சில்லையூர் செல்வராசனின் ஈழத்துத் தமிழ் நாவல் வளர்ச்சி (1967), க. கைலாசபதியின் தமிழ்நாவல் இலக்கியம் (1968), நா. சுப்பிரமணியனின் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் (1978) போன்ற தமிழ்நாவல் வரலாற்று நூல்வரிசையிலே 1895 முதல் 2020 வரையிலான காலத்தில் எழுந்த நாவல்களை அவை எழுந்த காலப் பின்னணியில் வைத்து நோக்குவதும், கூரிய விமர்சனப் பார்வையை முன்வைப்பதுமான தேவகாந்தனின் இலங்கைத் தமிழ் நாவல்இலக்கியம் - ஒரு வரலாற்றுத் திறனாய்வுநிலை நோக்கு என்ற நூல் (காலச்சுவடு பதிப்பகம், 2021) தனக்கென ஓரிடத்தைப் பிடித்துள்ளது.
இந்நூலின் முகப்பை அசன்பேயுடைய கதை (1885) மோகனாங்கி (1895)) எனும் தமிழ் நாவல்களின் பழைய மங்கித் தேய்ந்து போன அட்டைகள் அலங்கரிக்கின்றன. இலங்கையில் நாவல் எனும் இலக்கிய வகை தோன்றிய குறிப்பிட்டதொரு வரலாற்றுக்காலகட்டத்தை இவ் அட்டை பிரதிபலிக்கும் அதேசமயம் கால மாற்றத்தையும், தமிழ் நாவல் வரலாற்றின் தொடர்ச்சியையும் குறிப்பால் உணர்த்துகிறது. அத்துடன், இந்நூல்களின் அட்டைகளை நூலின் முன்னட்டையில் பதித்தமைக்கு வேறு முக்கிய காரணங்களும் உள. சுந்தரராஜனும், சிவபாதசுந்தரமும் எழுதிய தமிழ் நாவல் நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும் என்ற நூல் சித்திலெப்பை மரைக்காயரின் அசன்பேயுடைய கதை இலங்கையைக் களனாகக் கொண்டிராத காரணத்தால் இலங்கைத் தமிழ் நாவல் அல்ல என்று கூறுகிறது. ஆனால், களத்தை அடிப்படையாகக் கொண்டு கூறப்படும் இக்கருத்தை தேவகாந்தன் , சல்மான் ருஷ்டியின் மிட்நைட் சில்ட்ரன் (1981), சியாம் செல்வதுரையின் ஃபணிபோய் (1994) போன்ற நாவல்கள் முறையே இந்தியா, இலங்கை எனும் நாடுகளைக் களங்களாகக் கொண்டிருப்பினும், பிரிட்டிஷ், கனேடிய நாவல்களாகவே கொள்ளப்படுமாற்றைச் சுட்டிக்காட்டி, அசன்பேயுடைய கதை இலங்கைத் தமிழ்நாவலே என நிலைநாட்டுகின்றார்.
மோகனாங்கியும் பல்கலைக்கழகம் சார்ந்த புலமையாளரின் கவனத்தை ஆரம்பத்தில் பெறாதிருந்து, பின்னர், உயர்கல்வி நிறுவனங்களுக்கு வெளியே இருந்து எடுக்கப்பட்ட முயற்சிகளின் விளைவாகவே தமிழிலே எழுந்த முதல் வரலாற்று நாவல் என்ற தகுதிப்பாட்டை எய்தியது. அது குறித்த வரலாற்றையும் தேவகாந்தன் பதிவிட்டுள்ளார். நூலாசிரியர் தன் கவனத்தைக் குவித்து மிகுந்த அக்கறையுடன் எழுதிய பகுதிகள் இவையாதலால், இவ்விருநாவல்களுக்கும் இந்நூலில் விசேட இடம் உண்டு. அம்முக்கியத்துவத்தினை உணர்த்தும் வகையில் இந்நூல்கள் முன்னட்டையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன எனலாம்.
207 பக்கங்களைக் கொண்ட இந்நூல், 17 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நூலின் இறுதியில் ஆசிரியர் ஏற்கனவே பல்வேறு ஊடகங்களில் வெளியிட்டிருந்த சில நாவல்களின் விமர்சனக் குறிப்புகளும், இந்நூல் எழுதுவதற்கு உதவியாக இருந்த நூல்களின் பட்டியல் ஒன்றும் காணப்படுகிறது. இந்த நூற்பட்டியல் தேவகாந்தனின் நூலைப் பரந்த தமிழ் இலக்கிய வரலாற்றியல் பரப்பில் வைத்து நோக்க உதவுகின்றது. தன் நூலில் குறிப்பிடும் எல்லா நூல்களையும் அவர் இங்கு உள்ளடக்கவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இந்நூலை வாசிப்பதாக இருந்தால் தேவகாந்தனின் ”என்னுரை” இலிருந்து தொடங்கி, நூலை வாசித்து முடித்த பின்னர், இறுதியாக மு நித்தியானந்தனின் முன்னுரைக்கு வரலாம். 34 பக்கங்களில் அமைந்துள்ள அவரது முன்னுரை, நாவலின் பொதுப்பண்புகள் குறித்த பக்தின் (Mikhail Bakhtin), மிலன் குண்டேரா ( Milan Kundera) எனும் திறனாய்வாளர்களின் கருத்துகள், தேவகாந்தனின் நூலின் சிறப்பு அம்சங்கள், நூலை இன்னும் மேம்படுத்தற்கான ஆலோசனைகள் என்பவற்றை உள்ளடக்கியதாய்க் கனதியான நூலிற்கு இன்னுமோர் கனதியான பரிமாணத்தை அளிக்கிறது.
தேவகாந்தன் புனைவு அல்லாத எழுத்திலும் தன்னை ஒரு சிறந்த கதைசொல்லியாக நிலைநிறுத்திக் கொள்கிறார் என்பது இந்நூலை வாசிக்கும்பொழுது புரிந்தது. தேவகாந்தனின் எழுத்தில் நிதானம் உண்டு. அதேசமயம் கூர்மையும், வீச்சுமுண்டு. ஒரு சுவாரசியமான நாவல் ஒன்றைப் படிப்பது போன்ற எண்ணம் நூலை வாசிக்கும்பொழுது அடிக்கடி ஏற்பட்டது.
தனக்கும் எழுத்தும் இடையில் ஒரு இடைவெளியை தேவகாந்தன் பேணுவதையும் நாம் இங்கு அவதானிக்கலாம். இலக்கிய வரலாற்றை எழுதும்போது, ஆசிரியர்கள் பெரும்பாலும் தனிப்பட்ட கருத்துகள் அல்லது சார்புநிலைகளைக் காட்டிலும் புறநிலைத்தன்மையைப் பேணுவதற்கும் சரியான தரவுகளிலும், பகுப்பாய்விலும் கவனம் செலுத்துவதற்கும் புறநிலைப்பட்ட நடையினைப் பின்பற்றுவர். இந்த புறநிலைப்பட்ட எழுத்தும் நடையும் அவர்களுது நூல் அறிவார்ந்த நூலாகவும் அதிகாரபூர்வமானதொரு நூலாகவும் பார்க்கப்படுவதற்கு ஏதுவாகும். தேவகாந்தன் தானும் ஒரு நாவலாசிரியராக இருப்பதாலும், தனது நாவல்களையும் நூலில் உள்ளடக்க வேண்டியிருந்ததாலும் இவ்விடயத்தில் மிக்க அவதானமாக இருந்துள்ளார் என்பது தெரிகிறது.
இலங்கைத் தமிழ் நாவல் வரலாற்றை எழுதுவதற்கு வரலாற்றுத் திறனாய்வு அணுகுமுறையைக் கடைப்பிடித்ததாக ஆசிரியர் கூறுகிறார். ”தோற்றுவாய்” எனும் பகுதியின் ஆரம்பத்தில் ஆசிரியர் ”நாவல் இலக்கியமானது திட்டமாய் உருவாக்கப்பட்டது இல்லை. அது சமூகமாற்றத்தின் தவிர்க்கமுடியாத ஒரு விளைவு” என்று கூறுவது மிகுந்த கவனத்துக்குரியது.வரலாற்றுக்கால கட்டங்களுக்கூடாக அரசியல் பொருளாதார சமூக நிலைமைகளுக்கேற்ப நாவல் எவ்வாறு மேற்கில் தோன்றி, கிழக்கில் பயணித்து வளர்ந்தது என்பதை இந்நூல் வாயிலாக ஆசிரியர் எடுத்துரைக்கின்றார். நாவல்கள் குறித்து விமர்சனரீதியிலான மதிப்பீடுகளையும் செய்கிறார். இவ்விமர்சனங்களுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகளைத் தருகிறேன். முதலாவது, வன்னி எழுத்தாளர் ஒருவரின் நாவல்கள் பற்றிக் குறிப்பிடும்போது “கதை சொல்லலுக்கு அப்பால் இலக்கிய வளம் சார்ந்ததாய் அதன் புனைவும் கட்டுமானமும் அமையவில்லை என அது பற்றிய மதிப்பீட்டினைச் செய்ய முடியும்” என்கிறார் (பக்கம் 167). இரண்டாவதாக, போரிலக்கியம் குறித்து இவ்வாறு அவர் தன் விமர்சனத்தை முன்வைக்கிறார்:
காலை மாலை வர்ணைகள், சூரிய சந்திரக் காய்வுகள், வனத்தினதும், தரையினதும் அடர்த்தியும், விரிவும் சொல்வதால் ஒரு போருலா நாவலாகி விடுவதில்லை. போர்க்கால நாவல்களைப் பொறுத்துத் தமிழில் வெறுமையே எஞ்சுகிறது. புனைவிலக்கிய வடிவெடுக்கும் பிரதிகளில் வாசகர் முதன்மையாய்த் தேடுவது உண்மையை அல்ல, அனுபவத்தை. அது அளிக்கும் மெய்யியல் விளக்கத்தை. நேரில் காணாதவற்றில் கண்டதாய் அடையும் பரவசத்தை அல்லது பதற்றத்தை. இலங்கைப் போர்க்காலப் புலிகள் ஆதரவு, எதிர்ப்பு, நடுவுநிலை என்ற எந்தத் தளத்திலிருந்தும் வெளிவந்த நாவல்கள் திருப்தியைத் தரவில்லை. (பக்கம் 172)
இவ்வாறு வரலாறும், மதிப்பீடும் சார்ந்தே இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
வரலாற்றுக் காலகட்டங்களை மையமாகக் கொண்டு தமிழ் நாவல்களை ஒழுங்கமைப்பதன் மூலமும், அரசியல், சமூக பொருளாதாரசூழலியல் செய்திகளை விவரிப்பதன் மூலமும், தேவகாந்தன் இலங்கைத் தமிழ் நாவல் இலக்கியத்தின் வளர்ச்சியை வரலாற்றுக் கட்டமைப்பிற்குள் உட்படுத்தி விளக்குகின்றார். மாற்றமுற்று வரும் வரலாற்றுச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நாவலின் பேசுபொருளும் பண்புகளும் எவ்வாறு மாற்றத்திற்குள்ளாகின்றன என்பதைப் புரிந்துகொள்ள இந்த வரலாற்று அணுகுமுறை வாசகர்களுக்கு உதவுகிறது. மேலும், 1984 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட வரலாற்றுக் காலகட்டங்களில் எழுந்த எல்லா நாவல்களையும் அவர் குறிப்பிடவில்லை. அக்காலகட்டங்களின் இயல்புகளைச் சிறப்பாகப் பிரதிநிதித்துவம் செய்யும் பாங்கில் அமைந்த நாவல்கள் சிலவற்றுக்கே அவர் முதன்மை அளித்துள்ளார்.
நூல் அமைப்பு :
நாவல் என்பது மேனாட்டிலே குறிப்பிட்ட சமூக, பொருளாதார அரசியல் தத்துவார்த்தப் பின்னணிகளில் தோன்றியதோர் இலக்கியவடிவம் என்பது இந்நூல் வெளிப்படுத்தும் முக்கியமான சிந்தனையாகும். அடுத்து இந்த நூல் தரும் சிந்தனை நாவல் எனும் புதிய வடிவம் உடனடியாகத் தனக்கே உரிய சகல பண்புகளுடனும் பிறந்து விடவில்லை. படிப்படியாகத் தனது வடிவத்தைத் திருத்திச் செழுமைப்படுத்திக் கொண்டது என்பதாகும். இச்சிந்தனைகட்கேற்பவே முதலாம் அத்தியாயத்தின் தலைப்பு ”மேற்குலகில் ஒரு புத்திலக்கிய வடிவத்தின் தோற்றப்பாடு” என்றும்,
இரண்டாம் அத்தியாயத் தலைப்பு ”நாவல் வடிவச்செழுமையும் அர்த்த வியாபகமும் கொள்ளல்” என்றும் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கேற்பவே, மேனாட்டிலும் இந்தியாவிலும் இலங்கையிலும் நாவல் இலக்கியத்தைப் பற்றிப் பேசும்போது முதல் நாவல்கள் பற்றிக் குறிப்பிட்டே ஏனைய நாவல்கள் குறித்து ஆசிரியர் நோக்குகிறார்.
”புத்திலக்கியத்தின் காவியத்திசை நகர்வு” எனும் மூன்றாம் அத்தியாயத்தில் 19 ஆம் நூற்றாண்டில் வங்காளத்தில் துர்க்கேசநந்தினி நாவலும் (1865), மலையாளத்தில் இந்துலேகாவும் (1889) முதல் நாவல்களாகத் தோற்றம் பெற்றன எனக்கூறும் ஆசிரியர் தமிழின் முதல் நாவல்களாக மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பிரதாபமுதலியார் சரித்திரத்தையும் (1879), ராஜம் ஐயரின் கமலாம்பாள் சரித்திரத்தையும் (1893), மாதவையாவின் பத்மாவதி சரித்திரம், முத்து மீனாட்சி எனும் இரு நாவல்களையும் குறிப்பிடுகிறார். பத்மாவதி சரித்திரம் கதைத்துவமும், கலைத்துவமும் இழந்த நாவல்” என்று கூறி முத்து மீனாட்சி பற்றியே இங்கு விவரிக்கிறார். ஆனால், இருநாவல்களையும் வாசித்தவள் என்ற வகையில் ஆசிரியரின் இக்கருத்து எனக்கு உடன்பாடானதன்று.
நான்காம் அத்தியாயம். இலங்கையில் நாவல் இலக்கியம் தோன்றுவதற்குத் தடங்கலாக இருந்த விடயங்களை ஆராய்வதுடன், யாழ்ப்பாணத்தை விடத் திருகோணமலை ஏன் நாவல் தோன்றுவதற்கு உகந்த நிலைமைகளுடையதாக இருந்தது என்பது பற்றியும் நோக்குகிறது.. முதல் நாவல்கள் என அடையாளப்படுத்துவதில் இலங்கைத் தமிழிலக்கிய வரலாற்றாசிரியர்களுக்கிருந்த தயங்கங்கள் குறித்தும் இங்கு பேசப்படுகிறது.
இலங்கையின் முதல் மூன்று தமிழ் நாவல்களாக சித்திலெவ்வை மரைக்காயரின் அசன்பேயுடைய கதை (1885), எஸ், இன்னாசித்தம்பியின் ஊசோன் பாலந்தை கதை (1891), தி.த. சரவணமுத்துப்பிள்ளையின் மோகனாங்கி (1895) என்பவற்றை அடையாளப்படுத்தும் ஆசிரியர், அந்த நாவல்களின் பண்புகளை ஐந்தாம் அத்தியாயத்தில் ஆராய்கிறார்.
ஆறாம் அத்தியாயத்தில் இலங்கையின் நாவல் இலக்கிய காலகட்டத்தை ஒவ்வொன்றும் அண்ணளவாக 30 வருடங்கள் கொண்ட காலப்பகுதிகளாக வகுக்கின்றார். அவை வருமாறு:
1895-1925 மத இலக்கியத் தோற்றகாலம்
1926-1956 அற இலக்கியத்தோற்றகாலம்
1957-1983 முற்போக்கு இலக்கிய காலம். இதில் எதிர்ப்பிலக்கியகாலமும், தமிழ்த் தேசியகாலமும் அடங்கும்.
1984-2020 புலம்பெயர் இலக்கியக்காலம்
இவற்றில் மத இலக்கியத் தோற்றகாலம், அற இலக்கியத்தோற்றகாலம் எனும் முதலிருகாலப் பிரிவுகளின் பெயர்களுக்குமான நியாயப்பாடு நூலில் போதுமானதாக இல்லை என்பது என்கருத்து. இது நாவல் என்ற இலக்கியவகையை அக்காலத்தில் தோன்றிய ஏனைய இலக்கிய வகைகளுடன் இணைத்துப் பார்க்காது தனித்துப் பார்த்ததால் வந்த பிரச்சினையாகலாம்.
ஏழாம் அத்தியாயத்தில் 1895-1925 க்கும் இடைப்பட்ட பகுதியில் எழுந்த மூன்று நாவல்கள் கவனத்தைப் பெறுகின்றன. அவையாவன: சி.வை. சின்னப்பபிள்ளையின் வீரசிங்கன் கதை /சன்மார்க்க ஜெயம் (1905), மங்களம் தம்பையாவின் நொறுங்குண்ட இருதயம் (1914), இடைக்காடரின் நீலகண்டன் ஒரு சாதி வேளாளன் (1925).
”நாவலாக்கத்தின் வீச்சு குறைந்தது” என்று தலைப்பிடப்பட்ட எட்டாம் அத்தியாயம் 1926 ஆம் ஆண்டிற்கும் 1956 ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியினை அலசுகிறது. நாவலின் வீச்சு குறைவடைதற்குக் காரணங்களாக இக்கால சமூகப்பொதுநிலையாயிருந்த இன்பக்கலைகளுகெதிரான உணர்வு, சிறுகதையின் எழுச்சி, மொழிபெயர்ப்புகளில் கூடிய கவனம் செலுத்தப்பட்டமை முதலானவற்றை ஆசிரியர் குறிப்பிடுகின்றார். 30 நாவல்கள் வரை இக்காலத்தில் எழுந்தன என்றும் அவற்றுள் பாதி நாவல்கள் பத்திரிகைகளில் தொடராக வெளிவந்தன என்றும் கூறுகின்றார்.
எச். நல்லையாவின் சோமாவதி அல்லது இலங்கை -இந்தியர் நட்பு (1937), ஈழகேசரித் தொடர்களான சு.வே. யின் மனநிழல் (1948),சொக்கனின் மலர்ப்பலி (1949) இந்துசாதனத் தொடர்களான ம.வே. திருஞானசம்பந்தம் பிள்ளையின் காசிநாதன் நேசமலர் (1924), கோபால நேசரத்தினம் (1927), துரைரத்தினம் நேசமணி (1931) அ.செ. முருகானந்தனின் குறுநாவலான புகையில் தெரிந்த முகம் (1944 என்று சிலநாவல்களைக் குறிப்பிடுகின்றார். ”ஆனால் வித்தியாசமெனக் கூறத் தகுந்த எந்தவிதமான படைப்பும் அக்காலத்தில் உருவாகவில்லை என்பதில் ஒரு துக்கம் உணரப்படவே செய்கிறது” என்பது அவர் கணிப்பு. மு. நித்தியானந்தனின் கூலித்தமிழ் நூலை ஆதாரமாகக் கொண்டு மலையகத்தில் எழுந்த ஓரிருநாவல்களையும் குறிப்பிடுகிறார்.
மேலும், 1926-1956 ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலத்தை இலங்கைத் தேசிய உணர்வுக்காலம் என்று வர்ணிப்பதுடன், அந்த உணர்வைப் பிரதிபலிக்குமுகமாக எச். நல்லையாவின் சோமாவதி அல்லது இலங்கை இந்திய நட்பு எனும் நாவல் முழு இலங்கையையும் கதைப்பின்புலம் ஆக்கியதோடு, தமிழ்-சிங்களம் எனும் ஈரினக் கதாபாத்திரங்களுடன் கதையை நகர்த்துகிறது என்று கூறுகிறார். ஆனால் எனக்கு இந்தக் காலத்தை தமிழர்-சிங்களவர்களுக்கிடையில் ஒரு புரிந்துணர்வு நிலவிய காலம் எனக் கொள்வதில் தயக்கமுண்டு. 1925 ஆம் ஆண்டின் பின்னரே இலங்கைத் தமிழ்ச்சமூகத்தின் நலன்கள் பாதுகாக்கப்படல் என்பதன் தேவை வெகுவாக உணரப்பட்ட காலம் ஆரம்பமாகிறது எனலாம். தமி்ழ்த் தேசிய உணர்வு (Tamil national consciousness) துளிர் விட்ட காலம் என்று ஜெயரடணம் வில்சன் Sri Lankan Tamil Nationalism நூலில் இக்காலத்தை அடையாளப்படுத்துகிறார். தமிழர் இலங்கையின் ஆட்சியதிகாரங்களில் சரிபங்கு கேட்ட காலத்தை இலங்கைத் தேசிய உணர்வுக்காலம் என்று கூறாது, தமிழ்த் தேசிய உணர்வு உருவாக்க காலம் என்று அழைத்தலே பொருத்தம் என்பது என் கருத்து.
நூலின் 9 ஆம் 10 ஆம் அத்தியாயங்கள் 1956-1983 க்கும் இடைப்பட்ட வரலாற்றுக்கால கட்டத்தையும், அக்காலத்தில் தோன்றிய இலக்கியச் சிந்தனைகள் பற்றியும் பேசுகின்றன.. முற்போக்குச்சிந்தனை, முற்போக்கு எதிர்ப்புச் சிந்தனை, தமிழ்த் தேசிய சிந்தனை எனும் மூவகைச் சிந்தனைகளும் நிலவிய இக்காலத்தை ஆசிரியர் பல்குணிக்காலம் என அழைக்கிறார். மாக்சிய சிந்தனைகொண்ட இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கச் செயற்பாடுகள், மண்வாசனை இலக்கிய முகிழ்ப்பு, இதனால் தமிழ்நாட்டிலக்கியம் பிறிதொரு நாட்டிலக்கியம் என்ற தெளிவு ஏற்பட்டமை, தமிழ்நாட்டு வெகுஜனநூல் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள், வெகுஜன எழுத்துநிராகரிப்பு முதலானவை பற்றி இவ்விரண்டு அத்தியாயங்களிலும் பேசப்படுகின்றன. இக்காலத்தில் மூன்று வகையான நாவல்கள் இக்காலத்தில் தோற்றம் பெற்றன: (அ) முற்போக்கிலக்கிய நாவல்கள்: செ. கணேசலிங்கனின் முந்நாவல் தொகை -நீண்ட பயணம் (1965), சடங்கு (1966) செவ்வானம் (1967)
கே. டானியலின் போராளிகள் காத்திருக்கின்றனர் (1975) இளங்கீரனின் நீதியே கேள் (1959)
(ஆ) நற்போக்கு, மெய்யுள் எனும் கருத்துருவாக்கம் செய்தோரின் முற்போக்கு எதிர்ப்பிலக்கிய நாவல்கள் சில: எஸ்.பொன்னுத்துரையின் தீ (1961),சடங்கு (1966), மு. தளையசிங்கத்தின் ஒரு தனிவீடு (1962 இல் எழுதப்பட்டு 1984 இல் வெளிவந்தது).
இக்கால கட்டத்தில் உருவான தமிழ்த் தேசியச் சிந்தனையைப் பிரதிபலிக்கும் நாவல் வகைமை குறித்து ஆசிரியர் பெயரளவில் எதனையும் குறிப்பிடவில்லை. ஆனால், தளையசிங்கத்தின் ஒருதனி வீட்டை மார்க்சிய எதிர்ப்பு அரசியலும் தமிழ்த் தேசிய அரசியலும் ஒன்றிணைந்த நாவலாய் ஆசிரியர் காண்கிறார். மார்க்சிய அரசியல் செல்வாக்கு அற்றுப் போய்த் தமிழ்த்தேசியம் முனைப்புக் கொள்வதை விவரிப்பதால் தமிழ்த்தேசிய சிந்தனைகளைப் பிரதிபலிக்கும் நாவல் வகைமைக்கு அதனை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்..
இவ்வத்தியாயத்தில் மூன்றாவது வகை நாவல்களாக, முற்போக்கு, நற்போக்கு என அடையாளம் கொள்ளாது வெளிவந்த வீரகேசரி பிரசுரநாவல்களைக் குறிப்பிடுகின்றார். பெறுமதியான நாவல்கள் என செங்கை ஆழியானின் வாடைக்காற்று, பாலமனோகரனின் நிலக்கிளி, அருள் சுப்பிரமணியத்தின் அவர்களுக்கு வயது வந்து விட்டது, தெளிவத்தை ஜோசப்பின் காலங்கள் சாவதில்லை, கோகிலம் சுப்பையாவின் தூரத்துப்பச்சை முதலானவற்றைக் குறிப்பிடுகின்றார்.
அத்துடன், இக்கால கட்டத்தில் இலங்கையின் இலக்கிய உலகில் பெரும் செல்வாக்குச் செலுத்திய முற்போக்கு இலக்கிய கர்த்தாக்கள், விமர்சகர்கள் குறித்து ஆசிரியர் பின்வருமாறு விமர்சிக்கிறார்: ”இலங்கையின் துர்ப்பாக்கியம் என்னவெனில் அது மார்க்சிய விமர்சனத்தைத் உயர்த்திப் பிடித்தளவு கலைத்துவத்தைக் கைதூக்கி விடவில்லை என்பதுதான். கருத்துருவில் கரிசனம் கொண்டளவு கட்டுமானத்திலும், பிற அழகியலிலும் கருத்துவைக்கவில்லை என்பதுதான்.”
11 ஆம் அத்தியாயத்தில் புலம்பெயர் இலக்கியம் என்ற கருத்தாக்கம் வரையறை செய்யப்படுகின்றது. 1983 க்குப் பின்னரான புலப்பெயர்வு தமிழ்நாட்டை நோக்கியே இருந்ததாகையால் அங்கு தோன்றிய இலக்கியமும் புலம்பெயர் இலக்கியம் என்றே கொள்ளப்படல் வேண்டுமெனும் வாதத்தை முன் வைக்கிறார்.
”தமிழ்நாட்டில் இலங்கை அகதிகளின் இலக்கியம்” எனும் தலைப்புக் கொண்ட 12 ஆம் அத்தியாயம் அருளர், கோவிந்தன், செ, கணேசலிங்கன், செ. யோகநாதன், தேவகாந்தன் எனும் ஐவரின் படைப்புகளை நோக்குகிறது.
1983-2020 ஆண்டுக் காலப்பகுதில் மேற்குலகப் புலம்பெயர்ந்தோரின் நாவல்கள் ஆரம்பகாலம், இரண்டாம் அலை எனும் உபதலைப்புகளின் கீழ் 13 ஆம் அத்தியாயத்தில் குறிப்பிடப்படுகின்றன. ஆரம்பகால நாவலாசிரியர்களாக ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், பார்த்திபன், இ. தியாகலிங்கம் என்போரும், இரண்டாம் அலையில் முக்கியமான நாவல்கள் படைத்தவர்களாக ஷோபாசக்தி, தமிழ்நதி, விமல் குழந்தைவேலு, எஸ். பொன்னுத்துரை, பொ. கருணாகரமூர்த்தி, ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், அ. இரவி. நொயல் நடேசன், ஜீவமுரளி, இளங்கோ, மெலிஞ்சிமுத்தன், வ.ந. கிரிதரன், தேவகாந்தன் என்போரும் குறிப்பிடப்படுகின்றனர்.
”புலத்தின் படைப்புக்கள்” என்ற தலைப்புடைய 14 ஆம் அத்தியாயம் இக்கால கட்டத்தில் இலங்கையில் நாவல்கள் படைத்த எஸ்.ஏ. உதயன், தாமரைச்செல்வி, முல்லைமணி, திக்குவல்லை கமால், மு. பொன்னம்பலம், உமா வரதராஜன், தெணியான், ஸர்மிளா ஸெய்யித் , ஸி.வி. வேலுப்பிள்ளை என்போர் பற்றியதாகும்.
12 முதல் 14 ஆம் அத்தியாயங்களில் நாவலாசிரியர்களை மையப்படுத்தி, அவர்கள் எழுதிய நூல்களையும், அவற்றின் பண்புகளையும் சுருக்கமாகக் குறிப்பிட்ட நூலாசிரியர், போரிலக்கியம் எனும் 15 ஆம் அத்தியாயத்திலும், பரீட்சார்த்த நாவல்கள் எனும் 16 ஆம் அத்தியாயத்திலும் படைப்புகளை மையப்படுத்தி, அவை குறித்த தனது கருத்துகளை முன்வைக்கிறார். போர்நாவல்களாக நஞ்சுண்ட காடு (குணா கவியழகன்), ஆறாவடு (சயந்தன்), Box கதைப்புத்தகம் (ஷோபாசக்தி) , ஊழிக்காலம் (தமிழ்க்கவி), ஆயுத எழுத்து (சாஸ்திரி), பார்த்தினீயம் (தமிழ்நதி), நடுகல் (தீபச்செல்வன்), போராளியின் காதலி (வெற்றிச்செல்வி) என்பவற்றையும், பரீட்சார்த்த நவல்களாக உண்மை கலந்த நாட்குறிப்புகள் ( அ. முத்துலிங்கம்), கொலம்பஸின் வரைபடம் (யோ.கர்ணன்), லண்டன்காரர் (சேனன்), இந்த வனத்துக்குள் (நீ.பி. அருளானந்தம்), பொய்மையும் வாய்மையிடத்து (ஞானம் பாலச்சந்திரன்) என்பனவற்றைக் குறிப்பிடுகிறார்.
இறுதி அத்தியாயமான நிறைவுரை மிக முக்கியமானதொன்று. இலங்கை எழுத்தாளர்களின் ஆங்கில நாவல்களுடன் தமிழ் நாவல் எழுத்தை ஒப்பிட்டுத் தமிழ் எழுத்தாளர்கள் இலக்கிய உலகில் உச்சம் தொடச் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்பதை உணர்த்துகிறார் நூலாசிரியர். அவர் இங்கு குறிப்பிடும் நாவல்கள் மிக்கல் ஒண்டாற்சியின் அனிலின் ஆவி, நிஹால் டி சில்வாவின் The Road from Elephant Pass, சாருலதா அபேசேகர தேவரதந்திரியின் கதைகள் (Stories) எனும் மூன்றுமாகும். ஒப்பீட்டுரீதியில் அவர் கூறும் கருத்து சிந்திக்கப்பட வேண்டியதொன்று. ஆகையால் அதைக் கீழே தருகிறேன்:
அவர்களால் [மேற்கூறிய எழுத்தாளர்களால்] இலங்கையைக் காணமுடிந்தளவுக்கு, இலங்கையின் ஐதிகங்களுடனும், வரலாற்றுடனும் இணைய முடிந்தளவுக்கு, மர்மங்களுடனும், முடிச்சுகளுடனும் தம் புனைவுகளை வளர்த்துச் சென்றளவுக்குத் தமிழ்ப் படைப்பாளிகள் முனைந்து பார்க்கவில்லை சிங்களமொழியானது தேசத்தின் தீவாகும் தன்மையால் தனக்கான அவதான வெளிகளைத் திறக்கிறதென்றும், தமிழ் தனக்கு முன்னுதாரணமும், முன்னோடிச் செயற்பாடுகளும் உள்ளமையின் காத்திருத்தலைச் செய்கிறதென்றும் கொள்ளலாம். இதில் முன்னுரிமையென்று எதுவுமில்லை. சிறந்ததைத் தொடர்வதில் சுணக்கம் வேண்டியதுமில்லை. அது ஆங்கிலமாயினும், சிங்களமாயினும் சரிதான்.
இலக்கிய வரலாற்றில் முன்பும் இது போன்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன. சிங்கள இலக்கியத்தில் நடந்த பரிசோதனைகள் தமிழ் இலக்கிய கர்த்தாக்களையும் கவரச் செய்தன ( ‘தமிழ் இலக்கியத்தில் ஈழத்து அறிஞரின் பெரு முயற்சிகள்’ பேராசிரியர் பொ.பூலோகசிங்கம், 1970, பக்:viii)என்பதன் அர்த்தம் அதுவாகவே இருக்க முடியும்.
மேலும், “புலம்பெயர் எழுத்தாளர்களுக்கான பாடு பொருள் கள ஆய்வு செய்து பெறப்பட வேண்டிய தொன்றன்று. ஆனால் முதல் விசாரணை அறிக்கை தயாரிப்பது போல் அல்லது ஒரு கட்புலனாகிய சம்பவமொன்றைக் கடித மொழியில் உறவினரொருவருக்குத் தெரிவிப்பதுபோல் படைப்பிலக்கியம் ஆகி விடாது என்ற தெளிவு அவசியம்” என்று படைப்பிலக்கியகர்த்தாக்களுக்கு அறிவுறுத்துகின்றார்.
இதுகாறும், இந்நூல் கூறும் விடய ஆய்வுப் பரப்பினையும், நான் நூலாசிரியர் கருத்துகளுடன் மாறுபடும் ஓரிரு இடங்களையும் தொட்டுக்காட்டியுள்ளேன். நாவலில் தோற்றமும் வளர்ச்சியும் என்பது சிக்கலானது.; ஆனால் நாவலிலக்கிய வரலாற்றைக் அவ்வவ்க் கால அரசியல் சமூக பொருளாதாரப் பின்னணிகளிலே சிக்கலற்ற நடையில் ஆசிரியர் கூறியுள்ளார். இந்நூலின் நோக்கம் இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர்களின் எல்லா நாவல்களையும் பட்டியலிடுவதன்று;
நாவலின் வளர்ச்சிப் போக்குகளையும் செல்நெறிகளையும் கண்டறிவதே ஆகும். ஆங்கிலத்தில் எழுந்த முதல்நாவல்கள் இந்தியாவில் எழுந்த முதல்நாவல்கள், இந்தியாவில் தமிழில் எழுந்த முதல்நாவல்கள், இலங்கையில் தமிழில் எழுந்த முதல்நாவல்கள் என்பன குறித்த கருத்துகளும், அவை தொடர்பான வாதங்களும், அந்நாவல்களின் பண்புகளும் எடுத்துக் கூறப்படுகின்றமை, இலங்கைத் தமிழ் நாவல் வரலாற்றைக் கால கட்டங்களாக வகுத்து அவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாவல்களின் பண்பு நலன்களை ஆராய்கின்றமை, நிறைவுரையில் காணப்படும் இலங்கையைத் தாயகமாகக் கொண்டவர்களின் ஆங்கில நாவல்களோடு தமிழ் நாவல் எழுத்துகளை ஒப்பிட்டு, அவற்றை மதிப்பீடு செய்யும் எத்தனம் என்பன இந்நூலில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அம்சங்களாக உள்ளன. தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றினை அறிய விரும்புவோர்க்கு பயன்படக் கூடிய நூல் ஒன்று பரந்துபட்ட வாசிப்பும், விரிந்த நோக்கும் கொண்ட மூத்த நாவல் எழுத்தாளரால் சாத்தியமாகியுள்ளது என்பது மகிழ்ச்சிக்கும் நன்றியறிதலுக்குமுரிய விடயமாகும்.