ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்(2023)என்ற வ.ந.கிரிதரனின் இரண்டாவது கவிதைத்தொகுதி , புலம்பலைச் சித்தரிக்கும் அட்டைப் படத்துடன் வெளிவந்துள்ளது. சுயகவிதைகள் நாற்பதும் இன்னும் சில மொழிபெயர்ப்புக் கவிதைகளுமாக சுமார் 100 பக்கங்கள்.
குதிரைத் திருடர்களே ! உங்களுக்கொரு செய்தி - மின்னலே ! நீ மின் பின்னியதொரு பின்னலா ? - தனிமைச் சாம்ராஜ்யத்துச் சுதந்திரப் பறவை - இருப்பொன்று போதாது இருத்தல் பற்றியெண்ணி இருத்தற்கு - இப்படி நீண்ட தலைப்புக்கொண்டனவாகவே பெரும்பாலான கவிதைகள் காணப்படுகின்றன.
இயற்கையோடு கவிதைகள் உரையாடுகின்றன.மனித வாழ்வை இணைத்துப் பார்க்கின்றன.உருவ உள்ளடக்க மாற்றங்களுடனான எந்தக் கவிதைப் போக்கையும் இவர் கவிதைகள் வெட்டியோ ஒட்டியோ செல்லவில்லை.சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் எழுதிச் செல்கிறார்.ஒரு கவிதைக்குள் ஒன்பது அர்த்தங்களைத் தேடவேண்டியதில்லை. வார்த்தைகளைப் பின்னிப் பிசைந்து மந்திர ஜாலம் காட்டவுமில்லை. கவிதைகளை சற்று நிதானமாக வாசித்துச் செல்லும்போது மீண்டும் மீண்டும் வாசித்துச் சுகிக்கக்கூடிய வரிகள் நிரம்பிக் கிடக்கின்றன.சில உதாரணங்கள்...
*ஓங்கிய விருட்சங்களுக்குள்
ஒருகோடி பிரிவுகள் ! ஆயின்
ஒற்றுமையாய் ஒருமித்தவை தரும்
தண்நிழல் !"
*காலவெளி நூலகத்தில்தான்
கற்பதற் கெவ்வளவு உள."
* யார் சொன்னது நட்சத்திரங்கள் கொட்டிக்
கிடப்பது
விண்ணில் மட்டும் தானென்று ?
இந்த மண்ணிலும்தான்."
* கோள்கள் , சுடர்களெல்லாம்
குறித்தபடி செல்வதைப்போல்
வாழும் வாழ்வுதனை
என் வாழ்நாளில் வளர்த்துவிடு."
இவரது கவிதைகளை வாசிக்கும்போது இடையிடையே எமது மூத்த கவிஞர்களான தா.ராமலிங்கம் , இ.சிவானந்தன் , தர்மு சிவராமு போன்றோரின் ஞாபகம் வருகிறது.
மொழிபெயர்ப்புக் கவிதைகளில் அதிகமானவை இவர் வாழ்ந்துகொண்டிருக்கும் கனடா கவிஞர்களுடையவைதான்.மொழிபெயர்ப்பை வரிக்குவரி செய்தால்தான் கருத்துப் பிசகாமலிருக்கும் என்றும் தெரிவிக்கின்றார்.
வ.ந.கிரிதரன் பல இலக்கிய உருவங்களையும் கையாள்பவர்.கவனிப்புக்குரிய பல நூல்களத் தந்துகொண்டிருப்பவர்.பல பதிப்பகங்களோடும் படைப்பாளிகளோடும் சம்பந்தமுள்ளவர்.அவர் பணி தொடரட்டும். இது ஒரு பதிவுகள் காம் வெளியீடு. ( தொடர்பு : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )