இராசபக்சே அரசோடு இந்தியா கடுமையான அதிருப்தி! அய்க்கிய தேசியக் கட்சி சொல்கிறது!
மார்ச் 5, 2013- சனாதிபதி மகிந்த இராசபக்சே இந்தியாவுடனான உறவு மிகவும் நன்றாக இருக்கிறது என்று சொன்னாலும் உண்மை அதுவல்ல. பல சகாப்தமாக நீடித்து வரும் இனச் சிக்கலைத் தீர்த்து வைக்க மகிந்த இராசபக்சே தவறியுள்ளதால் புது தில்லி அவரோடு கடுமையான அதிருப்தியில் இருக்கிறது. அய்க்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ச அத்தனாயக்கா கொழும்பில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் பேசும் போது இராசபக்சே அரசு அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக இந்தியாவுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்த மறுத்துவிட்டது. அரசிற்குள் செயற்படும் தீவிரவாத சக்திகள் சிறுபான்மை இனத்தவர்களுக்குப் புதிய சிக்கல்களை உருவாக்கியுள்ளன. சனாதிபதி இராசபக்சேயின் கூற்றுப்படி 'சிறீலங்காவில் சிறுபான்மை என்ப்படுபவர் யாரும் இல்லை. அவர்கள் எல்லோரும் சம உரிமை படைத்தவர்கள்’ என்பது வெறும் பசப்புரை ஆகும். போரினால் இடப்பெயர்வுக்கு உட்பட்ட பெரும்பான்மை மக்கள் அவர்களது சொந்த வீடுவாசல்களில் இன்னமும் மீள் குடியமர்த்தப்படவில்லை. அதே சமயம் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சொந்தமான காணிகளை ஒரு குழு அபகரிக்கிறது. அந்தக் குழுவுக்கு அரசின் ஆதரவு இருப்பது வெள்ளிடமலை ஆகும். முஸ்லிம்களும் தங்கள் மதத்தை அனுட்டிப்பதற்காக தொல்லைப் படுத்தப் படுகிறார்கள் என அத்தநாயக்கா குறிப்பிட்டார்.