ஆடைகளின் ஏற்றுமதி எப்படித் திருப்பூரை எப்படியெல்லாம் மாற்றியிருக்கிறது என்பதை யதார்த்தமாக பதிவு செய்திருந்தீர்கள். அரசியல், மக்களின் இயல்பு வாழ்க்கை, பொருளாதாரம் வேகமாக வளரும் ஊரில் அந்த ஊரின் கடைநிலை மனிதர்கள் இடம் மாறவேண்டிய கட்டாயம், மாட்டுக்கறிக்கென இருக்கும் கூட்டம் என்று பலவற்றையும் தொட்டிருக்கிறது இந்த நாவல். பள்ளிகளில் சமசீர் கல்விக்கான புத்தகங்கள் இல்லை என்பதுகூட விடப்படவில்லை. எனக்கு எப்படி இத்தனை விஷயங்களை ஒரே புத்தகத்தில் கோர்த்தீர்கள் என்பது அதிசயமாக இருந்தது.
நைரா என்ற சொல் எனக்குப்புதிது. முதல் அத்தியாயத்தில் ரயில் நிலையத்தில் கறுத்தப்பனையாக நிற்கும் நைஜீரிய மனிதனின் அறிமுகம் நன்றாக இருந்தது. நம் ஊரில் விற்கும் சிவப்பழகு பொருட்களின் விளம்பரங்கள் வெள்ளைத்தோலை விரும்பும் மனதைத்தானே வெட்டவெளிச்சப்படுத்திக்காட்டுகின்றன. கெலுச்சி போன்ற ஆண்கள், பெண்களைப் படி, நல்ல வேலைக்கு போ என்று உற்சாகப்படுத்துபவர்காளாக இருந்தாலும், அவர்கள் சிவகாமி போன்றவர்களுக்கு ஒருவித அபசகுனம் தானே . நம்மவர் அத்தனை கருப்பாகவும், கெலுச்சி போன்றோர் நம் தமிழர்களின் சராசரி நிறத்திலும் இருந்தால், இந்தக்காதலுக்கு ஒரு தடையும் இருந்திருக்காது இல்லையா?
ஒரு கதைசொல்லியாக, அங்கங்கே டைரிக்குறிப்புகளாக இந்தியாவையும், நைஜீரியாவையும் கல்வி, பெண்கள் பாதுகாப்பு, அங்கிருந்த தலைவர்கள், அவர்களைப்பற்றிய விமர்சனங்கள் என்று நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சி நிச்சயம் பாராட்டுதலுக்குரியது.
நைஜீரியா என்ற நாட்டைப் பற்றி ஓரளவு அறிமுகம் உங்கள் நூலின் வாயிலாகக்கிடைத்தது. அங்கும் முருகன் கோயில்களும், தமிழ் பேசும் மருத்துவர்களும் இருக்கிறார்கள் என்பது எனக்குப்புது செய்தி .
நான் அமெரிக்காவில் ஒரு சில ஆண்டுகள் வேலை செய்திருக்கிறேன். கென்யா நாட்டிலிருந்து ஓரிருவர் என்னோடு வேலைப்பார்த்தனர். வெள்ளை இன மக்களைவிட, நம் தமிழ் சமூகத்தோடு அவர்களால் தங்களது, எண்ணங்களையும், கலாச்சாரம் தொடர்பான பகிர்தலையும் எளிதில் செய்ய முடிவதாக எனக்குத்தோன்றுகிறது.
இந்தியாவில் தான் அகதிகளாகட்டும், வேலைக்கென வரும் வெளிநாட்டவர் ஆகட்டும், பயமின்றி இருக்கமுடியும். இந்த நிலை மற்ற நாடுகளில் நிச்சயம் நடக்காத ஒன்று தான்.
காட்சிப்படுத்தும் போது ஒரு வழிச்சாலையில் மனிதத்தலைகளை நட்டுவைப்பதாக சொல்வதும், மிதிவண்டியில் வருபவரை அதிசயமாகப்பார்க்கும் பார்வையாக ரசிக்கவைத்திருந்தீர்கள்.
ஆயத்த ஆடைகள் தயாரிக்கும்போது வரும் உபரித்துணிகளை அடுப்பெரிக்கப் பயன்படுத்தினால் புற்று நோய் வரும் என்பது உங்களின் நூல் வாயிலாக அறிந்துகொண்ட புதியத்தகவல். சாக்கடையாக, சாயத்தநீராக மாறி விட்ட நொய்யலை மீட்டெடுப்பது எப்படி?
சுமங்கலித்திட்டம் பற்றி பல வருடங்களுக்கு முன்னர் நீயா நானாவில் ஒரு பெண் பேசினார். அவர் நேர்முகமாக அதில் பாதிக்கப்பட்டிருந்தார். கிறிஸ்துவின் சடலம் உயிர்தெழலற்று அழுகிக்கிடப்பது போல இருக்கிறது இந்த தேசம். சரி தான்!. எத்தனை நன்னீர் ஊற்றுகள் இருந்தாலும், குடிக்க சுத்தீகரிக்கப்பட்ட நீர் தானே இன்றைய நிதர்சனம்.
கடைசி ஒரு சில அத்தியாயங்களில் மட்டும் மூட்டைப்பூச்சி, கைத்தடி போன்றவை மூலமாக காட்சிகள் நகர்வது தனியாகத்தெரிந்தது.
மொத்தத்தில் இது ஒரு நல்ல வாசிப்பு அனுபவம்!.சமூக அக்கறை கொண்ட ஒரு எழுத்தாளரின் முக்கிய படைப்பு .ஆட்சியாளர்கள் யோசிக்க நிறையவிஷயங்கள் இருக்கின்றன. சுமங்கலி திட்டம், பள்ளிமாணவர்கள் குடிக்க ஆரம்பிப்பது இப்படிப்பல. இவற்றில் முக்கியமான ஒன்று- வெளி நாட்டிலிருந்து வருவோர் எப்படி நம் சமூகப்பாதுகாப்பைப் பாதிக்காமல் இருக்குமாறு பார்த்துக்கொள்வது என்பது. கம்போடியா, லாவோஸ் போன்ற நாடுகளில் பன்னிரண்டு வயதுக்கும் கீழே உள்ள பெண்பிள்ளைகள் பாலியல் தொழிலில் தள்ளப்படுவதற்கு, அங்கு வரும் அதிக அளவிலான வெள்ளையின வெளிநாட்டவரும் முக்கியக்காரணம்.
அந்நிய செலவாணி என்று மட்டும் யோசிக்காமல், மொத்தமாக யோசித்து செயல்படாவிட்டால், இந்தியாவின் முதலுக்கு மோசம் வந்துவிடும்.
அனுப்பியவர்: சுப்ரபாரதிமணியன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.