குறுந்தொகையில் பரணர் பாடல்களில் நடை உத்திகள்! - முனைவர் சு.சோமசுந்தரி, ஆய்வறிஞர், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை -
முன்னுரைசங்க இலக்கியங்களில் எளிமையான மொழி நடையும், கருத்தாழம் மிகுந்த பாடல்களையும் உடைய நூல் குறுந்தொகை. அழகான சொல்லோவியங்களாக அதன் பாடல்கள் இன்றும் படித்து இன்புறத்தக்கன. குறுந்தொகையில் பரணர் பாடல்களில் நடை உத்திகளை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
பரணர் பாடல்கள்
குறுந்தொகையில் பரணர் 17 பாடல்களை எழுதியுள்ளார். இவரது பாடல்கள் தலைவனைப் பிரிந்த தலைவியின் வருத்தத்தையும், தலைவியைச் சந்திக்க வரும் தலைவன் அல்ல குறிப்பட்டு தலைவி பெறுவதற்கறியவள் என்று புலம்புவதாகவும் அமைந்துள்ளன. இவரது பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகள் இடம்பெற்றுள்ள தன்மையும் அறியமுடிகிறது. குறிப்பாக நன்னன், பாண்டியர்களில் அதிகன், அழிசி மன்னனின் ஆர்க்காடு நகர் பற்றிய குறிப்பு ஆகியவையும் குறிக்கத்தக்கன.
நடை என்பது
நடை என்பதற்குப் பலரும் வரையறை வகுத்துள்ளனர். “எண்ணங்களையும் மனதில் எழும் உணர்ச்சிகளையும் உரிய சொற்களால் வடித்துக் கொடுக்கும் கலைத்திறனையே நடை எனலாம்” என்று இ.சுந்தரமூர்த்தி குறிப்பிடுகிறார்.
நடை என்பது புலவன் தான் சொல்ல வரும் கருத்தைப் புலப்படுத்த பயன்படுத்தும் உத்திகளையும் அதன் மூலம் வெளிப்படும் கவிதையழகுமே நல்ல நடைக்குச் சான்றுகளாகும். அவ்வகையில் பரணர் பாடல்கள் சிறப்புடையன.