சிறை
இறகுகள் சிறைகளாகின்றன
சிரிப்பை சிறைப்படுத்தியதால்
அன்பே நீ மட்டும்
புன்னகை பூக்களைத்
தூவிக்கொண்டே இரு
நாட்கள் நகர்ந்துவிடும்
நானும் விடைபெற்றுவிடுவேன்
உன்னிலிருந்தும் உலகிலிருந்தும்…
எழுத்தாளர்களே..!
படிக்கத்தான் ஆசை
புத்தகங்களெல்லாம் புழுக்கள்
சாதிய மத வடுக்கள்
யார்தான் இங்கே –
இலக்கியம் படைக்கிறார்கள்
கழகங்களையும் காமங்களையும்
அரசியலையும் விற்கிறார்கள்
மறந்தேபோனது கடைசியாய்
வாசித்து வியந்ததை…
ஆசான்களே..!
சமுகத்தைச் சிந்தியுங்கள்
உங்கள் கண்களுக்கு
என்ன மாலைக்கண்ணா?
விறகொடிக்கும் தாயும்
தாலியில்லா தங்கையும்
குடித்து அழியும் சகோதரனும்
வன்கொடுமையால் பாழான சகோதரிகளும்
உங்களுக்கு தெரியவில்லையே…!
சற்று திரும்பிப்பாருங்கள்
எழுத்துக்கள் அறியா மாணவன்
சோற்றுக்கில்லா விவசாயிகள்
வேலையில்லா இளைஞர்கள்
இவர்களையும் சற்று எழுதுங்கள்
உங்கள் எழுத்துக்கள் அரியணை ஏறட்டும்
தமிழ்க்குடி உயரட்டும்..!
தமிழவள்
மறதியின் வாசகன்
மறவாமல் எழுதுகிறேன்
உன்னில் நான்
உருகி வாசிக்கிறேன்
தென்றல் தமிழே
திக்கெல்லாம் புகழ் மணக்க
என் நாவில் நீயிருக்க
கவிக்கு பஞ்சமென்ன
நாடோடியாய் தோன்றி
குமரியிலே குடிகொண்டு
பாண்டியன் அவையிலே
சங்கத்து பட்டமேற்று
அகத்தியன் அகத்திணையுரைக்க
இறைவனே களவியல்பாட
தொல்காப்பியன் மூவிலக்கணம் நவில
பாட்டன்கள் மேற்கணக்கும்
கீழ்க்கணக்கும் கச்சிதமாய் கவிபாட
காப்பியங்களும் சிற்றிலக்கியங்களும்
சிந்தனையில் சிறகடிக்க
சமய இலக்கியங்கள்
சலனமில்லாமல் பாட
இசைகளும் இசைப்பாக்களும்
இதயங்களை வருட
புத்தொளியாய் புதுக்கவிதை
புதுக்கினான் பாரதி
சிறுகதைகளும் நாடகங்களும்
நாள்தோறும் வளர்ந்திட
இதழ்களெல்லாம் இணையத்திலேர
இன்றும் என்றும் என்றென்றும்
இவ்வுலகையாளும் தமிழ்ப்பெண்ணே
இளமை எனும் கவிப்பெண்ணே
வணங்குகிறேன் உன்னை நானும்…
சொந்தம்
இறந்தும் பிறக்கிறேன்
பிறந்தும் இறக்கிறேன்
இடையிலென்ன பந்தம்
எவனுக்குத் தேவை
உங்கள் சொந்தம்
மது
சிறகில்லா மனிதர்களே
சற்று சிந்தியுங்களேன்
மதுவின் போதையிலே
மானமிழக்கும் உறவுகளே
மாணிக்க பிள்ளைகள்
மரத்தடிக்குச் செல்லவோ
கட்டியதாலி கடைவீதிக்குப் போகவோ
நீங்கள் தேவைதானா என்று
சற்று சிந்தியுங்களேன்…
மதுவை விடுங்கள்
மனிதத்தைப் போற்றுங்கள்…
கனவு
மரணித்தப் பிறகும்
ஒருநொடி உயிர்ப்பெற்றேன்
உன் நினைவுகளாலல்ல
என் கனவுகளால்…
துளிப்பாக்கள்
சிதறிய சில்லுக்கள்
சிறகொடிந்த மனது
ஒட்டவைக்க முடிவதில்லை…
தோல்லியுற்ற மனது
இதயங்கள் இடம்பெயர்கின்றன
சிக்குண்டு தவிக்க
காதலால்
நீ ஏன் சிவப்பானாய்
கன்னத்துக்குதான் தெரியும்…
முத்தம்
மலர்கள் உதிர்வதேயில்லை
சில மனங்களால்…
காதல்
ஆசைகள் தீர்வதேயில்லை
தீர்ப்புகள் என் செய்யும்….
தகாத உறவு
நானும் நாமானேன்
நாசமானதே மிச்சம்…
குடும்பம்
உனக்கு தெரியுமா?
எனக்கு தெரியாதே?
விட்டுவிடேன் விளக்கொளி எதற்கு?
அலர்
நீண்டநாள் தவம்
தேவதைகள் வரவில்லை
கலைந்தே போனது…
திருமண கனவு
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.