காலப்பயணம் செய்வது விஞ்ஞானிகளின் கனவு. ஆனால் ஒரு சாமானியன் தன் நினைவுகளால் பின்னோக்கிப் பயணம் செய்வதற்கு விஞ்ஞானம் அவசியமற்றது. மண்ணில் மீது கொண்ட விருப்பும் முன்னோர்கள் மீது கொண்ட மதிப்பும், வரலாற்றை ஆவணப்படுத்தும் சமூகநோக்கும், இலக்கிய ரசனை கொண்ட மனமும் அமைந்தால் போதுமானது. பண்டைய சரித்திரங்களைக் கேட்கும் போதும் படிக்கும் போதும் அக்காலகட்டத்திற்கு மனோவேகத்தில் சென்று நனவிடை தோய்தல் ரம்மியமானது. அவ்வாறான ஒரு அனுபவத்தைத் தருவதே 'அது ஒரு அழகிய நிலாக்காலம்' என்னும் கவிதைமயமான தலைப்பினைக் கொண்ட நாவல்.
முன்பு காடாகக் கிடந்த சில பிரதேசங்களைத் தம் கைவண்ணத்தால் பொன்விளையும் பூமியாக மாற்றி, நகரங்களை உருவாக்குவதற்கு தோற்றுவாயாக அமைவதும், அடுத்த தலைமுறையினருக்கு கையளித்தலும் எல்லோராலும் இயலக் கூடியதல்ல. அவ்வாறாக, வன்னியில் பெரியபரந்தன் எனும் கிராமத்தை உருவாக்கிய தமது முன்னோடியான (pioneer ) கொள்ளுப் பேரர்களின் முயற்சிகளை, தந்தை வழிப் பேரரின் வழியாக அறிந்து, தனக்கு முந்திய மூன்று தலைமுறையினரின் வாழ்க்கை வரலாற்றினை நாவலாக எழுதியுள்ளார், படைப்பாசிரியர் மகாலிங்கம் பத்மநாபன் அவர்கள்.
அத்துடன், இன்றும் அங்கு வாழும் தமது பரம்பரையினரின் பெருமைகளையும் இந்நாவல் மூலம் வெளிப்படுத்தி உள்ளார். அது மட்டுமல்லாது தற்போது செழிப்புள்ள பூமியாக விளங்கும், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த குஞ்சுப் பரந்தன் பெரிய பரந்தன் செருக்கன் ஆகிய பிரதேசங்களின் நூறாண்டு கால வரலாற்றையும் ஆதாரங்களுடன் ஆவணப்படுத்தி உள்ளார்.
நூல் பற்றிய மேலதிக தகவல்கள்
வரலாற்றின் காலம் : 1900 ஆண்டு தொடக்கம் 1982 ம் ஆண்டுவரை. ஓவியங்கள் : இந்து பரா.
வடிவமைப்பு : சுகி கணேசலிங்கம்
வெளியீடு : சுப்ரம் பிரசுராலயம் , குமரபுரம் , பரந்தன்.
முக்கிய கதைமாந்தர் : தென்மராட்சியின் மீசாலைக் கிராமத்தில் இருந்து வந்து பெரியபரந்தன் கிராமத்தை உருவாக்கிய முன்னோடிகளான தம்பையர்,முத்தர், ஆறுமுகம் எனும் மூவர். இவர்கள் உறவினரும் நண்பர்களும் ஆவர். தம்பையர் காடழித்து உருவாக்கிய 'தியாகர் வயல்' எனும் நிலம் இன்றும் அவரது தந்தையின் பெயர் கூறி நிற்கிறது.
- நூலாசிரியர் எழுத்தாளர் மகாலிங்கம் பத்மநாபன் -
தம்பையர் ஆறுமுகம் விசாலாட்சி ,கணபதி மீனாட்சி மற்றும் மகாலிங்கம் பொன்னம்மா ஆகிய தம்பதியரின் வாழ்க்கையைச் சுற்றியும், அவர்களது உறவுகளைச் சுற்றியும் அமைந்த இந்த வரலாறானது, பண்டைய கால சரித்திரச் சான்றுகள் போலன்றி, தற்போதுள்ள இணையயுகத்தில் நொடிப்பொழுதில் உலகைச் சென்றடையக் கூடியது என்பதால் தமது முன்னோர்களுக்கான உச்சகட்ட மதிப்பினையும் இதன் மூலம் பெற்றுத் தந்துள்ளார் ,படைப்பாசிரியர்.
அத்துடன் முக்கியமான வரலாற்று நிகழ்வுகளையும் ஆண்டுரீதியாக ஆவணப் படுத்தியுள்ளார். அக்காலகட்டத்து கிராமிய வழக்கு, விவசாய நடைமுறைகளுடன் இணைந்த பழந்தமிழ் சொற்கள், இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த பறவைகள் விலங்கினங்கள் முதலான தகவல்களையும் நாவலின் போக்கில் இணைத்துள்ளார். 1921 இல் ஆங்கிலேயரால் அமைக்கப்பட்ட இரணைமடுக் குளத்தால் இப்பிரதேசம் மேலும் பசுமை பெற்றது. இப்பிரதேசத்தினை அறியாதவர்களுக்கும் இளைய தலைமுறையினருக்கும் தகவல் கையேடாகவும் இருக்கக் கூடிய தகுதி வாய்ந்தது இந்நூல்.
நிஜங்களை மட்டும் கோர்த்தெடுத்து எழுதப்பட்ட நாவலின் மனம் கவர்ந்த விடயங்களாக சிலவற்றைக் குறிப்பிட்டுக் கூறலாம். சென்ற நூற்றாண்டின் ஆரம்பகால கிராமிய வாழ்வின் எளிமை. சுயநலமும் பகட்டும் எதிர்பார்ப்புகளும் அற்ற சமூக அமைப்பு. காடுதிருத்தி களனியாக்கும் கடுமையான வஞ்சனையற்ற உழைப்பு. கொடிய மிருகங்களோடும் காட்டின் ஆபத்துகளுடனும் வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திலும் தளராத மன ஓர்மமும் அர்ப்பணிப்பும்.
அரசியல் சாக்கடையில் மூழ்காத, சமூக முன்னேற்றத்தை மட்டும் முன்னிலையாகக் கொண்ட கிராம மனிதர்கள். ஒற்றுமையும் அர்ப்பணிப்பும் கொண்ட உறவினர், அயலவர்கள். அயல் கிராமங்களிடையே பரஸ்பர உதவி மற்றும் பண்டமாற்று மூலமாக பொதுமைப் படுத்தப்பட்ட கிராமிய பொருளாதார முன்னேற்றம் .
காலப் போக்கிலான நகரமயமாக்கம். கால்நடை மாட்டு வண்டில் என்ற நிலைமாறி நெடுஞ்சாலை போக்குவரத்து சாதனங்கள் என மாற்றம் பெற்ற பயணங்கள். அத்துடன் இணைந்தே மனித உழைப்பை பின்தள்ளிய விவசாய இயந்திரங்கள், இரசாயனப் பசளைகளின் வருகையும் பாவனையும். 'நாம் எமது' என்ற கூட்டுறவு நிலையிலிருந்து நிலைமாறிய 'நான் எனது' என்ற சுயநலப் போக்கு. சாதிய மேலாண்மைக்கு எதிரான இளைய தலைமுறையினரின் நடவடிக்கைகள்.
விவசாய சமூகத்தில் இருந்து படிப்படியாக கல்வியை முன்னிலைப் படுத்திய வாழ்வும் ஆங்கில மோகமும் அரச உத்தியோக நாட்டமும் . இதற்கு உறுதுணையான ஆங்கிலேயர் கால ஆட்சிச் சுவடுகள். பாடசாலை அரச காரியங்கள் முதலானவற்றின் தோற்றமும் வளர்ச்சியும்.
இன்றைய சமூக நிலைமைகளுடன் ஒப்பு நோக்கி நாவலின் வாழ்வியல் காலத்தில் வியந்த சில விடயங்களும் உள.
இன்றும் நம்மவர்களால் சகஜமாக ஏற்றுக் கொள்ளப்படாத விதவா விவாகம் அன்று இயல்பாக ஏற்றுக் கொள்ளப்பட்டமை. அகால மரணமடைந்த நண்பன் தம்பையரின் விதவையான இளம் மனைவி விசாலாட்சி , மகன் கணபதி ஆகியோரை நட்பின் மேன்மைக்காக பெருந்தன்மையுடன் பொறுப்பேற்று வாழ்வளித்தவர் ஆறுமுகம். இவரும் முதல் மனைவியை இழந்தவர். நட்புக்கு இலக்கணமான இச்செயல் சீர்திருத்த சிந்தனைகளையும் தன்னகத்தே கொண்டது. இதே போன்றதோர் உயர் நட்பினைப் பேணி பின்னாளில் சம்பந்திகளாகிய மகாலிங்கம் விதானையாரும் சுப்ரமணியத்தாரும்.
நடுத்தர வயதைத் தாண்டிய விதவையும் தபுதாரனும், வயோதிபத்தில் துணைவேண்டி இணைந்து வாழ எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காத உறவுகள். இவர் யாரெனில் மீனாட்சியின் தந்தையும் கணபதியின் மாமனாருமான முருகேசர். நாகரிகமடைந்த இன்றைய சமுதாய அமைப்பில் கூட நியாயமாகப் புரிந்து கொள்ளப்படாத சம்பவங்கள் இவை.
மஞ்சள் கிழங்கை கயிற்றில் முடிந்து தாலி கட்டி, நாட்சோறு கொடுத்தல் என்னும் சடங்குடன் ஆரம்பமாகும் எளிமையான திருமண வாழ்வு, காலமாற்றமானது ஏற்படுத்திய பாதகங்களாகவே இன்றைய ஆடம்பர திருமணங்களை நினைக்க வைக்கிறது.
மிகச் சில ஆடைகளையே சொத்தாகக் கொண்டு வாழ்ந்த அக்காலகட்ட மனிதர்கள் பற்றிய விவரிப்பில் (P 160) ஒரு வசனம் மனதை ஈர்த்தது.
'அந்தக்கால ஆண்கள் தாமே தங்கள் உடுப்புகளைத் தோய்த்துக் கொள்வார்கள். தங்கள் மனைவி,மகள் தோய்க்க வேணும் என்று நினைப்பதில்லை'.
பஞ்சத்தின் காரணமாக இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக வந்த தந்தை மற்றும் இரு சிறுவர்களை தமது உறவுகளாக வளர்த்து சொந்தத்தில் மணமுடித்து வைத்த பெருந்தன்மை.
சிலிர்ப்பூட்டும் சம்பவங்கள் சில
வாய்மொழி இன்றியும் கண்ணொடு கண்நோக்கும் கண்ணியமான காதல் அனுபவங்களாக கணபதி மீனாட்சி, பத்மநாபன் சுசீலா சந்திப்புகள் ரசனை மிகுந்தவை. நெடுந்தூரம் ஓடிக் களைத்த பின் தாகம் தீர்ந்து புத்துணர்ச்சி பெறும் நாம்பன்கள் போல நீண்டதோர் வரலாற்றில் உற்சாக பானங்களாக இவை.
நகைச்சுவை உணர்வு தரும் சம்பவங்களாக ,
1925 ம் ஆண்டு பிறந்த தனது தந்தை மகாலிங்கத்தின் ஆரம்பப் பாடசாலைக் குறும்புகளை, பின்னாளில் (1992 )அதே பாடசாலையில் அதிபராகும் மகனான படைப்பாசிரியர், பாடசாலையின் சம்பவத் திரட்டுப் பதிவேட்டில் காண நேர்வது ரசனைக்குரியது. மற்றும் வன்னியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு படிக்கச் சென்ற பத்மநாதன் பத்மநாபன் சகோதரர்களின் தொளதொள ஆடை வடிவமைப்பும் தலையலங்காரமும்.
நாவலின் முக்கிய கதாபாத்திரமான மகாலிங்கம் விதானையார் காலத்தில் (1962) நடந்த கோகிலாம்பாள் கொலைவழக்கு அதிர்ச்சியானது. அதேசமயம், இச்செய்திகளைப் பரபரப்பாக விற்ற யாழ் 'வைரமாளிகை' விற்பனைப் பிரதிநிதியின் தோற்றம் இன்றும் மனதில் நிழலாடுகிறது.
வியப்புக்குரிய விடயம்....
இத்தனை சம்பவங்களையும் பெயர்களையும் முக்கியமான வரலாற்று நிகழ்வுகளுடன் தொகுத்தளித்த படைப்பாசிரியர் பத்மநாபனின் நினைவாற்றல் . அதே சமயம் நூற்றாண்டு கால மனிதர்களின் பெயர்கள் உறவு முறைகள் சம்பவங்களை நினைவில் வைத்திருக்க வாசகருக்கு ஏற்படும் திண்டாட்டமும் புரிந்து கொள்ளப்பட வேண்டியது. எனினும் நீண்டதோர் வரலாற்றில் இது தவிர்க்கவும் முடியாதது.
சமூக முன்னேற்றத்தை முன்னிறுத்தி ஒழுக்கநெறி மாறாது பெரியபரந்தன் கிராமத்தில் வாழ்ந்து மடிந்த தம்பையர், ஆறுமுகத்தார், கணபதி, மகாலிங்கம் விதானையார் ஆகியோரது வாழ்வும் இவர்களோடு இணைந்த பெண்களும் இன்றைய தலைமுறையினருக்கு உதாரணமானவர்கள். குறிப்பாக தம்பையரின் மனைவியான விசாலாட்சி, கணவரின் இறப்பின் பின் ஆறுமுகத்தாரைத் மறுதிருமணம் செய்து பெரியபரந்தனில் முதல் பெண்மணியாகக் காலடி வைத்தவர். மீண்டும் தான் பிறந்த கிராமமான மீசாலைக்கு திரும்பிச் செல்லாமலே பெரியபரந்தன் மண்ணோடு சங்கமமானார் என்ற நினைவு உருக்கம் தருவது.
1982 ம் ஆண்டில் விதானையார் மகாலிங்கத்தின் மரணத்துடன் இந்நாவல் நிறைவு பெறுகிறது. அவரின் தோற்றப் பொலிவு, நேர்மை, அஞ்சாநெஞ்சு, மதிநுட்பம், தீர்க்கமான முடிவெடுக்கும் திறன் ஆகியன அன்னாரின் நினைவுகளை வாசகரின் கண்களிலும் நெஞ்சத்திலும் நிறைத்தே சென்றிருக்கிறது.
காடாகக் கிடந்த பெரிய பரந்தன் பிரதேசத்துக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம் போலிருந்த 'குறிப்பம் புளியமரம்', யுத்தகாலத்தில் ஷெல்லடிகளால் காயமுற்ற போதும் இன்றும் தலைநிமிர்ந்து நிற்பது போல, இவ்வரலாறும் மகிமையுடன் நினைவில் நிலைக்கட்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.