‘நகுலாத்தை’: யதார்த்தமும் மாயமுமாய் பயணிக்கும் பிரதி - தேவகாந்தன் -
(1)
2022 ஆவணியில் வடலி வெளியீடாக வந்த யதார்த்தனின் ‘நகுலாத்தை’ நாவல், தன் மதிப்பீட்டை அண்ணளவாய்ச் செய்வதற்கான வெளிகளையே கொண்டுள்ளது. அதில் ஐதீகம், நாட்டார் பாடல், வாய்மொழி இலக்கியங்களின் பயன்பாடுபற்றியதும், அப் படைப்பாக்கத்திற்கு நிறையவே தேவைப்பட்டிருக்கக் கூடிய தேடல்கள், கள ஆய்வுகள்பற்றியதுமான படைப்பாளியின் எந்த விபரங்களும் இல்லை. வடவிலங்கையின் நிலவியல் படம் மட்டும் தரப்பட்டுள்ளது.
கதையிலிடம்பெறும் ஐதீகங்கள் குறித்து, அவை ஐதீகங்களா புனைவுகளா என்பதுபற்றிய படைப்பாளியின் வாக்குமூலம், இதுபோன்ற ஓர் இலக்கியப் பிரதிக்கும் முக்கியமானது. அல்லாமல், நாவல் கட்டமைப்பு தவிர்ந்த காத்திரமான விமர்சனம் சாத்தியப்படாது. இத்தகைய தட்டுப்பாடுகளுடன் முன்னெடுக்கப்படும் விமர்சனம், ஏகதேசமாய் தன் வழியில் முன்செல்லவோ, தடைகளால் பின்னிழுக்கப்படவோதான் செய்யும்.
நாவல் சார்ந்த குறையாகவன்றி இதை பதிப்பு சார்ந்த குறையாகக் காணவேண்டும்.
(2)
மொழி வழியில் ‘நகுலாத்தை’ ஒரு பிரதியாய் நன்கு கட்டமைந்திருக்கிறதென்பதில் ஐயமில்லை. அது பாவித்த மொழி அந்த மண்ணுக்கானது. பல இலங்கைத் தமிழ் நாவல்களில் பயின்றிருக்காத உரையாடல் வளம் ‘நகுலாத்தை’யிலுண்டு.
பிரதேசவாரியாய் முக்கியம் பெற்றிருக்கும் சொற்கள் சில எவ்வாறு தம் வெகுவான பொருத்தம் கருதி தமிழுக்கே உரியனவாகவும், தமிழாய்வுக்கு உதவுபவையாகவம் ஆகினவோ, அதுபோல இலங்கையின் வடபிரதேச, குறிப்பாக வன்னிப் பிரதேச, பேச்சுவழக்கிலுள்ள மொழி வளம் அவைசார்ந்து பயனளிக்கக்கூடியது. அவ்வாறான பல சொற்களை பிரதியில் அடையாளப்படுத்த முடியும். ‘உருத்து’ (தூளாக்குதல்) என்ற சொல்லை உதாரணத்துக்கு இங்கே குறிப்பிடலாம்.