தொடர் கட்டுரை: மஹாகவியும் கட்டற்ற தேடலும் (4-7)! - ஜோதிகுமார் -
- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமாரின் கவிஞர் மஹாகவியைப்பற்றிய இக்கட்டுரையினை அவரிடமிருந்து பெற்றுப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பியவர் எழுத்தாளர் ஆதவன். இருவருக்கும் நன்றி. - பதிவுகள்.காம் -
4
இலக்கிய வரலாற்றில் யதார்த்த நெறியின் முக்கியத்துவம் குறித்து ஏங்கெல்சாலும், கைலாசபதியாலும், கார்க்கியாலும், லெனினாலும் அவ்வவ் காலப்பகுதிகளில் தொட்டுக்காட்டப்பட்டே வந்துள்ளது. கற்பனாலங்காரத்திற்கும் (Romanticism), இயற்பண்பு வாதத்திற்கும் (Naturalism) யதார்த்த வாதத்திற்கும் (Realism) இடையே உள்ள வித்தியாச வேறுபாடுகள் மேற்படி அறிஞர்களால் தெளிவுற படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளன.
டால்ஸ்டாய் பொறுத்த லெனினின் கூற்று வருமாறு:
“மொத்தமாகவும் சில்லறையாகவும் காணக்கிட்டும் சகல முகத்திரைகளையும் பிய்த்தெறியும் நிதானமிக்க யதார்த்த வாதம் அவரது…”
“டால்ஸ்டாயின் எழுத்துக்களைக் கற்பதற்க்கூடு, ரஷ்ய தொழிலாளி வர்க்கமானது, தன் எதிரிகள் பொறுத்த அறிவை மேலும் அதிகமாகக் கூட்டிக் கொள்ளும்…” ப-31 63
இதனை கார்க்கி பின்வருமாறு தெளிவுப்படுத்துவார்:
“எழுத்தாளன் என்பவன் அனைத்தையுமே அறிந்து வைத்திருக்கும் கடமை பூண்டுள்ளான் - வாழ்க்கை எனும் பெருநதியின் பிரதான சுழிப்புகளையும், கூடவே, அதன் அற்ப ஓட்டங்களையும், அன்றாட வாழ்வின் அனைத்து முரண்களையும் அதன் வீறுகளையும், எழுச்சிகளையும், வீழ்ச்சிகளையும், செழுமைகளையும் அதன் கீழ்மைகளையும், அதன் உண்மைகளையும் பொய்மைகளையும் அவன் அறிந்தே வைத்திருக்க வேண்டிய பொறுப்பு கொண்டுள்ளவனாகின்றான்…”
“கூடவே, குறித்த ஓர் நெறிமுறையானது, அஃது அவனது தனிப்பட்ட பார்வையில் எவ்வளவுதான் அற்பமாயும் முக்கியத்துவம் இழந்தும் போயிருப்பினும், அது அழிபடும் ஒரு பழைய உலகத்து சிராய்பு துண்டங்களா (Fragments) அல்லது ஒரு புதிய உலகை நிர்மாணிக்க வந்திருக்கும் புதிய முளைகளின் கூறுகளா என்பதனையும் சேர்த்தே அவன் தெரிந்து வைத்திருக்கும் கடமை பூண்டுள்ளான்”