பி.பி.சி. செய்திகள் (தெற்காசியா) : இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க ஐநா தவறியது; ஐநா ஆய்வு
ஐநா அதிகாரிகளின் தகுதி, அனுபவம் போதவில்லை
இலங்கையில் முன்றரை ஆண்டுக்கு முன் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பொதுமக்களை அழிவிலிருந்து பாதுகாக்க ஐநா மன்றம் மோசமாகத் தவறியுள்ளது என்று ஐநாவுக்குள் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை ஒன்று கூறுகிறது. ஐநாவுக்குள் உள்ளளவில் நடத்தப்பட்ட ஆய்வுடைய அறிக்கையின் வரைவு பிரதி ஒன்று பிபிசியிடம் கசியவிடப்பட்டுள்ளது. தாங்கள் பாதுகாக்க வேண்டிய மக்களை ஐநா கைவிட்டிருந்தது என்று இந்த அறிக்கை முடிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் ஐநா ஆற்றிவந்த பணியின் நோக்கம் யுத்தத்தை தடுப்பது என்பதல்ல, மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்கச்செய்வதுதான் அவர்களுடைய வேலை. ஆனால் இலங்கைத் தலைநகர் கொழும்பில் பணியாற்றிய ஐநா பணியாளர்களுக்கு அவ்வாறான உதவிகளை செய்வதற்கான தகுதிகளோ, அனுபவமோ இல்லை என்பதை இந்த ஆய்வு அறிக்கை விவரிக்கிறது. இலங்கையின் கொடூரமான யுத்தத்தால் எழுந்த சவால்களை இவர்களால் சமாளிக்க முடியவில்லை என்றும், நியுயார்க்கிலுள்ள ஐநா தலைமையகத்திலிருந்து இவர்களுக்கு ஒழுங்கான உதவிகளும் கிடைக்கவில்லை என்றும் இந்த அறிக்கை கூறுகிறது. பயங்கரவாதத்தை நசுக்குவதாக சூளுரைத்துவிட்டு அரசாங்கம் முன்னெடுத்த விஷயங்களை சர்வதேச நாடுகள் பெருமளவில் கண்டும்காணாமல் இருந்துவிட்டனர் என்று இந்த அறிக்கை கூறுகிறது. ஆக கட்டமைப்பு ரீதியாகவே கூட பெரும் தவறுகள் நடந்துள்ளன என்றும், இப்படி ஒன்று எதிர்காலத்தில் நடக்கவே கூடாது என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.