வாசுகி கணேசானந்தனின் (ஆங்கில இலக்கிய உலகில் V. V. Ganeshananthan என்றறியப்பட்டவர்) Brotherless Night (சகோதரனற்ற இரவு) நாவலுக்குப் புனைவுக்கான , 2023ஆம் ஆண்டுக்குரிய, $150,000 (US) மதிப்புள்ள Carol Shields Prize என்னும் இலக்கிய விருது கிடைத்துள்ளது. வாழ்த்துகள்.
இவர் இலங்கைத் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர். ஏற்கனவே Love Marriage என்னும் நாவலையும் எழுதியுள்ளார். இரு நாவல்களுமே இலங்கையில் நிலவிய போர்ச்சூழலை மையமாகக் கொண்டவை. இதுவரை நான் வாசிக்கவில்லை. இணையத்தில் இவை பற்றிக் கிடைக்கும் குறிப்புகள் அடிப்படையில் இவ்விதம் கூறுகின்றேன்.
சகோதரனற்ற இரவு நாவலின் கதைச்சுருக்கம் மருத்துவம் படிக்க விரும்பிய பதின்ம வயதுத் தமிழ்ப் பெண்ணின் போர்ச்சூழல் அனுபவங்களை மையமாகக்கொண்டது. இவரது நான்கு சகோதரர்களை போர்ச்சூழல் இவரிடமிருந்து பிரித்து விடுகின்றது. பெண் மருத்துவ விரிவுரையாளர் ஒருவர் இவரை மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தும் செயற்பாடுகளுக்கு ஊக்கப்படுத்துகின்றார். இவ்விதம் நாவல் செல்வதை இந்நாவலைப்பற்றி எழுத்தாளர் இளங்கோ ( டி.செ.தமிழன் ) 'எழுநா'வில் எழுதிய விமர்சனக்குறிப்பிலிருந்து அறிய முடிகின்றது.
இலங்கை அரச படைகளின் மனித உரிமை மீறல்கள், போராளிகளின் மனித உரிமை மீறல்கள், அந்நியப் படையின் மனித உ ரிமை மீறல்கள் எனப் பலவகைச் சூழல்களுக்குள் ஒரு சாதாரணப் பெண் எதிர்கொள்ளும் பல்வகை உணர்வுபோராட்டங்களை நாவல் விபரிப்பதாகக் கருத முடிகின்றது.
தனது கட்டுரையில் டி.செ. தமிழன் "இந்த நாவலில் ‘கே’ என்கின்ற பாத்திரத்தில் வருவது புலிகள் இயக்கத்து திலீபன் என்பதும், அஞ்சலி என்ற பெயரில் வருவது ராஜனி திராணகம என்பதும் எல்லோருக்கும் எளிதில் புரியக்கூடியது. " என்று குறிப்பிடுவதிலிருந்து கதாசிரியர் எவ்விதம் நாவலுக்கான மையக்கருவைப் பெற்றுக்கொண்டார் என்பதை ஊகிக்க முடிகின்றது. தனது சகோதரர்களைப் போர்ச்சூழலுக்குப் பறிகொடுத்தவர் நாவலின் நாயகி என்பதை அறிந்தபோது எழுத்தாளர் சந்திரவதனா செல்வகுமாரன் நினைவுக்கு வநதார். அவர் குடும்பத்திலும் மூன்று சகோதரர்கள் போராட்டத்தில் இணைந்து குடும்பத்தை விட்டு நீங்குகின்றார்கள்.
அண்மைக்காலமாக இலங்கைத் தமிழச் சமூகத்தை அடியாகக் கொண்ட இளநதலைமுறையினர் பலரின் ஆங்கில நாவல்கள் வெளியாகி ஆங்கில இலக்கிய உலகின் கவனத்தைப் பெற்றிருப்பது எதிர்காலத்தில் மேலும் பல கதாசிரியர்கள் உருவாக வழி வகுத்துள்ளது ஆரோக்கியமான விளைவே.