால அனுபவ, உணர்வுப் பிரதிபலிப்புகளாக இருந்து விடுகின்றன.
எவ்விதம் மனம் சோர்ந்திருக்கும் தருணங்களில் பாரதியார் போன்றவர்களின் எழுத்துகள் சோர்ந்திருக்கும் உள்ளங்களைத் துள்ளியெழ வைக்கின்றனவோ அவ்விதமே இவகையான சுயசரிதைப் பாங்கான நனவிடை தோய்தல்களாக அமைந்திருக்கும் நாவல்களும் இருந்து விடுகின்றன.
இந்நாவலுக்கான தனது முன்னுரையில் அ.இரவி கூறியிருக்கும் கருத்துகளிலிருந்து இந்நாவலானது ஏற்கனவே வெளிவந்த அவரது 'காலமாகி வந்த கதை'யின் விரிவு என்பதை உணர முடிகின்றது. இது புனைவா அல்லது சுயசரிதையா என்பதைப்பற்றியும் அவர் தன் முன்னுரையில் கூறியிருக்கின்றார்.
மேற்படி நாவல் மூன்று பகுதிகளை உள்ளடக்கியுள்ளது:
1. முதலாம் அத்தியாயத்திற்கு முன்
2. 1- 24 வரையிலான நாவல்
3. இறுதி அத்தியாயத்தின் பின்
முதலாம் அத்தியாயத்திற்கு முன் 1974இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினைப்பற்றியும், அதன் இறுதிநாளன்று காவற் படையினர் கட்டவிழ்த்து விட்ட வன்முறை பற்றியும், அங்கு கதை சொல்லிக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றியும் விபரிக்கின்றது. என்னைப்பொறுத்தவரையில் இதனை முதலாம் அத்தியாயத்திற்கு முன் என்று பிரித்திருப்பதை விட, முதலாம் அத்தியாயமாகவே கொண்டு நாவலை ஆரம்பித்திருக்கலாமென்று தோன்றுகின்றது.
அடுத்த இருபத்து நான்கு அத்தியாயங்களும் கதைசொல்லியின் பால்ய காலத்து அனுபவங்களை, அவர் வாழ்வில் எதிர்பட்ட பல்வேறு ஆளுமைகளை, அவரது குடும்ப உறவுகளை விபரிக்கின்றது. நாவல் முழுவதும் கதை சொல்லியின் தாயார் வியாபித்து நிற்கின்றார். நாவலின் இறுதி அத்தியாயம் வாசிக்கையில் வாசிப்பவர் உள்ளங்களை அதிர வைத்துவிடும் வகையில் எழுதப்பட்டுள்ளது. அது கதை சொல்லியின் தாயாரின் மரணத்தை விபரிக்கின்றது,அதை வாசிக்கையில் நாவலின் தலைப்பான கொற்றவையில் வரும் கொற்றவை யாரென்பது புரிந்துவிடுகின்றது. கதைசொல்லியின் தாயாரே கொற்றவை என்றுணர்ந்தேன்.
- கதாசிரியர் அ.இரவி -
'இறுதி அத்தியாயத்தின் பின்' என்னும் கடைசி அத்தியாயம் நாவலுக்குத் தேவையற்ற ஒன்று. இன்னுமொருவர் , தென்னிலங்கையில் பிறந்து வடகிழக்கை அறியாமல் சிங்கள மக்களுடன் வாழ்ந்த ஒருவர், 83 கலவரத்தைத்தொடர்ந்து யாழ்ப்பாணம் அகதியாகத் திரும்புவதை விபரிக்கின்றது. அவ்விதம் எதற்காக நாவலின் கதைசொல்லியைத் தவிர்த்து இன்னுமொரு கதை சொல்லியின் கதையாக அவ்வத்தியாயத்தை கதாசிரியர் எழுதினாரோ என்று எண்ணினேன். அதற்குப் பதில் 'கொற்றவை பற்றிக் கூறினேன்' நாவலின் கதை சொல்லியின் அனுபவமாக 83 கறுப்பு ஜூலை அனுபவங்களையும் விபரித்து, அதனை நாவலின் இறுதி அத்தியாயமாக எழுதியிருக்கலாம். அவ்விதம் எழுதியிருந்தால் 74 தமிழாராய்ச்சி மாநாட்டில் நடந்த வன்முறையுடன் ஆரம்பித்த நாவல் 83 கறுப்பு ஜூலையில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையுடன் முடிவுறுவதாக இந்நாவல் அமைந்திருக்கும்.
இவ்விதம் நாவல் கட்டமைக்கப்பட்டிருந்தால் அதில் நிச்சயம் முக்கியமானதோர் அர்த்தம் பொதிந்திருக்கும். ஏன்? 74இல் உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டில் நிகழ்ந்த தமிழர்கள் மீதான வன்முறைதான் உரும்பிராய் சிவகுமாரனை ஆயுதமேந்த வைத்துத் தமிழர் ஆயுதப் போராட்டத்தினை ஆரம்பித்து வைத்தது. அதுபோல் 83 கறுப்பு ஜூலையில் தமிழர்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையே இலங்கைத் தமிழர்களின் ஆயுதபோராட்டத்தை உபகண்டப்பிரச்சனையாக உருமாற்றிப் பற்றியெரிய வைத்தது. தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தின் முக்கியமான இரு வரலாற்று நிகழ்வுகள் அவை. இது இந்நாவலை வாசிக்கையில் எனக்கேற்பட்ட எண்ணம். ஏனையோர் எண்ணங்களும் இவ்வாறே இருக்க வேண்டுமென்பதில்லை.
நாவலின் முக்கிய அம்சங்களாக நான் கருதுவது : மண் வாசனையுடன் கூடிய எழுத்து. புகலிடத்தமிழர் ஒருவரின் பால்ய, பதின்ம மற்றும் நடுத்தரப் பருவத்து அனுபவங்களை நனவிடைதோய்தலினூடு விபரிக்கும் எழுத்து. வாசிப்பவர் எவராகவிருந்தாலும் அவருக்கு இன்பத்தை, இழந்த நினைவுகளைப்பற்றிய நனவிடை தோய்தல் தரும் இன், தண் உணர்வுகளைத் தரும் எழுத்து. அவ்வப்போது நூலை எடுத்து அப்பகுதிகளை வாசித்து இன்பமடைய வைக்கும் எழுத்து.
கதாசிரியரின் வயதினையொத்த பருவத்தினர் எவருக்கும் இந்நாவல் தம் வாழ்க்கை அனுபவங்களை விபரித்துச் செல்லுமோர் அனுபவத்தைத்தரும். கோயில் திருவிழாக்கள், அங்கு நடைபெறும் நாதஸ்வர,தவில் கச்சேரிகள், நகரத்துத் திரையரங்குகள்,அங்கு ஓடும் அபிமான நடிகர்களின் திரைப்படங்கள், மாமா போன்ற குடும்ப உறவுகளினுடான சுவையான அனுபவங்கள், வருடம் முழுவதும் அவ்வப்போது பின்பற்றும் பல்வகை விழாக்கள், நம்பிக்கைகளுடன் கூடிய நிகழ்வுகள், படித்த கல்விக்கூடங்கள், அங்கு கற்பித்த ஆசிரியர்களுடனான அனுபவங்கள்... இவ்விதமான அனுபவங்கள் கதாசிரியரின் அனுபவங்கள் மட்டுமல்ல, எல்லோருடைய அனுபவங்களும்தாம். வாசகர்களுக்குத் தம் வாழ்க்கை அனுபவங்களை மீண்டுமொருதடவை அசைபோட வைக்கும் விபரிப்புகளை உள்ளடக்கிய சம்பவங்களை நாவல் உள்ளடக்கியுள்ளது. ஆனால் அவ்வனுபவங்களை உணர்வுபூர்வமாக, சுவையாக, வாசிப்பவர் நெஞ்சங்களை வருடிச்செல்லும் வகையிலான எழுத்தில் வடித்திருக்கின்றார் கதாசிரியர்.
இவ்விதமான புகலிடத்தமிழர் ஒருவரின் நனவிடை தோய்தல் கூடவே இன்னுமொரு விடயத்தையும் எவ்விதப் பிரச்சாரமுமின்றிப் பதிவு செய்கின்றது. அது இலங்கைத் தமிழர்கள் மேல் அவ்வப்போது புரியப்பட்ட அடக்கு , ஒடுக்குமுறைகள், அவற்றாலேற்பட்ட நூலக எரிப்பு, படையினரின் நில அபகரிப்பு போன்ற நிகழ்வுகள், அவை ஏற்படுத்திய உணர்வுரீதியான பாதிப்புகள். இவற்றைப் பதிவு செய்வதன் மூலம் அவற்றை 'கொற்றவை பற்றி கூறினேன்' ஆவணப்படுத்துகின்றது.
இலங்கைத் தமிழர்களின் , குறிப்பாக வட பகுதித்தமிழர்களின் வட்டார வழக்குகளையும் நாவலில் வரும் விபரிப்புகள், உரையாடல்கள் பதிவு செய்திருக்கின்றன, 'அழாப்பி, 'துலைக்கோ', 'நைய்க்க' போன்ற சொற்கள் நிறையவே இந்நாவலில் வருகின்றன. அவைதாம் இந்நாவலுக்கு உயிர்த்துடிப்பைத்தருகின்றன.
ந.செ. என்பவனின் அனுபவமாக விரியும் இறுதி அத்தியாயம் என் வாசிப்புக்கு இடையூறாக, ஒட்டாமலிருக்கின்றது. ந.செ.வின் அனுபவத்தை இன்னுமொரு நாவலாக எழுதலாமென்று தோன்றியது. அதற்குப் பதிலாக ந.செ.வின் அனுபவத்தைக் 'கொற்றவை பற்றிக்கூறினேன்' நாவலின் ஒரு பகுதியாக, அதனைக் கூறும் கதாசரியரின் அனுபவமாக மாற்றி உள்ளடக்கியிருந்தால் இன்றும் சிறப்பாக இருந்திருக்குமென்று தோன்றியது. ஆனால் அதே சமயம் இவ்விதமாக முதல் இருபத்திநான்கு அத்தியாயங்களுடன் ஒட்டாமல் இருந்தாலும், அது 'கொற்றவை பற்றிக் கூறினேன்' நாவலின் தரத்தை எவ்விதத்திலும் சிறுமைப்படுத்தி விடவில்லை.
எவ்விதம் டால்ஸ்டாயின் 'புத்துயிர்ப்பு' நாவலின் முடிவில் வரும் மதமே மனிதரின் அனைத்துப் பிரச்சனைக்கும் தீர்வு என்று முன்வைக்கப்பட்ட கருத்து அதற்கு முன் விரிந்து கிடக்கும் நாவலைச் சிறுமைப்படுத்தவில்லையோ , எவ்விதம் தத்யயேவ்ஸ்கியின் 'குற்றமும் தண்டனையும்' நாவலின் இறுதியில் மானுடரின் பிரச்சனைக்கு மதமே தீர்வு என்று திணிக்கப்படும் கருத்து அதற்கு முன் விரிந்திருக்கும் பெரு நாவலைச் சிறுமைப்படுத்தவில்லையோ, அது போலவே இறுதியில் முன் விரிந்திருக்கும் பெரு நாவலான 'கொற்றவை பற்றிக் கூறினேன்' நாவலையும் , அதன் இறுதியில் அப்பெருநாவலுடன் ஒட்டாமலிருக்கும் ந.செ.வின் அனுபவங்களும் சிறுமைப்படுத்தவில்லையென்று நிச்சயமாகக் கூறலாம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.