*ஓவியம் - AI 'மயிலியப்புலக்குளம் பற்றிய நினைப்பு ' மனதில் வட்ட அலைகளை ஏற்படுத்த , ஏக்க மூச்சுக்கள் புகையாய் எழ அந்த செந்தாமரைக் கிராமம் ...சித்திரமாக விரிகிறது . அவ்விடத்து வெற்றிக்கழகம் , சட்ட கோப்புகளை வைத்துக் கொண்டு பல விசயங்களை சாதித்து வருகிறது , கோவில் வளவுக்குள் கலை நிகழ்ச்சிக்கான மேடை ஒன்றை அமைப்பதற்கான நிதி சேகரிப்புக்காக உப அரசாங்க முறையிலான சிரமதானம் நடைபெற்றது , அந்த குளத்தில் சிறிதளவு கனமண்ணை வெட்டிய போது , செவ்வேலும் வேல்முருகு , பரமானந்தம் ... அவன் என வகுப்பு தோழர்கள் பலருடன் கூடையில் மண்ணை ஒருத்தர் ,மாறி ஒருத்தரிடம் கொடுத்து குளத்து அணையில் கொட்டியது நினைவுக்கு வந்தது . அலுவலகர்கள் வந்து வெட்டியதை பார்வையிட்டு அதற்கான தேனீர்ச்செலவை கொடுப்பர் , அவ்வலுவலகத்தில் வேலை பார்க்கிற கிராமத்தைச் சேர்ந்த தவபாலண்ணரின் புத்தியில் உதித்த புத்திசாலித்தனம் . தேனீர் , வடை ...போன்றவற்றை ஊர்க்காரர்களே வீடுகளிலிருந்து கொண்டு வந்து வழங்கினர் . கிடைக்கிற பணத்துடன் வெளிநாட்டிலிருக்கிறவர்களும் அதற்கு நிதியளிக்க சம்மதித்திருந்தார்கள் . கூட்டு முயற்சி இல்லாமல் இப்படியான திட்டங்கள் வெற்றி பெற முடியாது . கிராமத்தின் தலையாய கால்பந்துக்குழுவும் அவர்களுடையது தான் .
வந்ததிலிருந்து , இவன் , அடிக்கடி இப்படியே கிராம நினைப்புகளில் கரைந்து போய் விடுகிறவன் . ஈழவரசுக்கு எங்கேயிருந்து தான் ' மதம் பிடித்தது போன்ற அந்த உன்மந்தம் பிடித்ததோ ? '..., தமிழரின் வாழ்வைச் சிதைத்து சீரழித்துக் கொண்டே செல்கிறது . 'பக்கத்திலிருக்கிறவன் வாழ்ந்தால் தானும் வாழ்வான்' என்ற செவ்விந்தியரின் சிந்தனை எல்லாம் கிடையாது .' இனப்பகை' என்பது பஞ்சம் பசியில் வீழ்ந்தாலும் போகாத வியாதி , மாறுவதற்குப் பதில் பெருகிக் கொண்டே போகிற ஒன்றாக . காந்தியின் அகிம்ஷை , புத்தரின் ஞானம் , யேசுவின் நேசம் , இந்துக்களின் ஆன்மீகம் எதிலுமே நம்பிக்கைகளை துடைத்து விடுகிற அறுந்த இவர்களின் அரசியலில் அகப்பட்டுக் கொண்டு விட்டோம் . பாலஸ்தீனர்களை அழிக்கும் இஸ்ரேல் போல் , கிரீக் இளைஞர்களைப் பெருமளவில் கொன்ற கிரீக் அரசைப் போல , ஈழத்திலும் கொன்ற ...ஒரு மாற்றப்பட வேண்டிய அரசியலாகக் கிடக்கிறது .
உலகத்தில் கிரிக்கெட் மாட்ச் போல நாடுகளிலும் இனப்படுகொலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன . வெளிக்கு ..இப்படி தெரிந்தாலும் பின்னணியில் சில பெரிய சக்திகள் இருப்பதும் தெரியாததல்ல . சோரம் போன கிழட்டு நாடு இது , இஸ்ரேல் போன்று ...நிறுத்தப்படும் போல தோன்றவில்லை . தொடர்கதையாய் வேதனையை விதைக்கிறது . நடத்தியவர்களை வரும் ஆட்சியாளர் கெளரவம் குலைந்து விடும் போல பகிரங்கப்படுத்தாமல் , தீர்வுகளை முன் வைத்தது ,சீரமைப்பு செய்யாமல் , அவர்தம் மேல் தூசி கூட படிய விடாது ...கடந்து விடுகிறது . பழைய பெருஞ்சாலிகளின் சிலைகள் நகரமெங்கும் . படையினர் அவற்றை வடக்கு , கிழக்கிலும் நிறுவி விட , இருக்கிற அழகான இடங்களுக்கும் தமிழ்ப்பெயர்களுக்கு சிங்களப்பெயர்களையும் இட்டு உளவியல் ரீதியிலும் சித்திரவதை புரிகிறது . புதிய ஆட்சியினர் சில நல்லாட்சி நிலவ விரும்புகிறது . ஒப்புக் கொள்கிறோம் . ஆனால் , பழையதைக் கிளறுவதால் செய்யக் கூடிய நல்லதையும் செய்ய முடியாமல் போய் விடுகிறது ...என மாறுகண் கொள்வது , பாதிக்கப்பட்டவர்களுக்கு தவிர்க்க முடியாமல் சந்தேகங்களையும் ஏற்படுத்தி விடுகிறது . மாகாண (வரசு) ஜனநாயகத்தை ஏற்படுத்துவது தான் சிறந்த வழி . ஆனால் , உள்ளூராட்சி தேர்த்தலின் போதே மாகாணவரசு தேர்த்தலையும் நடத்தி விடுவது செலவை அரைவாசியாக்கி விடும் . ஆனால் , நடத்த பணமில்லை என கையை விரிப்பது கடந்த ஆட்சியாளரைப் போலவே ...கடத்தி விடுற உத்தி . நீதிமன்றத்தை மதியாது எழுந்த விகாரைக்கு , மடத்திற்கு ....பேசித் தீர்க்கச் சொல்வது ....எல்லாம் பள்ளமும் , குழியுமாக கிடக்கிற வழமையானபாதையையே காட்டுகிறது . பேச்சு மட்டும் போதாது , செயலிலும் நடை போட வேண்டும் . உணர்வார்களா? . இவர்களின் இந்திய எதிர்ப்புக் கொள்கை மறுதலையாக மலையக மக்களையே வருத்தி வருகிறது . தற்போதைய தலைவர் , மலையக மக்களைப் பற்றி உருக்கமாக பேசியுள்ளார் . 'அவர் இதயபூர்வமாக பேசுகிறார் ' தெரிகிறது . ஆனால் கட்சி ???
பல்கணியில் இருந்து கட்டடக்காடு ....., இல்லை கட்டடகூடுகளைப்பார்த்துக் கொண்டு இப்படி எதையோ நினைத்துக்கொண்டு நின்ற போது '' செவ்வேல் , தெரியுமா செய்தி , உன்னுடன் படித்தவனாக இருக்க வேண்டும் , வேல்முருகு இன்று காலை இறந்து விட்டான் ...முகநூலில் பார்த்தேன் '' என்று தம்பைய்யா அலைபேசியில் தெரிவித்தான் . அதிர்ச்சியாய் இருந்தது . அவனும் முகநூலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறான் . ஏற்படுத்திக் கொள்ளவில்லை . ' வாட் அப் ' உடன் நிறுத்திக் கொண்டிருக்கிறான் . அதனூடாக நண்பர் சிலர் முகநூல் விபரங்களை தந்து கொண்டிருக்கிறார்கள் . அகதியானவனின் வாழ்வில் தான் எத்தனை மிகுதியான குழப்பங்கள் . பெல்கணியிலிருந்து வீதியை , கட்டடங்களை , மனிதர்களை , நாய்க்குட்டிகள் இழுத்துச் செல்லுபவர்களைப் பார்க்கிறான் . மழைத் தூரல்களை யாருமே லட்சியம் செய்யவில்லை . இருண்டு பெருமழை வரும் அறிகுறியில்லை . தீடீரென வருமா , வராதா என்பதற்கு அவ்வளவு தான் மரியாதை . தூரத்தே இடி முழங்கி அடங்கிறது . இதயம் விம்மி அடங்கிறது. உள்ளே கிடக்கிறதை கை எழுதத் துடிக்கிறது . அழுகையை இறக்கி வைக்க வேற வழி இல்லையே . வாழ்க்கை இவ்வளவு தானா? .
'முருகு பற்றி வட்ட , வட்ட நினைவுகள் எழுந்து கொண்டேயிருக்கின்றன . உள்ளே சென்றவன் பேப்பரையும் பேனாவையும் எடுத்துக் கொள்கிறான் .
சட்டம்பியார் கதிரேசுப்பிள்ளை தம் பெடியள்களுக்கெல்லாம் கதிர்முருகு , செம்முருகு , வேல்முருகு ...என முருகுவில் காதல் கொண்டு பெயரை வைக்க , பெடிச்சிகளுக்கு கமலமணி , சிவமணி என... மனைவியின் சுந்தரமணி இல் மணியையும் சேர்த்து வைத்திருக்கிறார் . குடும்பம் ஒரு கதம்பம் . வீட்டிலே மூன்றாவது பையன் வேல்முருகு , செவ்வேலும் வீட்டில் மூன்றாவது பிள்ளை தான் .
செவ்வேல் , வகுப்பிலே புதிதாய் நுழைந்த போது , '' வந்தான் வரத்தான் '' என்று முதலில் வேல்முருகுவே முகமன் கூறி வரவேற்றான் . பகிடியானவன் . கண்ணில் ஒரு சிரிப்பு .''இதற்கு என்ன அர்த்தம் ? '' என்று செவ்வேல் கேட்க '' இந்த கிராமத்தை அடியாகக் கொள்ளாதவர்களை சொல்லுறது " என்றான் . இப்ப , வடக்கு , கிழக்குக்கு சிங்களவர்ளும் 'வந்தான் வரத்தான்கள் ' . இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கிற கதையாய் என்ன ஆட்டம் போடுறார்கள் . ஆனால் , அன்று இவர்களுக்கு கலவரம் நடைபெற்றிருப்பதையே தெரியாத , தொடர்ந்தும் நடைபெற இருப்பதை புரியாத பாலர்பருவம் . அந்நேரம் 12 - 13 வயதுடையவர்களை வேற எப்படிச் சொல்வது ? . செவ்வேலின் அம்மாவிற்கு ஆசிரியப் பணியில் மாற்றம் கிடைத்து கிராமத்துக்கு வருகிறார் . கூடவே வருகிற அவர்களில் அவனும் தங்கைமாருமே அதே பள்ளிக்கூடத்திற்கு படிக்க வருகிறார்கள் .
செந்தாமரைக் கிராமபள்ளிக்கூடத்தின் முகப்பு கதவைத் திறந்தவுடன் விளையாட்டு மைதானம் பிறகே கட்டடங்கள் . இரண்டு கட்டடங்கள் நேர்கோட்டில் , நெசவுடன் கூடியது ...கொஞ்சம் முன் தள்ளி, நெசவுக்குப் பின்னால் மேடை அமைத்து கலைவிழா நடத்தக் கூடிய நிலம் . வேலியோரம் ஆண் , பெண் பிரிவு கழிப்பிடம் . வீதியோடு அண்மித்திருந்த முதலாவது நாற்சாரமுடையது . ஒரு நீளத்தில் அதிபரின் அறை , இரசாயன ஆய்வுகூடம் , நூலகவறை ( பாவிப்பில் இருக்கவில்லை) என இருக்க , அடுத்த மூன்று பக்கங்கள் அரைச்சுவர்களுடன் ....6 - 10...வரையிலான வகுப்புகள் பிரிப்புப் பலகையுடன் காணப்பட்டன . ஒவ்வொன்றும் 20 - 25 பேர்களை கொண்டவை . எல்லாத்திலும் அரைக்கரைவாசி பேர்கள் பெண்கள் . நடுவிலிருந்த மண்தரையில் ஒரிரண்டு செவ்வந்திச் செடிகள் சிலிர்த்து பூத்திருந்தன .
இக்கட்டத்திற்குப் பக்கத்தில் கிணறுடன் கூடிய சிறிய தோட்ட நிலம் .அடுத்ததாக மற்றைய கட்டடம் ஒரு பெரிய மடம் போல சுற்றிவர அரைச்சுவருடன் உள்ளே பிரிப்புகளுடன் ..வகுப்புகள் , ஒரு பக்கம் சிறிய மேடைக்கட்டமைப்பு இருந்தது . ஒவ்வொரு நாளும் அங்கே மாணவர் எல்லாரும் கூடி தேவாரம் திருவாசகம் பாடுறது , ஆசிரியர் எவரின் பேச்சுகளும் நிகழ்தேறுற அசெம்பிளி மடமாகவும் இருந்தது . அச்சமயல் பலகை தடுப்புகளை அகற்றி விடுவர். சரஸ்வதி பூஜை எல்லாம் அங்கேயே நடைபெற்றன . நாடகம் , சங்கீதம் கலந்த பக்திப்பாடல்கள் , நடனம் எல்லாம் கூட பூஜை காலத்தில் நடைபெறும் . அடுத்தது முழுதுமாக யன்னல்களுடன் அடைத்த தாக முன் தள்ளி இருக்கிற கட்டடம் .அதில் நெசவுசாலை , பிறிம்பாக நீட்டிக்கட்டப்பட்ட சங்கீத வகுப்புறையையும் கொண்டது . பக்கத்தில் பெரிய அகண்ட நிழல் பரப்பும் பெரிய மரம் , பழமரமில்லை .... ஒன்று நின்றது . அதன் கீழே வகுப்பு விடுற போது பெட்டைகள் விளையாடுறது எல்லாம் ...கீசு மாச்சூ என ஒரே சத்தமாக இருக்கும் . சிலவேளை ஆண்களும் கிளித்தட்டு அங்கே விளையாடுவார்கள் . பின்னாடி பூண்டு பத்திப்போன கணிசமான வளவு. அத்துண்டை யாரோ ஒருவர் பள்ளிக்கூடத்திற்கு அன்பளிப்பு செய்ததாக சொல்லப்படுகிறது .
முருகுவிற்கு சுருளான முடி . அவன் வீட்டிலேயும் சிலருக்கு அப்படி சுருள் முடி . ஆசிரியர்கள் பெருந்தன்மையினராக இருந்தனர் . எப்பவுமே முருகு கண்களில் சிரிப்பு தெரிய ''தமிழா , தமிழா ! , திமிழா ,திமிழா ...'' என பாடுவான் . '' டேய் ! , நீ , நான் எல்லாம் ஒரு சாதியடா , ஆசிரியர் சாதியடா '' என்பான் இடையிடையே . செவ்வேல் சாதி பற்றியே கேள்வி படாதவன் . இங்கே வந்து தான் கேள்வி படுறான் . அவனுக்கு விளங்கவில்லை தான் . அவனுக்கு எல்லாரும் நண்பர்களே .
முருகுவின் தந்தையார் அவர்களுக்கு பாடம் எடுக்கவில்லை , தவிர அவனோட வாரப்பாடாகவே கதைப்பார் . அங்கே நிகழ்கிற நாடகம் , கலைகளை எல்லாம் அவரே தயாரித்து மாணவர்களைக் கொண்டு மேடை ஏற்றி விடுவார் . பாராளமன்ற உறுப்பினர்களும் வந்து பேச்சுக்கள் நிகழ்த்தி இருக்கிறார்கள் . விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றன . ஒருமுறை மேடை அமைத்து வெளியாரும் பங்குபற்றிய பெரியளவிலான கலைவிழாவும் நடை பெற்றது . திரைப்படமாக வந்த ஞானஒளியை அவர்கள் நாடகமாக திறம்பட நடித்திருந்தனர் . அப்ப தான் அங்கே இன்பமண்ணை தலைமையில் இலக்கியத்தில் ஈடுபாடுள்ள பெரிய செட் ஒன்றும் இருக்கிறது தெரிந்தது . அச்சமயம் மேல் வகுப்பினர் நடித்த ' குமணவள்ளல் , சிபிச்சக்கரவர்த்தி 'நாடகங்களும் மேடை ஏறின . அசத்தி இருந்தனர் . அப்படிப்பட்ட ஒரு கலைஞராக பக்கத்திலிருந்த பாரதி வாசிகசாலையிலும் கிளியண்ணையும் இருந்தார் . பிறகு , அவர் வெகு விமர்சிகையாக பாரதிவிழாவை அங்கே நடத்தி இருக்கிறார் . அவர் தமிழரசுக்கட்சியின் தொண்டரும் கூட . செந்தாமரையிலுள்ள பல குறிச்சிகளிலும் தொண்டர்கள் பலர் தம் தம்பகுதியில் எல்லாம் ஒளிவீசச் செய்து கொண்டிருந்தார்கள் . விருப்பமான , ஆசிரியைகள் என ....கதம்பமாகவே காலம் கரைந்தது . ஒரு ஆசிரியைக்கு கல்யாணம் நடந்தது . வகுப்பே அள்ளுப்பட்டு போயிருந்தது .
அப்படி பள்ளியும் , அயலும் , வீடு என மட்டுமே கிடந்த ....வேறெதுமே தெரியாத பறவையாயே இருந்தான் . அவன் குறிச்சியிலிருந்த பிள்ளையார் கோவில் வளவிலிருந்த புளியம் மரத்தில் ஏறி விளையாடுறது , அவ்விடத்துப் பெடியளுடன் அவ்வளவில் விளையாடுவது என்று காலம் ஓடியது . அவ்விடத்தவருக்கு பெடியள் எல்லோருமே செல்லப்பிள்ளைகள் . சைக்கிள் கடை வைத்திருப்பவர் ஒருவர் அம்மா , ' அண்ணருக்கு சைக்கிள் வாங்கிறது கஷ்டமாக இருக்கிறது ' என கூறியதை அறிந்து , சைக்கிள் ஒன்றை பொறுத்தி வந்து '' டீச்சர் , மாசம் மாசம் கொஞ்சம் ,கொஞ்சமாக கொடுங்கள் '' எனச் சொல்லி ஹீரோ சைக்கிள் ஒன்றைக் கொடுத்திருந்தார் . வேலைக்காசை வாங்கவில்லை , தவிர அவருக்கு கிடைக்கும் கழிவு விலையில் வாங்கிய ...பணத்தைமட்டுமே பெற்றுக் கொண்டார் . அந்த செட்டியார் மடத்தை ...மறக்க முடியாது .
பிறகு , அந்த சைக்கிளை , அண்ணர் பொதுசன நூலகத்தில் , ஆமாம் ! , சிங்களக்குண்டர்கள் எரித்த அதே நூலத்தில் தான் களவு கொடுத்தது ஒரு சோகக்கதை . அச்சமயம் சுதாராஜ் என்ற எழுத்தாளரும் பத்திரிகையில் 'சைக்கிள்' என்ற சிறுகதை ஒன்றை , அவருடைய சைக்கிள் களவு போனதை வைத்து சோகத்துடன் எழுதியிருந்தார் . செவ்வேல் , சைக்கிள் ஒன்றையும் பறி கொடுக்கவில்லை . தவிர , இப்பவும் கூட கனவில் , அவனுடைய சைக்கிள் களவு போறது போன்ற நிகழ்வு... வந்து போய் கொண்டே இருக்கிறது . அன்றையிலிருந்து அவர் அவனுக்கும் பிடித்த எழுத்தாளராகியும் விட்டார் . இனம் இனத்தோடு சேர்கிறது . ஒரு வருசத்திற்குப் பிறகே . , அங்கே அடியாகக் கொண்டிருக்கிற சிலரும் அவர்களுக்கு தூரத்து உறவினர் என இருப்பது தெரிய வருகிறது . அதே போல இங்கிருப்பவர்களை மணமுடித்து வந்த சிங்களவர்களை, அவர்தம் சந்ததியினரை இவ்விடத்தைச் சேர்ந்தவரே என துணிந்து கூறலாம் . வலோத்காரமாக வந்தவர்கள் ,குடியேற்றப்பட்டவர்கள் ... இல்லை .
ஒரு வருசம் போக . அதே கிராமத்தில் இன்னொரு பகுதியிலிருந்த பாலாமடத்தடிக்கு குடியிருப்பு மாறிய பிறகு அங்கே அடியாகக் கொண்டிருக்கிற சிலரும் மணம் முடித்தலின் மூலம் படரும் விதத்தில் அவர்களுக்கு தூரத்து உறவினராக இருப்பது தெரிய வருகிறது . அதே போல இங்கிருப்பவர்களை மணமுடித்து வந்த சிங்களவர்களையும் , அவர்தம் சந்ததியினரையும் இவ்விடத்தைச் சேர்ந்தவர் என துணிந்து கூறலாம் போல தோன்றுகிறது .ஆனால் , தமிழர் கிடைக்க வேண்டிய நியமனங்களுக்கு பதிலாக வலோத்காரமாக நியமிக்கப்பட்டு வந்தவர்களை , குடியேற்றப்பட்டவர்களை ... அப்படி கூற முடியாது .
உயர்வகுப்பிற்கு படிக்க செல்வதற்கு முதல் ஒரு கால இடைவெளி ஏற்பட்டது . அச்சமயத்தில் தான் முருகு மழைக்காலத்தில் வயல்க்கேணிகளில் , கிணறு போல நீள அகலத்தில் கூடிய நீர்த்தேக்கங்கள் எல்லாம் கட்டப்படிருக்கின்றன , நீச்சல் அடிக்கப் போறது... இருக்கிறது என்பதை அறிமுகப்படுத்தினான் . செவ்வேல் ' தத்து நீச்சல்காரன்' , அது அவனுக்கே தெரியாது . தலையை மேலே எடுக்காது நீந்துவான் . முன்னர் இருந்த இடத்தில் குளங்களில் மற்றவர்களைப் பார்த்து நீந்த ஆசைப்பட்டு தண்ணீரை துளாவியதில் ஏற்பட்டிருந்தது . வேல்முருகு ''மிதக்கிறது சுலபமடா'' என்று கூட்டிச் சென்றான் . கடலுக்கு போற நடைமுறை வேற அங்கிருப்பதை இருப்பது தெரிந்திருந்ததாலே நீச்சலைப் பழக அவசரப்பட்டான் . கடலுக்கு நீச்சல் தெரியாதவர்களை கூட்டிச் செல்ல மாட்டார்கள் . முருகுவுக்கு ..நீச்சல் பழக்கத் தெரியாது . ஆனால் , தெரிந்த ஒருவரை ஏற்பாடு செய்து உதவினான் . அவர் அவனுக்கு அண்ணர் முறை . அவர் தான் 'அரைநீச்சல்'வருகிறது என்பதை தெரியப்படுத்தியவர் . கீழே அமுக்கி கொண்டு போய் , மேலே வரவைத்து என ...பல தடவைகள் நீரைக் குடிக்க வைத்து திக்கு முக்காட வைத்தார் . பிறகு தலை மேலே தானாக மேலே எழ நீச்சல் ...சுலபமாக வந்தது . பிறகு , முருகுவோடு நிறைய தடவைகள் நீந்தி இருக்கிறான் . அவனைப் போல பின்புறமாக கரணம் அடிக்க.. மட்டும் வரவேயில்லை . கண் இமை மடலையும் மடித்து வேறு விசித்திரம் காட்டுவான் . இவன் முன்புறமாக ஒரு கரணம் அடிப்பான் . கிராமத்தில் இரண்டு , மூன்று அடிப்பவர்கள் இருக்கிறார்கள் .
முந்தின வகுப்பில் அமைதியாக இருந்த ஒரு தோழர் அவனுடைய கடலாசையையும் நிறைவேற்றி வைத்தார் . எவரையுமே குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள் . ராகவனிடம் இருந்து கிடைத்த அந்த எதிர்பாராத உதவி உங்களுக்கும் கூட எவரிடமிருந்தும் கிடைக்கலாம் . அதற்கும் நேரம் வர வேண்டும் . அவன் கிராமத்தின் தெற்குப்பகுதியிலிருந்து ...வாரவன் . சனி ,ஞாயிறுகளில் தகப்பனுடன் சேர்ந்து சிலவேளை கடற்டொழிலுக்கும் செல்கிறவன் . ''ஒரு இறாத்தல் பாணும் , கொஞ்சம் பச்சை மிளகாய் வெங்காயம் கொண்டு வா . மிச்சத்தை நாம் பார்த்துக் கொள்கிறோம் '' என்றான் . சொன்ன இடத்தில் , அவனோடு ஜெயந்தனும் நின்றான் . அவனுடைய மச்சான் . அவனும் அதே வகுப்பு தான் . வள்ளத்தை அவிழ்த்து வந்தான் . மூவருமாக களங்கண்ணி ஒன்றுக்கு போனார்கள் . தடியை ஊன்றி கயிறை கட்டி வள்ளத்தை நிறுத்தினான் . ராகவனும் , செவ்வேலும் வலைக்குள்ளே இறங்கினார்கள் . ஆளை தாழ்க்கும் கடல் . ஆழத்திற்குச் செல்ல எப்படி மீன் . நண்டைப் பிடிக்கிறதென காட்டினான் . ஜெயந்தன் அவற்றை ராகவனிடம் வாங்கி வள்ளத்திற்குள் போட்டான் . களங்கண்ணிக்கு வெளியே வந்து கொஞ்ச நேரம் நீந்திகளித்தார்கள் . கரையிலிருந்த கூடாரம் போன்ற வாடிக்குச் சென்று , மீன் பிடிக்க வாரவர்களின் தங்கிமடம் . அடுப்பு , விறகு , சுள்ளி...எல்லாம் கிடந்தன . பானை சட்டி , சாப்பிடுற கோப்பை மேசை போன்ற மரச்சட்டத்தில் கவிழ்த்திருந்தன . கூரையில் தடவி தீப்பெட்டியை எடுத்து வந்தான். கொண்டு வந்ததை சுட்டு , உப்புச்சொதி வைத்து உறைப்புடன் உப்பால் காய்ந்த வாயில் சாப்பிட வெகு சுவையாக இருந்தது . ''இந்த கிராமத்துக் கடன்களை எல்லாம் செவ்வேல் எப்ப தீர்க்கப்போறானோ ? ''.
வசதியும் தொழில் வாய்ப்புமில்லாது கரையும் வாழ்வைக் குறித்து கழிவிரக்கப்படுறான் . மற்றவர்கள் கிராமத்தை விட்டு சிதறல்களாகி யாழ் இந்துக்கல்லூரி ,மத்தியக்கல்லூரி , வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரி என படித்துக் கொண்டிருந்தாலும் அன்று எல்லோரும் கிராமத்திலே தான் இருந்தார்கள் . அதனால் ,தொடர்புகள் முற்றாக அறுபட்டு போயிருக்கவில்லை .
செவ்வேல் சிறு வயதிலிருந்தே வெளிவாரியாகவும் புத்தகங்களை வாசிக்கிறவன் . 18வயசில் ஒரு வேலையும் (பகுதி) கிடைத்து படிக்கிறதும் இருந்தால் நல்லம் என யோசிப்பவன் . அப்படியான ஒரு கனவுவாழ்க்கை , 1ம் மண்டலம் , 2ம் மண்டலம் , 3ம் மண்டல நாடுகள் ...மண்ணாங்கட்டி , எங்கையும் கிடைக்கக் கூடிய ஒன்று தான் . இன , மத ...கண்றாவி ஊழல்கள் மட்டும் இல்லாது ஜனநாயகம்... மேலோங்கி இருக்குமென்றால் எட்டக் கூடிய தூரம் . முதலாவது அப்பன் நல்லாய் இருக்க வேண்டும். , அது மத்திய அரசு . மூளை போன்று புத்திசாலியாக இயங்கி வழி காட்ட வேண்டியது . பிள்ளைகளின் உரிமைகளில் (மாகாணங்களில் ) அதிகம் மூக்கை நுழைக்காத இங்கிதம் நிலவ வேண்டும் . ஒன்றுக்கு மேற்பட்டவர் சேர்ந்தாலே சக்தி ஒன்று பிறக்கிறது . குழு அமைப்பான படைக்கட்டமைப்புகள் நிறைய , அவற்றில் பிரமாண்டமான சக்தி கிடக்கிறது . அதன் கொள்கைகளில் இன , மத வெறிகள் சேர்ந்து விட்டால் ...கெட்டசக்தியாகி விடுகிறது . மக்களுக்கு அது வெளிபடுற , வாய்ப்பளிக்கிற தன்மைகளால் 'எங்களுடைய புஜங்கள் ' என்ற பெருமிதத்தை ஏற்படுத்தாது விட்டால் 'ஒரு அன்னியசக்தி 'தான் . மற்றும் வெளிநாட்டுடன் நன்மை பயக்கும் தொடர்புகளை பேணுவது அதன் முதன்மையான வேலை . அந்த நாட்டு உடலில் 'மாகாணவரசு' இதயம் போன்ற பிரதான பாத்திரத்தை வகிக்கிறது . சுயதிறனுடன் இயங்க விடவே வேண்டும் . அடுத்தே உள்ளூராட்சி சபைகள் . உடலில் கிடக்கிற கால் , கை போன்றவை . ஆனால் , ஈழமோ , இஸ்ரேலைப் போல (அரசியல்) ஊழல் களஞ்சியமாகி மெண்டலாகவே இருக்கிறது .
பிரீட்டீஸ் கல்வி முறையிலே ஏதோ, ஏதோ பிழைகள் கிடக்கிறது என்று அவனுக்கு தோன்றிக் கொண்டே இருந்தது . கிராமம் , நகரம் என்ற வேறுபாட்டில் நகரம் விளையாட்டில் அட்வான்ஸாகவே இருந்தது . அவனுடைய கிராம வாழ்வில் அதன் அவசியம் தெரியாது அவன் துப்பரவாக ஈடுபட்டதே இல்லை என்ற நிலமை . நகரப்பள்ளியில் , வகுப்பில் கூட படித்த பகிர் , புதிசாய்ரோல் மொடலாக தெரிந்தான் . கலா ''மரதன் போட்டியிலே பங்கு பற்றன் '' என்று கூறினான் . சிவக்குமார் ''என்னோடு மைதானத்திற்கு வந்து சேர்ந்து ஓடு .எல்லாம் வெல்லலாம் ! '' என்றான் . அப்படி .இரண்டொரு தடவைகள் வட்டமடித்தான் . 'ஏன் ? , நகரத்திலிருக்கிற ஆச்சி வீட்டிற்கு கிராமத்திலிருந்து ஓடி வரக் கூடாது ? 'என்ற எண்ணம் தோன்றியது . அங்கே வந்து தான் அருகிலிருக்கிற பள்ளிக்கூடம் போறவன் . ஒருநாள் , ஆச்சி வீட்டிலே புத்தகப்பையை வைத்து விட்டு ..செயல்படுத்தினான் . காலையிலே , அப்பர் வீதியில் நடை போறவர் . அவர் எதிர்பட'' என்ன உயர் வகுப்பிலே வந்து விளையாடுறே ''என திட்டி இழுத்து வீட்டிற்கே கூட்டி வந்தார். அன்று மட்டம் .
இரண்டொரு மாசத்தில் அப்பர் இறந்து விட்டார் . இப்ப , முழு சுதந்திரப்பிறவி .அவன் வீட்டிலிருந்து ஓடவில்லை .பள்ளி முடிந்த பிறகு வீட்டிற்கு ஓடிவந்தான் . கடல்வெளி வீதியில் அப்படி ஓடி வருகிறது வெளியுலகை சிறிது பார்க்க வைத்தது . கால் போன போக்கிலே ஓடலாமா ? ...! .
அன்றைய பள்ளி விளையாட்டுப் போட்டியில் புத்துயிர்ப்புடன் மரதன் ஓடிய போது வழக்கமாக முதலாவதாக வருகிற அவனுடைய ரோல்மொடலுக்கு கால் தசைப் பிடிப்புக்குள்ளாகி இடையில் நின்று விட்டான் . கிராமத்திலும் படித்த , அதே வகுப்பிலும் படித்த கதிர் ( குறுந்தூர வெகுவிரைவு ஓட்டக்காரன்) இடையில் சக்க்கிளிலே ஏறி அவனை '' ஓடு , ஓடு '' என விரட்டி கலாயித்தான் . சிவம் '' எப்படியும் ஓடி முடிக்க வேண்டும் . அது முக்கியம் '' என்று கூறியதை மனதில் வைத்து 6..வதாக வந்தான் . பரீட்சையில் ஏற்பட்ட சறுக்கல் பற்றி எல்லாம் கவலைப்படவே இல்லை . அம்மாவும் பழைய ஓட்டைச் சைக்கிளை வாங்க காசு தந்தார் . சைக்கிள் ஓடும் தானே , அது போதும் . பள்ளியை விட வெளிவாரியாக சனசமூகங்கள் வைக்கிற மரதன்களில் எல்லாம் ஈழநாடு பேப்பரில் பார்த்து ,பார்த்து சுமார் 25 , 30 ... வரையிலான மரதன்களையே ஓடி முடித்திருக்கிறான் . ஒரு பெரிய திக்விஜயமே செய்திருக்கிறான் . பலவற்றில் ஐந்து வரையில் பரிசோ பத்திரமோ வழங்கிவார்கள் . அப்படி ' போன்விட்டா ரின் , டோர்ச் லைட் ..நிறைய பத்திரங்கள் ' என கிடைத்திருக்கின்றன . அதனாலே புன்னாலைக்கட்டுவன் , மானிப்பாய் , குருநகர் , பாசையூர் , அரியாலை , பருத்தித்துறை... என யாழ்ப்பாணத்தில் பல இடங்கள் தெரிய வந்தன . இல்லா விட்டால் வவுனியாவில் இருந்தும் வவுனியா அவ்வளவு தெரியாதது போல யாழ்ப்பாணமும் தெரியாமலே இருந்திருப்பான் . நகரப்பெடியள் பலருக்கு கிராமமே தெரியாது .
மரதன் , சைக்கிள் ஓட்டப்போட்டிகள் .நடத்துபவர்கள் ஊக்குவிக்கும் மனதினராக இருந்தனர் . ஓடி முடிக்கிற அனைவருக்குமே ஜூஸ்கள் வழங்கினார் . ஓடாத போதிலும் கூட இவன் தெரியாத இடங்களுக்கும் சைக்கிளை விட்டு தெரிந்து கொள்ளத் தொடங்கினான் . கீரிமலைக்கு கன தடவைகள் சென்றிருக்கிறான் . ஒருமுறை கிராமத்து நண்பன் அவனின் அப்பாவும் இறந்ததால் சேர்ந்து வந்து ,அவனையும் தர்ப்பை போட வைத்தான் . இன்னொரு நண்பன் நல்லூரில் நேர்த்தி வைத்து உள்வீதியில் பிரதிட்டை எடுக்கிற போது இவனையும் எடுக்க வைத்தான் . அவன் சோனகர் தெருப்பக்கமும் அடிக்கடி சைக்கிளை விட்டு திரிவான் . அங்கே தபால் கட்டட தூண் போல..இருந்த பழஞ்சின்னங்கள் அவனை இழுத்துக் கொண்டிருந்தன . ஆச்சரியப்படுத்தியிருக்கிறன . இப்படியும் சில அனுபவங்கள் .79 , 80 களில் ஆமிக்காம்கள் முளைக்கிற வரையில் மரதன் ஓட்டங்கள் எந்தவித தடையுமில்லாது நடந்தன . அரசபயங்கரவாதம் ( சட்டமும் அமுலாகி ) தலையெடுக்க ...எல்லாமே நின்று போயின . யாழ்ப்பாணமும் களையிழந்து போனது .
காலனிக்கு முதல் தமிழ் , சிங்கள அரசுகள் அடிபட்டுக் கொண்டிருந்தாலும் சுயத்தில் ( கல்வி , வாழ்வியலில்) மேம்பட்டவர்களாக இருந்தார்கள் . பிராமணர் போல புத்தபிக்குகள் ஆசிரியர்களாக விளங்கினர் . காலனின் போது அவையெல்லாமே குழம்பிப் போயின . நல்வாழ்வு அமைய படிப்பு அவசியமானது எனக் கூறினாலும் அது இலகுவானதாகவும் இருக்க வேண்டும் . ஒரு சீர் நகர்வு உடையதாக வேண்டும் . தற்போதைய இனவெறி பிடித்த அரசியல் ...படித்தவர்களையும் பையித்தியமாக்கி விட சிக்கலான சட்டங்களை ஏற்படுத்தி வைத்திருந்தன . காலனியரின் ஆட்சியை பிரதி எடுத்ததின் பலன் , படித்தவர்களின் நிலமை மிக மிக மோசம் . படித்துக் கொண்டேயிருப்பதும் வெறும் விரயக்காலமானது . நடிகர் ரஜனிகாந் கூறியபடி எட்டு , எட்டாக காலத்தை பிரிக்க முடியாது ஈழநிலமை குழம்புறது . இராமாயாணம் , மகாபாரத்திலும் கூட பதினாறு வருசங்கள் தண்டனையை அனுபவிக்கனும் என்று இந்த எட்டு ,எட்டு காலத்தையையே குழப்பி தள்ளியிருக்கிறார்கள் . அங்கே வயசு எல்லையைக் கூட்டி கதை சொல்லி முடிக்கப்படுகிறது . நிஜத்தில் கடந்து போனது போனவையே .திரும்பி வராது . அதற்காக வேணுமென்றே நாடுகளில் முதலில் பயங்கரவாதச் சட்டமே அமுலாக்கப்படுகிறது . இங்கேயிருந்தே வதைமுகாம் , கொலைகள் , பயமுறுத்தல்கள் என அச்சப் பிராந்தியை அருந்த வைத்து ...புதைகுழிகளை ஏற்படுத்தி இனவெறி ஆட்சி பட்டையைக் கிளப்புகிறது . பதிலடி கொடுக்க இவற்றின் அடிப்படைகளை தெரிந்து புரிந்து கைவைக்க வேண்டும் . வல்லரசு சக்திகளை பரந்த நோக்கிலே சென்று வேறு சேதப்படுத்த வேண்டும் . யானைக்கும் அடி சறுக்குவது போல , பாதிக்கப்பட்டவரிற்கு புல்லும் ஆயுதமாகவும் அமைந்தும் விடுகிறதை காலமும் சொல்லியே வருகிறது . அரசியலே வேணாம் என்றாலும் கூட இழுத்துக் கொண்டு போய் கொல்லும் நவீன ஆயுதங்களும் ஆட்சிகளும் முடிவுக்கு வர வேண்டும் . நாடுகளுக்கு காலனி ஆட்சியிலிருந்து கிடைத்த அரைகுறை சுதந்திரம் போதாது .முழுமையாக சுதந்திரம் பெற வேண்டும் . பாகிஸ்தானைப் போல ஈழத்தையும் ஐரோப்பியசக்திகள்கள் நலமடித்து தம் கட்டுக்குள்ளேயே வைத்திருக்கின்றது . அகதியாய் செல்லும் மக்கள் அந்நாடுகளில் கம்யூனிச அரசியல் கட்சியை ஏற்படுத்தி அங்குள்ள நல்லவர்களையும் சேர்த்துக் கொண்டியங்கினால் மட்டுமே மாற்றங்கள் ஏற்படலாம் போலத் தோன்றுகிறது .
ஈழத்தில் தான் , அரசியலில் எத்தனை அழுக்கென அழுக்கு ? . சிங்களப் புரட்சிவாதிகளை மன்னித்து விடுவார்கள் . தமிழ்ப் புரட்சிவாதிகளை மன்னிக்க மாட்டார்கள் . ஜனநாயகத்தை துப்பரவாக கழுவி விட்டார்கள் . தமிழ் இளைஞர்களுக்கு 'ஏதாவது ஒரு இயக்கத்தில் சேர்ந்தாலாவது உரிமைகளை வென்றெடுக்கலாம் ' என்ற மேலோட்ட எண்ணங்கள் அடிக்கடி வந்து மறையும் . விடுதலையில் ஒரு அட்சரமும் தெரியாத நிலைமை வேறு கால்களைக் கொளுவ வைக்கும் . வேல்முருகு , செவ்வேல் நிலமையும் அதே தான் .
. 76 இலிருந்து 79 வரையில் உயர்வகுப்பு . இவர்களுடைய காலத்தில் பயங்கரவாதச்சட்டம் அமுலாக்கப்பட்டு பெரும்பாலும் தமிழருக்கெதிராகவே கைவரிசையைக் காட்டிக் கொண்டிருக்கிறது . அந்நேரம் இதைப்பற்றி எந்த விபரமும் தெரியாது . பிறகு , இவர்களுக்கு 'எப்படியாவது ஒரு வேலையில் சேர்ந்து விட வேண்டும் ' என்பதே இலக்கு . கல்வியில் ஊழல் நிலவியதால் வடபகுதியில் டியூசன் வகுப்புகள் கொள்ளை கணக்கில் பெருகிக் கிடந்திருந்தன . பிரபல டியூசன் வாத்தியார் ' பிறகு அவர்கள் பெறுகிற பணத்திற்கும் வரி கட்ட வேண்டும் ' என்ற ஒருசட்டத்தை அரசு கொண்டு வந்திருந்தது ' என்கிறார் . பரீட்சைகள் மேல் ஒர் அலட்சியம் விழுந்தது . செவ்வேல் டியூசன் வகுப்பிற்கு போய் படிக்க விரும்பவில்லை . போகவும் இல்லை . பணம் கட்டக் கூடிய நிலையில் பலர் இருக்கவில்லை . அவன் நண்பர்களில் ஒருசிலர் சென்றிருந்தார்கள் . ஆனால் , தேர்ச்சி எய்யவில்லை . அட்டமத்தில் சனி இருந்து வேலை காட்டி விடுகிறது . வேலை தேடல் . அச்சமய நண்பன் குகா , அவனோட சேர்ந்து ஒரு வேலையிலாவது கொளுவி விடுவோமா? என தபால் ஓபிசில் கெசட்டைப் பார்ப்பதும் விண்ணப்பிப்பத்தலில் வாழ்க்கை வெறுத்துப் போனது . அலுவலகர் ''தம்பிகளா , தொழில் கல்லூரியில் எதையாவது படிக்கப்பாருங்கள் '' என்று ஆலோசனை கூறுவார் . திரும்பவும் படிப்பதென்பது எவருக்குமே வெறுக்க வைப்பது . படிக்கிற படிப்பில் தொடர்ச்சி வேறு கிடையவே கிடையாது . செவ்வேல் , விண்ணப்பித்து தொழிக்கல்லூரியிற்கு படிக்க சென்றான் . குகா , வேல்முருகு போன்றோர் செல்லவில்லை .'வேலைக்கு ஒரு தகுதிப்பத்திரம் வேண்டுமே . குறுக்கு மறுக்காவே சிந்தனை அவனை கவ்வும் . சக தோழர்கள் வெளிநாட்டுப் பரீட்சைகளை எடுக்க முயன்ற போது , இவன் ' டேய் பாருங்கடா , இங்கத்தைய படிப்பிலே வேலை எடுத்து நல்லாய் இருப்பேனடா 'என்ற ஒரு குரல் அவனிடம் இருந்தது . அறியாமை இருள் , மட்டுமல்ல நோய்ப்பிரச்சனைகளிலும் விலத்தி நிற்கும் வீருநிலை இருக்க வேண்டும் . சமூகம் ஆங்கிலகல்வியில் சலவைக்குள்ளாகி சுயத்தை , அதன் பெறுமதியை அறியாதிருந்தது . ஈழவரசின் முட்டாள் தனமாக இனப்போக்கும் அதற்கு நெய் வார்த்தது . காலனியாட்சியை அப்படியே பிரதி எடுத்து புதிய எஜமானராக வல்லபம் காட்டியது . அனைத்து அடக்குமுறைகளையும் காலனிப்பிரிவே பின்னின்று ...இனப்படுகொலை நிறைவேற்ற காய்களை நகர்த்தி வந்தது .வருகிறது . இவர்களிடமிருக்கிற விசக்கொடுக்குகளை பிடுங்கி எறியாதவரைக்கும் தமிழருக்கு விடிவில்லை . ஆனால் , இதையெல்லாம் தெரியாத அறியாமையில் ஈழச்சமூகம் கிடக்கிறது .
'சென்று , தொழில்கல்லூரியில் படிப்பில் தேர்ச்சி பெற்றும் , தொழில்ப்பத்திரம் கிடைத்தும் வேலை கிடைக்கவில்லை . அது அவனை வருத்தியது . பொலிஸார் , பயங்கரவாதச்சட்டத்தைப் பயன்படுத்தி , சந்தேகத்தின் பேரில் ...என பலரைப் பிடித்து வதைப்படுத்தி குற்றப்பத்திரிகைகளை பொய்யாகத் தயாரித்து குற்றமாக ஒப்பேற்றி வைத்திருக்கிறார்கள் . வரும் ஆட்சியாளர்கள் 'நீதிமன்றத்தின் மூலம் குற்றம் நிரூப்பிக்கப்பட்டிருப்பதால் மன்னிபளித்து விடுதலை செய்ய முடியாது ' என கையை விரித்துக் கொண்டே இருக்கிறார்கள் . அவர்கள் , தமிழர் இனமாக இருந்திருந்தால் இந்நேரம் விடுதலை செய்திருப்பார்கள் . காலத்திற்கு காலம் இனவாதமே மேலோங்கியபடி வருக்கிறது . இதற்கிடையில் 'வசந்தம் , ஊழலற்ற ஆட்சி ' என்ற வெளிச்சங்கள் . சிஸ்டம் படு பிழை . எண்ணெய் போடுங்களப்பா .
அரசியல் வெகு அலட்சியமாகவே நிலவி வருகிறது . எல்லாத்திற்குமே (வேலைகளுக்கும் )கொழும்பையே கையேந்தி எதிர்பார்க்க வேண்டியிருந்தது .அதைப்பயன் படுத்தி சிங்கள அலுவலளர்கள் ஊழல் மூலமாக கணிசமாக உழைத்துக் கொண்டிருந்தார்கள் . அரசே திட்டமிட்டு ஊழலை நிலவ வைத்துக் கொண்டிருக்கிறது . ஜனநாயகம் நிலவவில்லை என்றால் , மாகாணவரசு தேர்த்தலை நடத்தாதிருந்தால்...இந்நிலமை தொடர்ந்து கொண்டேயிருக்கப் போகிறது . நிலத்தில் மட்டுமில்லை , எல்லாக்கோதாரிகளையும் தம்மவர்க்கே என தமிழரிடமிருந்து பறித்து கொடுக்கவே ...கங்கணம் கட்டி நிற்கிற ஓர் இனவாத செவிட்டு அரசிடம் என்னத்தை கேட்பதாம் ? . ''தனிநாடு கேட்பவர்களை எல்லாம் பயங்கரவாதிகள் அவர்களுக்கு விடுதலை கிடையாது '' என்று சிறையில் அடைத்துக் கொண்டிருக்கிற தொடர் ஆட்சியாளர்கள் . அடியைப் போல ...ஒன்றுமே உதவாது . ' ஒரு பலமான அடி ' வலிக்கிற போது மாற்றங்கள் ஏற்படும் 'என சில இளைஞர்கள் குமுறிக் கொண்டேயிருக்கிறார்கள் . அதனால் ஒரு செயற்கையான எரிமலைத்தேசமாக ஈழம் கிடக்கிறது . இயற்கையையே ஆராதிக்க தெரியா ஜென்மங்களிடம் அறத்தை எதிர்பார்க்க முடியாது . இதெல்லாம் அன்று அவனுக்கு மங்கலாகவே புலப்பட்டுக் கொண்டிருந்தது .
வேலை எடுக்க அலைந்தது வீண் விரயம் . குகா , செவ்வேல் , முருகு வேலைவங்கியில் பதிந்தாலும் ஆசிரிய குடும்பத்தாருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை . குகாவும் , முருகுவும் மேற்க்கொண்டு படிக்க முயலவில்லை . கடைசியில் , குகாவை , அவன் அக்கா ' வெளிநாட்டுக்கு அனுப்பினார் . வேல்முருகு அப்பரின் ஏச்சுக்கணைகளால் வெகுவாக துவண்டு போய் இருந்தான் . முருகுவும் அவனும் வெளியில் போன குகா- அக்காவின் கல்யாண வீட்டில் சந்தித்தார்கள் . முடிந்த பிறகு , இருவரும் வீட்ட போக மனமில்லாது நீண்ட நேரம் பலதையும் பேசிக் கொண்டிருந்தார்கள் . அலட்டிக் கொண்டேயிருந்தார்கள் . அடுத்த கிழமை போல ...முருகு வள்ளத்தில் மிதக்கிறான் .
எப்படி பார்த்தாலும் , 'பயங்கரவாதச்சட்டம்' இனப்பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்டே எழுகிறது . அதை அகற்றாது தொடர்ந்து கொண்டு ஊழலற்ற ஆட்சி என்கிற எந்த ஆட்சியும் கறை படிந்ததாகவே இருக்கும் .
பொதுவாகவே , ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கும் போராட்டதிற்கும் வெகு தூரம் . தவிர வீட்டிலே பலசகோதரங்கள் இருப்பர் . மேலே , கீழே இருப்பவர் மாறி தேர்ச்சி பெறுகிற போது . பெற்றோரின் திட்டல்களும் அதிகரித்து விடும் . அதனால் , வீட்டை விட்டு பிள்ளைகள் ஓடுறதும் நடை பெறுகின்றன . அச்சமயம் புதிய சந்தை கட்டடத்தில் பகல் முழுதையும் திரிந்தே கழிக்க வந்திருக்கிற கணிசமான பெடியள் செட் அவ்வாறு வீட்டில் இருக்க முடியாது ...வந்திருந்தவர்களே . அப்படி இருந்த சிலர் '' நீயும் கடைசியில் வந்து விட்டாயா? '' என்று இயக்கத்தில் சிரித்துக் கொண்டு முதலில் வரவேற்றார்கள் . அவனுக்கு தெரிந்த பல முகங்கள் . இயக்கங்கள் பிரபலமாகிக் கொண்டிருந்தன . வேலை இல்லை .
வேல்முருகு சென்றது செவ்வேலை வெகுவாக குழப்பி விட்டது . அவனையும் வீட்டை விட்டு துரத்தியது எனலாம் . அதே இயக்கத்தில் வள்ளம் ஏறும் எண்ணத்தில் சுழிபுரம் சென்றான் . இவர்களுக்கு கல்வியில் நிலவும் ஊழல் ,வேலை வாய்ப்பில் நிலவும் ஊழல் பற்றியும் விபரமாகத் தெரியாது . சில்லு சிக்கலில்லாமல் அமைய வேண்டிய வாழ்வு இன அரக்கனால் கழுத்தை நெரிக்கும் நிலமை , அது இயல்பான வாழ்வோட்டத்தில் பாதிக்கும் பிரச்சனைகளில் கணிசமானவற்றை சமூகத்தாலும் ஓரளவு சமாளிக்க முடியும் தான் , ஆனால் , காலனியாட்சியிலாலும் சலவை செய்யப்பட்ட சிந்தனைகளும் அதை ஒட்டிய எதிர்பார்ப்புகளும் தடம் புறழ வைக்கிற போது விதியும் , தன் வழியிலும் இழுத்துச் செல்கிறது . ஆமாம் காலனிகாலத்திலேயே..., அவன் அம்மா பிறந்தது ....ஈழம் விடுதலை பெற்றது அவர்கள் அந்த கோதாரி பிடித்தவர்களின் ஆட்சியையும் நேரில் கண்டவர்கள் , கிராமங்களில் இருக்கிற இவர்கள்காலத்தில் வெள்ளையர்களை கண்டிருக்கவில்லை என்றே கூறலாம் .இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் 'கலவரம் , கலவரம் 'என இனவெறி பிடித்த அரசின் முகங்கள் தான் . ஆனால் . படிப்பு , வேலை ..என கிடந்தவர்க்கு அரசியலும் தெரியாது . தமிழ் அரசியல் கட்சிகள் நடத்துற ஆர்ப்பார்ட்டங்களில் பங்கு பெற வேண்டுமா ? என்று கூடத் தெரியாது . உயர்வகுப்பில் கால் வைத்தவர்களுக்கு கல்வி சறுக்கவே வேலை ஏதாவது எடுக்கிறதிலே கவனம் குவிந்திருந்தது . கடன் கொப்பியில் ஓடும் ஆசிரியச் ஜீவியம் அம்மாவிற்கு . முருகுவிற்கு ஆசிரியராக அப்பர் இருந்தாலும் நிலம் சிறிதளவு இருந்தது . இவர்களுக்கு துடுப்பில்லா வள்ளம் . அவர்களுக்கு துடுப்பிருந்தது .ஆனால் ,நிலமிருந்தால் என்ன? , வேலையில் இல்லை என்றால் ...பிள்ளைகளிற்கு வாழ்வே மாயப் பிரச்சனை தான் . அதிருஷ்டம் சிலர்க்கு வேலை செய்ய தப்பி விடுகிறார்கள் . முருகு , செவ்வேலுக்கு அப்படி ஒன்று மருந்துக்கும் இல்லை .
எனவே தான் ராஜூ ''நீயும் வருகிறாயா ?'' எனக்கேட்ட போது முறுகாமல் சம்மதித்திருக்கிறான் , அவனோட நின்ற வவுனியாப்பக்கமிருந்து வந்திருந்த செல்வன்(தம்பி முறை) கலவர அதிர்வுகளை சமீபத்தில் கண்டிருந்தவன் ''அண்ணே நானும் வரவா''என்று கேட்க இருவருக்குமே அதிர்ச்சி . ''டேய் , மாமிட முகத்திலே உயிருள்ள வரையில் முளிக்க முடியாதடா. உனக்கு வயசும் கூட போதாதே''என எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள் . கடைசியில் அவனும் சேர சென்றது கிராமத்திற்கு முதல் அதிர்ச்சி . அக்குடும்பங்களிற்கு பேரதிர்ச்சி . நட்பு காரணமாக இவனிலும் அதிர்வுகள் . இது நடந்தது தொடக்க வள்ள ஏற்றத்தின் போதல்ல . கடைசிக்கட்ட காலத்தில் . செவேலும் , அதே கிழமை ,அதே இயக்கத்திற்கு .... வீட்டை விட்டு வெளியேறி விட்டான் . ''இனிமேல் வீட்ட போக விரும்பேலே தோழரே '' என்று கூறிய போது அவர்களும் வள்ளத்தில் ஏற்ற ஏழுமான முறையில் முயன்றும் , அதிருஷ்டமும் இல்லையோ....தடைபட்டு , தடைப்பட்டே வந்தது . கனேடிய பழங்குடிகள் '' இந்த பிரபஞ்சம் கனவுகளால் நிறைந்திருக்கிறது . மனிதர்கள் தெரிவதில்லை அவை தாம் தாம் பற்றிக் கொள்கிறது '' என்கிறார்கள் . அதுவும் ஒரு விதத்தில் அதிருஷ்டம் என்பது தெரியாது . அப்படி ஒரு மாசம் வரையில் சுழிபுரத்தில் வாழ்ந்தான் . சுழிபுரத்தை இரவிலும் , பகலிலும் பார்த்தான் , அறிந்தான். இளவாளையும் அப்படிப் பார்த்தான் . ஒரு காலத்தில் அங்கேயுள்ள கொன்வெண்டில் அவனுடைய பாட்டி படித்தவராம் . முன்னோர் கால் பட்ட இடத்தையும் பார்த்து விட்டான் . அவனுக்கு வள்ளம் தலை சாய்க்கவில்லை . ...கடைசியில் வள்ள ஏற்றமும் நிறுத்தப்பட்டு விட்டது . தமிழ்நாட்டில் , கால் வைக்கணும் என்று ' உள்ளே அடித்துக் கொண்டு கிடந்த ஆசை ' நிறைவேறவில்லை . இப்படி போகா விட்டால் , தமிழ் நாட்டிற்கு போகும் விதி , வாய்ப்பு வரப் போவதே இல்லை . ''கடைசி வரையிற்கும் , உனக்கு விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை துளி கூட இருக்க மாட்டாது '' என்று நெல்சன் மண்டேலா கூறுகிறார் . இதை நினைத்து அழுவதா ? . அந்நாளில் 'அவனுக்கு எல்லாமே மறுக்கப்பட்டு வருகிறது ' என்ற உணர்வே மேலோங்கி இருந்தது . ஏதாவது நிறைவேறி இருந்தால் இவ்விரு கிராமங்களை... அறிந்திருக்கவே மாட்டான் . இதே போல ஒரு நாள் விடுதலை அவர்களுக்கும் கிடைக்க இருக்கிறது . அன்று கெட்டு , அழுகிப்போன சக்திகள் எல்லாம் அவமானத்துடன் தலை கவிழ்த்து நிற்கவே போகிறது . உண்மை , சத்தியம் , தர்மங்களை அடக்கி வைக்கவே முடியாது .
பின்னாட்களில் , தொல்புர கோவிலில் பழைய சரித்திரக்கால மிச்சங்களை (எச்சங்களை) கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறான் . திருவடி நிலை , பெரியபுலம்...எல்லாம் சைக்கிள் ஓடித் திரிந்திருக்கிறது . பிறகு தீவுப்பகுதியைப் பார்க்கவும் வாய்ப்பு கிடைத்தது எல்லாமே...வள்ளம் ஏறாததாலே கிடைத்த அனுபவங்கள் . மரதனும் , இயக்கமும் அவனை யாழ்ப்பாணம் முழுதையும் ...குச்சுக்களையும் , பட்டி , தொட்டிகளையும் பார்க்க வைத்திருக்கிறது . இவையெல்லாம் பெரியகொடுப்பனை இல்லையா ! . '' நீ ...இங்கே இருப்பது தான் பெறுமதியானது என்பதை ...புரிந்து கொள்வாய் '' என்று அன்று தோழர் பொன்னம்பி கூறியது தான் எவ்வளவு உண்மை .
ரஸ்ய நாவல்களை வாசித்ததில் விடுதலைப் போராளிகளை நேரிலே சந்திக்க இயக்கத்தில் சேர்வது அவசியம் என்பதை மேலோட்டமாக அறிந்து வைத்திருந்தான் . ... இழுபட்டுக் கொண்டேயிருந்த 'சேரல் ' வேல்முருகால்' சாத்தியமாகியது . கிராமத்திலிருந்து இயக்கத்திற்குச் சென்றவர் என்றால் உயர்வகுப்பில் கால் வைத்த மூவர் வேல்முருகு , மற்றொருவர் , அவன் ...மட்டுமே தான் . மற்றவர் எல்லாமே ...கீழே இருந்தவர்களே . கிராமப்பொறுப்பாளராக சின்னண்ணை அவனை பிரேரிக்க பொறுப்பாளராகி விட்டருக்கிறான் . அவன் கிராமப்பொறுப்பாளரான போது முதலில் உணர்ந்தது தலைமைக்கும் கிராமத்திற்குமிடையில் ஒரு தபால்காரனாக இருக்கிறதே அவனுடைய முதல்வேலை என்பதை .
தமிழ்நாட்டு உறவு தொப்புள் கொடி உறவு . ஈழவரசின் உறவு திரைந்து போன உறவு . எனவே தான் பிறகு நிகழ்ந்தேறிய காலக்கட்டதில் , ஈழவரசு நிகழ்த்திய பலியெடுப்புகளுடன் ஒப்பிடுகையில் இந்தியனாமியால் விளைந்த நாசம் ..தசம ஸ்தானத்து ....பலியெடுப்பாக இருந்த போதிலும் , அவை ஏற்படுத்தி விட்ட அதிர்வலையிலிருந்து விடுபட முடியாதவர்களாக இருக்கிறார்கள் .' இனத்துவேஷம்' அதிக திரையல் . பாதிப்பு கூடியது . இந்தியனாமியுடையது பிழைகள் , திரையாதது ! குறைந்த பாதிப்பு . குறைந்ததை செப்பனிட்டுக் கொள்ள முடியும் . குறையாததை ...?? தொடர விடக்கூடாது . இந்தியா வளர்ந்து வரும் ஒரு வல்லரசாக இருக்கிற போது , தமிழ்நாட்டின் உணர்வுகளை கட்டாயம்...கவனத்தில் எடுத்திருக்கவே வேண்டும் . ஐரோப்பிய நாடுகள் இன்னமும் கூட காலனிப்போக்கிலிருந்து விடுபடாத அரைக்காலனி நாடுகள் . ஆயுதங்களைக் கொடுத்து , அவற்றைக் கொட்டி எந்த மக்கள் அழிவதைப்பற்றியும் கவலைப் படாதவை . சிவப்பு ஓநாய்கள் ...இவை தாம் பெரும் பிரச்சனை . நாடுகள் , நகரங்களை முட்டாள்தனமாக அழிபட விடவேக் கூடாது . . குறிப்பாக அரசியல் நலன்கள் உறவுகளை சொந்த மக்களை காயப்படுத்துறதாக இருக்கக் கூடாது . தேர்த்தல்களில் தோற்கிற அரசியல் கட்சிகள் சக்திகள் தாம் . அவற்றின் பலவீனங்களை எந்த புத்தர் வந்து திருத்தப் போறோரோ? .
இயக்கத்திற்கு இன்னொரு பெயரும் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் .வேல்முருகு , புனைபெயராக செவ்வேலின் பெயரை சுருக்கி 'சேவல் ' என வைத்துக் கொள்கிறான் . கிராமத்து தோழன் ' சலீம் ' என பெயர் வைத்திருக்கிறான் . எனவே இவன் ' யேக்கப் ' என வைத்துக் கொள்கிறான் . சைவப்பெயர் அயலவருக்கு எளிதாக ஞாபகத்தில் இருக்கும் . ஆனால் சேவேலுக்கு தான் அரசியல் பற்றி சுத்தமாகத் தெரியாததே. விடுதலைப்போராட்டம் புத்தம் புதிசு . ரஸ்ய நாவல்கள் மூலமாக அறிந்ததோ எப்பன்... கீரைக் கணக்கு அறிவு . அவை ரஸ்ய நாட்டின் வரலாற்றையே கூறுகிறது . இங்கத்தைய... கிடையாது . ஈழ அரசு எல்லாத்துறைகளிலும் கை வைப்பதும் திணிப்புகள் செய்வதுமாக இருந்து வருகிறது . எது நிஜம் எதுபொய் எனத் தெரியாது மூழ்கி போய்க் கொண்டிருக்கிறோம் . தமிழர் உரிமையெல்லாமே அவர்களுக்கு பயங்கரவாதமாகத் தெரிகிறது . மறுதலையாக இவர்களுக்கு முழு ஆட்சியுமே பயங்கரவாதமாக பிடறியில் அறைகிறது . அவர்களிடம் ''பண்ணிப்பாருங்கள் பன்றிப்பயல்களே ! '' என்ற மாதிரியான தில்லான பேச்சுகள் . அதிகாரம் சண்டித்தனம் புரிகிறது . ஒன்றைப் பார்த்தீர்கள சாதி உட்பட எல்லாமே எழுதப்பட்ட , எழுதப்படாத சட்ட விதிகளையே கொண்டிருக்கின்றன . 'பேசுற போது '' நான் திறம் நீ பிழை '' என்ற மாதிரியே பினாத்துகிறது. வெளிப்பார்வையில் அதிகாரத்தில் இருப்பவரே உத்தமராகத் தெரிகிறார் .
மொழி மண்ணாங்கட்டி . அது இந்தியைப் போல ஆங்கிலத்தை போல திணிக்க வாய்ப்பு பார்த்துக் கொண்டிருக்கிறது . அம்மொழியில் பேசாமல் இந்த ஜென்மங்களால் தொடர்பு கொள்ளவே முடியாதா ? .
எங்கே எத்தனை மொழி இருக்கின்றது என்பது முக்கியமில்லை . வரலாறை எங்கே இருந்து தொடங்குவது ? பேச்சு , எழுத்துச்சுதந்திரம் இரண்டையும் பயங்கரவாதமாக தடை செய்தே இவை அரங்கேறுகின்றன . அதிகமான பத்திரிக்கையாளர்களை கொல்கிற நாடு இது . ஒளியில்லாது இருட்டுக்கடலில் கிளித்தட்டு கணக்கில் ஓடி தப்பி வருகிற தோணிகளிலே கடிதங்கள் வருகின்றன . பிரச்சனைகளில் சிக்குறவற்றில் ...கடிதம் கடலில் எறியப்பட்டு விடுகிறது . செந்தாமரைக்கு வருபவை இவனிடமே வந்து சேரும் . எந்த நேரத்தில் என்றாலும் உடனேயே கொண்டு சென்று சேர்த்து விடுவான் . தடை எங்கே ஒளிந்திருக்கிறது என்று எவருக்குமே தெரியாது . கடிதமே தோழர் உயிருடன் இருப்பதை நிறுபிக்கும் .பலவித குழப்ப நிலமைகள் கடந்து போயின . அச்சமயம் தான் பூஸாவுக்கு கொண்டு செல்லப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டார்கள் . அமைதி ஒப்பந்தம் எழுதப்படா விட்டால் இவர்களும் சாவைத் தழுவி இருப்பார்கள் . விடுவிக்கப்பட்ட குட்டியன் இவன் தங்கி இருந்த லொட்ஜூக்கு தோழர்களைச் சந்திக்க வந்திருந்தான் . அவர் முன்னாள் சங்கானைத் தலைவர் . சுழிபுர சுற்றிவளைப்பில் ....சென்றவர் .'' எனக்கும் குட்டிமணி போல அவலச்சாவே , என நினைத்திருந்தேன் ' என்றார் . இதுவெல்லாம் வெளியாருக்கு சொன்னாலும் புரியாது .
இந்தியனாமி இருந்த போதிலும் சகோதரக் கொலைகள் நடந்து கொண்டேயிருந்தன . பெரும்பாலும் கொழும்பில் , யாழுக்கு வெளிப்பகுதியிலே தேவையில்லாச் சாவுகள் . யார் கேட்பது ? . பலி தீர்க்கும் முகமாய் இந்தியன் ஆமி நடத்தியவை ஒருபுறம், எந்த படையுமே தியாக சேவைப்புரிவதில்லை என்பதை தெரிய வைத்தது . அந்நேரத்திலே , கதிரேசுப்பிள்ளையின் உடல்நிலை மோசமான போது வேல்முருகு கிராமத்திற்கு வந்திருக்கிறான். கொள்ளி வைத்த கையோடு திரும்பி விட்டான் . தங்கச்சியும் அம்மாவும் கிராமத்தை விட்டு விலகி யாழில் ...இருந்தார்கள் . செவ்வேல் கொழும்பில் இருந்தான் , செவ்வேல் ,சுமார் ... இரண்டு வருடம் இருந்திருக்கிறான் . கொழும்பே தெரியாதவன் ...அவ்விடத்தையும் பார்த்து விட்டான் . யாழில் கழுகின் அட்டகாசம் . இங்கே சிங்களக் கிளர்ச்சி அமைப்பின் அட்டகாசம் நிலவின . பட்லந்த முகாம் கொடுமைகள் எல்லாம் நிறைவேறிய காலம் . யாழ் அவலங்களுக்கு ஒருவர் இருந்தது போல இதற்கும் ஒருவர் இருந்தார் . இவ்விரு அமைப்புகளுக்கும் தொடர்பு ஏற்பட்டு கழுகு இந்த ஒருவரை கொன்றிருக்கலாம் என அவனுக்கு தோன்றுகிறது . மாறுபட்ட கொள்கைகளைக் கொண்டிருந்த போதிலும் சிங்கள கிளர்ச்சி அமைப்பு தான் நம்மவர்களுக்கு துரோரணராக இருந்தது . இவ்விரு அமைப்புகளிற்கிடையிலும் அநுதாப அலைகளும் இருந்தன . ' கலவரங்களில் பங்கு பற்றாத சிங்கள இளைஞர்கள் இவ்வணியினர் ' என இவர்களை தமிழ்த்தரப்பு நம்புகிறது . ஒரு அரசாங்கம் தன் இரு பிள்ளைகளையும் கொடூரமாக கொல்கிறது . பிள்ளைகளுக்கிடையில் நேசம் எழுவது இயல்பு தானே !
பிறகு , புலப்பெயர்வு . ' வேல்முருகை சந்திப்பான் என்று நம்பவில்லை . அவனுக்கும் அயல் நாடு ஒன்றில் அகதியாக தங்க லொத்தரில் அனுமதி கிடைத்திருந்தது . இந்த நாட்டுக்கு அயல் நாடு தான் . தொடக்கத்தில் , ஒருமுறை வேல்முருகு இந்த புல நாட்டிற்கு , சமறியில் இருந்த சயந்தனிடம் வந்த போது ... ...நீண்ட , நீண்ட வருசத்திற்குப் பிறகு சந்தித்தான் . துண்டுபட்ட நட்பு பெரிதாக ஒட்டவில்லை . இருந்தால் என்ன, ' நட்பை விட பெரியது தோழன் ' என்ற புதிய பந்தம் , நினைப்பு இருவர் மனதிலும் கிடக்கிறதே . ' அகதி' என்ற நிலை பலவித பாதிப்புக்களைக் கொண்டது . எதுவுமே நம்நாட்டை , கிராமத்தைப் போல வராது . இரண்டு நாடாக பிரியா விட்டாலும் , குறிந்தபட்சம் சுயாட்சி மிக்க மாகாணங்களாகவாவது பிரிந்து நம் கால்களில் தங்கி நிற்கும் சக்தி மிக்கநிலை பிறக்காதா ? . ஜனநாயகம் தான் சுதந்திர தாகம் . இங்கே , ' ஜனநாயகம் கிடைக்க மாட்டாது என்பது தான் நிதர்சனம் . ' மதம் ' பிடித்த இனப்பிரிவுவாதம் ஒழியப் போவது என்று ? .
தென்னாபிரிக்காவை விடுவித்த நெல்சன் மண்டேலாவின் பாதை தான் நமக்கு முன்னால் விரிந்து கிடக்கிறது . அவர் ஆங்கிலக்கல்விக்( பிரீட்டீஸ்) கொள்கையையும் எதிர்த்தார் . இலங்கையிலும் தமிழ்க்கல்வி தமிழரிடமே கொடுக்கப்படவில்லை . ''இனவாதத்தை வெறுக்கிறேன் . எங்கே இருந்து தோன்றினாலும் இனவாதம் காட்டுமிராண்டித்தனமானது '' என்று முழங்கினார் . அடக்குமுறையாளருக்கும் , அடக்கப்படுறவர்களுக்குமிடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்த உண்மையும் , நல்லிணக்கப்பாடான ஆணைக்குழு ( Truth and Reconciliation commission) )அமைத்து பழிவாங்கலை தவிர்த்து அறிந்து மன்னித்து வாழ்வதே சிறந்த முறை '' என வழியையும் கூறியிருக்கிறார் .
தற்போது அவனின் சா செய்தி வர , தமிழ்வின் தளத்தில் ...அவனுடைய அறிவித்தலைப் பார்த்தான் . அவனின் சிரிப்பு மாறவில்லை , அப்படியே இருக்கிறான் . கடந்தவையை அப்படியே அவன் மீது வாரி இறைத்து விட்டிருக்கிறது . அவன் மீளவும் கனவுகளில் வாழ்ந்து விட்டு வந்திருக்கிறான் .
அகதியாய் உதிர்ந்து கொண்டிருப்பவர்களின் வேதனைகளை யார் தான் அறிவாரோ ? தர்மம் மறுபடியும் வெல்லும் . .
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.