ஈழத்திலும் எம்மவர் புலம்பெயர்ந்த நாடுகளிலும் நன்கு அறியப்பட்ட கவிஞர் புதுவை இரத்தினதுரை. இவர் எழுதிய எழுச்சிப் பாடல்கள் உலகெங்கும் எம்மவர் பலரது வீடுகளிலும் விரும்பிக் கேட்கப்பட்டன. அன்று எழுபதுகளில் இவர் எழுதிய புரட்சிகரக் கவிதைகள் பேராசிரியர் கைலாசபதி முதல் மூத்த எழுத்தாளர்கள் செ. கணேசலிங்கன், கே. டானியல்இ சில்லையூர் செல்வராசன், டொமினிக் ஜீவா உட்படப் பலரையும் கவர்ந்தது.
அவரது சிறிய தந்தையார் கந்தசாமி இலங்கையில் சிறந்த சிற்பாசாரியார். அவரது வீடும் சிற்பாலயமும் திருநெல்வேலி காளி கோவில் முன்பாக இருந்தது. சிற்பாசாரியார் கந்தசாமி அன்று மொஸ்கோ சார்புக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர். சிறிய தந்தையாரின் சிற்பாலயத்தில் இரத்தினதுரையும் சேர்ந்து பணியாற்றி வந்தார். நாட்டில் பல கோவில்களுக்கான சித்திரத் தேர்களைச் செய்யும் வேலைகளை அவர்கள் மேற்கொண்டார்கள்.
இரத்தினதுரை புத்தூர் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். வரதலிங்கம் - பாக்கியம் தம்பதிகளின் மகனாக 1948 -ம் ஆண்டு மார்கழி மாதம் 3ஆம் திகதி பிறந்தவர். 1972 -ம் ஆண்டு முதல் சில வருடங்கள் யான் அவருடன் நெருங்கிப் பழகியுள்ளேன். கே. டானியலின் தொழிலகத்தில்தான் முதன்முதலில் சந்தித்துக்கொண்டோம். அன்றுதொட்டு நெருங்கிய தோழர்களானோம். 1973 - 1974 காலப்பகுதியில் சில மாதங்கள் இரத்தினதுரை எனது ஊரான புங்குடுதீவில் தங்கியிருந்தார். புங்குடுதீவு கிழக்குக் கலட்டிப் பிள்ளையார் கோவில் தேர் வேலையில் அவர் ஈடுபட்டிருந்தார்.
அந்த நாட்களில் பத்திரிகை - வானொலிச் செய்தியாளரான யான்இ கொழும்புப் பத்திரிகைகளுக்கான செய்திகளை அனுப்பப் புங்குடுதீவுத் தபால் நிலையத்தில் காத்திருந்துஇ பிற்பகல் 4.00 மணிக்குப் புங்குடுதீவு இறுப்பிட்டித் துறைமுகத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிவரும் 'மெயில் பஸ்”ஸில் உள்ள தபால் பெட்டியில் செய்தித் தபால்களைச் சேர்த்துவிட்டுஇ இரத்தினதுரை வேலைசெய்யும் கோவிலடிக்குச் சைக்கிளில் செல்வதுண்டு;.
மாலை 5 மணிக்குப்பின் அவர் வேலை முடித்துக் குளித்துவி;ட்டு வந்தவுடன் என்னுடன் அழைத்துச்செல்வேன். எனது அக்கா வீடு எனது பொறுப்பில் இருந்தது. (அக்கா அவ்வேளை மட்டக்களப்பில் கமத்தொழில் திணைக்களப் பெரும்பாக உத்தியோகத்தராகப் பணிபுரிந்தார்.) அந்த வீட்டில் இரத்தினதுரை மற்றும் எனது ஓரிரு நண்பர்களுடனும் தங்கியிருந்து உல்லாசமாக இலக்கிய விடயங்களைப் பேசுவோம். கவிதை பாடுவோம்.. மகிழ்ச்சியாகப் பொழுது கழியும். அந்த நாட்கள் மிக இனிமையானவை..!
1974 -ம் ஆண்டு காலப்பகுதியில் பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளில் நாம் கலந்துகொண்டோம். நெல்லியடியில் 'அம்பலத்தாடிகள்" நடாத்திய சித்திரை விழாவில் சில்லையூர் செல்வராசன் தலைமையில் கவியரங்கில் பங்குபற்றினோம். இவ்விழாவில் பேராசிரியர் க. கைலாசபதிஇ பேராசிரியர் அ. சண்முகதாஸ் ஆகியோரின் சிறப்புரைகளுடன் 'கந்தன் கருணை" நாடகமும் அரங்கேறியமை குறிப்பிடத்தக்கது.
ஈழத்திலுள்ள ஜந்து இலக்கிய அமைப்புகள் ஒன்றிணைந்து திருமலையில் 1974 -ல் நடாத்திய 'புரட்சிகரக் கலைஞர் எழுத்தாளர் மாநாட்டின்" அமைப்பாளர்களில் ஒருவராக இரத்தினதுரைஇ தோழர் நல்லை அமிழ்தனுடன் சேர்ந்து பணியாற்றினார். இம்மாநாட்டில் கே. டானியல்இ சில்லையூர் செல்வராசன், செ. கணேசலிங்கன், என். கே. ரகுநாதன் ஆகியோருட்படப் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நானும் கலந்துகொண்டேன்.
புங்குடுதீவில் யான் நடாத்திய இலக்கிய நிகழ்வுகளிலும் அவர் எம்முடன் கவியரங்குகளில் கலந்துகொண்டார். இந்நிகழ்வுகளில் கே. டானியல், நாவேந்தன், புலவர் ஈழத்துச் சிவானந்தன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியுள்ளனர். இருபாலையில் நடைபெற்ற பாரதி விழாவில் கவிஞர் முருகையன் தலைமையில் இடம்பெற்ற கவியரங்கிலும்; நாம் கலந்துகொண்டோம். அரியாலையில் நடைபெற்ற ஓர் விழாவிலும் நாம் கலந்து கொண்டது ஞாபகம்.
ஏழாலையில், மூத்த சகோதரர் நாவேந்தன் இலக்கியப் பணியின் வெள்ளி விழா வட மாநிலக் கல்வி அதிபதி தி. மாணிக்கவாசகர் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் கே. டானியலுடன் இரத்தினதுரையும் பங்குபற்றிச் சிறப்பித்தார்.
யாழ் பல்தொழில் நுட்ப நிறுவனத்தில் (தொழில் நுட்பக் கல்லூரி) நடைபெற்ற லோகேந்திரலிங்கத்தின் (கனடா உதயன் பத்திரிகை ஆசிரியர்) 'போலிகள்" புதுக்கவிதை நூல் வெளியீட்டு விழாக் கவியரங்கிலும் நாம் கலந்துகொண்டோம். இந்நிகழ்வில் சிறு சலசலப்பு ஏற்பட்டபோது இரத்தினதுரை உணர்ச்சி வசப்பட்டு எழுந்து சொன்ன வரிகள்... ..
'சந்தியில் இறங்கிவிட்டால்
சாரத்தை இழுத்துக் கட்டிவிட்டால்
நாங்களும் சண்டியர் தாம்
தம்பிகள் இருங்;கடா... "
- என்று சில வரிகள் சொன்னது ஞாபகம்..!
திருமலையில் இடம்பெற்ற பாரதி விழாவிலும் நாம் சில்லையூர் தலைமையில் கவியரங்கில் பங்குபற்றியமை ஞாபகம். அன்று சமூக விழிப்புணர்வும், எழுச்சியும் கொண்ட கவிதைகளை அவர் எழுதினார். கவிதைக்குரிய ஓசை நயத்தையும் அவர் கவனத்திலெடுத்துள்ளார்.
அவரது முதல் கவிதைத் தொகுப்பு 'வானம் சிவக்கிறது" 1970 -ம் ஆண்டு 'கம்யூனிஸ்ட்" கார்த்திகேசன் மதிப்புரையுடனும் கவிஞர் முருகையனின் முன்னுரையுடனும் வெளியானது. அன்று தோழர் நா. சண்முகதாசன் தலைமையிலான சீனச்சார்புக் கட்சியென அழைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளராக அவர் செயற்பட்டார்.
'அ தொடங்கியுள்ள அரிவரிகள் சிற்சிலரால்
சீனாவின் தாசனெனச் சீல் குத்தப்பட்டவன் நான்.."
- என அவர் எழுதியதுண்டு;.
சீனப் பெருந்தலைவர் மாஓவின் வழி நிற்பவன் என அவர் கவிதைகளில் குறிப்பிட்டுள்ளார்.
'சீனாவைப் பாடுவதால்..
சீனாவைப் பாடுவதால்
செங்கொடியைப் பாடுவதால்
ஏனோ சில 'கவிஞர்"
எம்மீது துள்ளுகிறார்
எங்கள் கவிதைகட்கு
இருக்கின்ற 'மவுசு" சில
வெம்பற் கவிஞருக்கு
வேதனையைக் கொடுக்கிறதாம்... .."
- எனவும் எழுதியுள்ளார்.
எழுபதுகளில் 'குமரன்" சஞ்சிகையில் வரதபாக்கியான் என்ற புனைபெயரில் அவர் எழுதிய கவிதைகள் அதிகம்..
'ஆண்டவரே ஆண்டாண்டு அலுத்தவரின் பரம்பரைகள்
மீண்டாண்டு ஆண்டு முடிவென்ன கண்டுவிட்டோம்
இரண்டு பெருங்குடும்பம் இலங்கையதை ஆண்டாண்டு
உருண்டு புரண்டெழுந்தும் உழைப்பவர்கள் கண்டதென்ன..?
மாவில்லை சீனிஇல்லை மருந்துக்குக்கூட இங்கு
ஆ ஒரு உள்ளிப்பூடு அரைத்திடக் கிடைப்பதில்லை
அரிசியுமில்லை போடஆடைகள் இல்லை வாய்க்கு
உருசியாய்த் தின்னயேதும் உள்ளதா ஒன்றுமில்லை... ...
-------- ----- -------
பிண்ணாக்கிற் பிட்டவித்து புற்துளிரில் கறிசமைத்து
அண்ணாக்கில் ஒட்டுவதை ஆகாரம் என்றெமது
பச்சைக் குழந்தைகளின் பால்வயிற்றை நிரப்புகின்றோம்
நச்சுப் பொருள்தவிர நாறலையும் தின்னுகின்றோம்
------ ---- ------
தொங்குமணி மாடங்கள் சோலைநிழற் பூமரங்கள்
அங்கம் மினுக்கியுமை அழகுசெய்யும் சாதனங்கள்
தங்கம் வைரநகை சயனிக்கும் இரும்பறைகள்
கங்குல் பகலாக்கிக் கண்சிமிட்டும் மின்விளக்கு
உங்கள் பெருங்கார்கள் உலாவிவரும் நீண்டதெரு
எல்லாம் படைத்துமக்கு எழில்வாழ்வு தந்தவர்கள்
கல்லாய் வெறும்வயிறாய் கண்துயிலல் நீதியெனில்
பொல்லா அந்நீதியினைப் போட்டெரிக்க நாமெழுவோம்..!"
அவரின் இக்கவிதையை அரங்கில் கேட்டவுடன் எனக்குப் பாடமாகிவிட்டது. இதனைப் பல மேடைகளில் யான் குறிப்பிட்டுப் பேசியமை அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்ததுண்டு;.
'ஒரு தோழனின் காதற் கடிதம்" என்ற அவரது கவிதை விமர்சனத்திற்காளாகியதுமுண்டு.
அக்கவிதையில் காதல் ரசம் சொட்ட கருத்துச் சொல்லியிருப்பார்.
'நள்ளிரவில் வந்து நாய்க்குப் பயந்தொதுங்கி
மெல்ல மூலையிலே சந்தித்துன் புறமுதுகு
ஊசி கழற்றுவதற்கோ உண்மையிலே நேரமில்லை
ஏனென்றால் நானோரியக்கத்தில் நாடிநரம்பாகிப் போனேன்.."
- என்றவாறு தொடரும் அவர் கவிதை.
காதல் மணம் புரிந்து, அவரது முதல் மகள் மாலிகா பிறந்து 31 -ம் நாளன்று, குழந்தையைத் தொட்டிலிலிடும் நிகழ்வுக்கு வீட்டிற்கு வருமாறு 'போஸ்கார்ட்”டில் கவிதை மூலம் தோழர்கள் எமக்கு அழைப்பிதழ் அனுப்பியிருந்தார்.
'பெற்றதாய் எதிராய் வந்து
புரட்சியின் போது ஏதும்
குற்றங்கள் செய்தா லெங்கள்
குண்டுகள் அவளின் நெஞ்சைப்
புற்றுகள் ஆக்கும் ஆமாம்
புரட்சியின் போது நாங்கள்
சுற்றமும் துணையும் பாரோம்...
.... ...... ......
- எனத் தொடரும் அவரது அதி தீவிரக் கவிதையும் விமர்சனத்திற்குள்ளாகியது.
1977 -ல் நாட்டில் ஏற்பட்ட பேரினவாத நடவடிக்கையின்போது சிலாபம் முனீஸ்வரன் கோவில் தேர் எரிக்கப்பட்டமை அவரின் மனதில் ஆற்றொணாச் சீற்றத்தை ஏற்படுத்தியதாம். அத்தேர் செய்யும் பணியில் அவர் பங்குபற்றியிருந்தார். அந்தச் சீற்றத்தினால் சிங்கள மக்களையே சபித்துக் கவிதை எழுதியமையும் விமர்சனத்திற்குள்ளாகியது.
அவரது அரசியல் பார்வையிலும்; மாற்றம் ஏற்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களைச் சந்திப்பதைக் குறைத்துக்கொண்டார். டானியலைச் சந்திப்பதையும் தவிர்த்துக்கொண்டார். சிங்கப்பூர் சென்று சில காலம் பணிபுரிந்தார். நாடு திரும்பியபோது என்னைச் சந்தித்துப் பல்வேறு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். பேராசிரியர் கைலாசபதியின்மீது மிகுந்த அபிமானம் அவருக்கிருந்தது. சிங்கப்பூரில் பணிபுரிந்தபோதும் கைலாசபதியுடன் கடிதத் தொடர்பிலிருந்ததாகச் சொன்னார். கைலாசபதி இறந்தபோது மிகுந்த கவலையடைந்தார். அவ்வேளை இரு அஞ்சலிக் கவிதைகளை அவர் எழுதியுள்ளார்.
மூத்த எழுத்தாளர் செ. கணேசலிங்கன் வெளியிட்ட 'குமரன்" சஞ்சிகையில் 'ஆய்வறிவின் தலைமகனை அஞ்சலிப்போம்" என்ற அவரது அஞ்சலிக் கவிதை வெளியாகியது.
'சிம்மாசனம் காலி.. சிற்றரசர் எவருமில்லை
சும்மா அதைவந்து தொடும் தகுதிகூட இல்லை
சிலகாலமல்ல.. சிலவேளை நூற்றாண்டு
பலகாலம் கைலாசபதியின் இடம் வெளியாய்
இருக்கும்இ அதைநிரப்ப எவருமில்லை எவருமில்லை
தொம்சன் முதல் எங்கள் துரையப்பாபிள்ளைவரை
அருணகிரி தொடக்கம் அல்தூசர் வரையாவும்
ஆய்ந்தறிந்து ஆழம் அளவிட்ட மேதையவன்
சாயும்வரை அந்தச் சந்தனக்கை ஓயவில்லை... .."
- எனத் தொடரும் அவரது அஞ்சலிக் கவிதை..!
டொமினிக் ஜீவாவின் 'மல்லிகையிலும்" 'இது வீர வழிபாடல்ல... ஒரு வேதனைப் பாடல்.." என்ற அவரது அஞ்சலிக் கவிதை வெளியாகியது. டானியல் தமிழகத்தில் 1986 -ல் காலமாகியபோது யாழ்ப்பாணத்தில் டானியல் வீட்டிற்குச் சென்று துக்கத்தைப் பகிர்ந்துகொண்டார். டானியலுக்கும் அஞ்சலிக் கவிதையொன்றினை மனமுருகி 'மல்லிகையில்" எழுதியுள்ளார்.
தீவிரத் தமிழ்த் தேசியவாதியாக அவர் மாறியபின் பல பாடல்களை எழுதியும் புகழ்பெற்றார். ஒலிநாடாவில் வெளிவந்த 'களத்தில் கேட்கும் கானங்கள்" பாடல்கள் பலராலும் விரும்பிக் கேட்கப்பட்டதுண்டு. 'வானுயர்ந்த காட்டிடையே நானிருந்து பாடுகிறேன்.." போன்ற பல பாடல்கள்; பலர் மனதை ஈர்த்ததுண்டு;. நல்லூர் முருகனைக் கண் திறந்து பார்க்கும்படி அவர் எழுதிய பாடல்களும் பலரைக் கவர்ந்தது.
வரதபாக்கியான்இ மணிமேகலை, வியாசன், மாலிகா போன்ற புனைபெயர்களிலும் அவர் கவிதைளை எழுதியுள்ளார்.
1990 -ம் ஆண்டு காலப்பகுதியில் சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்ற நேரம், திருமலை முற்றவெளியில் தேனிசைச் செல்லப்பாவின் கச்சேரி நடைபெறவிருந்தது. அவ்வேளை யான் அங்கு ஆளணிப் பயிற்சித் திணைக்களத்தில் பதிப்பாசிரியராகக் கடமையாற்றி வந்தேன்.
செல்லப்பாவின் கச்சேரி நடைபெறுவதற்கான மேடையலங்காரம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. யான் முற்றவெளிக்கு முன்பாக வீதியோரம் மதிலோடு சைக்கிளை வைத்துவிட்டு, நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன்;. மாலை 5 மணியிருக்கும். ஒரு பழைய வெள்ளைநிற 'லான்ட் றோவர்" போன்ற ஒரு வாகனம் வந்து என்னருகில் நின்றது. அதில் இரத்தினதுரை இருந்தார். என்னை அதில் ஏறுமாறு கேட்டார். மேடை அலங்காரத்தைக் கவனிக்கப் போவதாகவும் என்னையும் வருமாறு கூறினார். நான் சைக்கிளில் வருகிறேன் எனக் கூறினேன்.
சைக்கிளில் சென்று மேடைக்குப் பின்னால் சைக்கிளை வைத்துவிட்டு, முன்னால் மேடையைப் பார்த்துக்கொண்டு நின்ற அவர் அருகில் சென்றேன். சில இளைஞர்கள் மேடையை அலங்கரித்துக் கொண்டிருந்தார்கள். இரத்தினதுரையைப் பார்த்ததும் எனக்கு ஆச்சரியமாகவிருந்தது. 'இதென்ன கோலமடாப்பா... .." என்றேன். கவிஞர ; இரத்தினதுரை அவரது இயக்கச் சீருடையில் இருந்தார்.
'இடத்திற்கேற்ற உடைதான்... .. சரி... இன்று இங்க மேடையில பேசுகிறாயா.." எனக் கேட்டார்.
'வேண்டாம்.. நான் அரச வேலையிலிருக்கிறேன்;.." என்றேன்.
'நீங்க இன்னும் சரியாச் சிந்திக்கேல்லை.. உங்களைத் திருத்த ஏலாது.." என்றார்.
'சரி.. பிறகு சந்திப்போம்.." எனக்கூறி நான் சென்றுவிட்டேன்.
அதுதான் இரத்தினதுரையுடனான கடைசிச் சந்திப்பாயிருக்குமென நான் நினைக்கவில்லை.
1991 -ல் யான் பிரான்ஸ் நாட்டிற்கு வந்துவிட்டேன். 2009 இறுதி யுத்தத்தின்போது அவர் காணாமல் போனார் என்ற செய்தி கவலையளித்தது. எழுபதுகளில் அவர் எழுதிய புரட்சிகரக் கவிதைகள், நாட்டின் தொழிலாளி வர்க்கத்தின் எழுச்சிக்கும், தீண்டாமைக் கொடுமைகளுக்கெதிரான போராட்டங்களுக்கும் உந்துசக்தியாயிருந்தன என்று கூறலாம். ஈழத்து இலக்கிய வரலாற்றில் அவர் நாமம், அவரது புரட்சிகரக் கவிதைகளுக்காக அவசியம் பதியப்பட வேண்டியதே..!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.